சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக பாடத் திட்டத்தில் வி.பி.சிங், சென்னையில் சிலையுடன் மணிமண்டபம்..அன்புமணியின் சமூக நீதி கோரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: சமூக நீதிக்காகப் போராடிய முன்னாள் பிரதமர் வி.பி.சிங் வரலாற்றை தமிழ்நாட்டு பாடப் புத்தகத்தில் சேர்க்க வேண்டும்; வி.பி.சிங் வரலாற்றை தமிழகம் அறிந்து கொள்ள அவரது சிலையுடன் சென்னையில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவரும் ராஜ்யசபா எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

வி.பி.சிங். பிறந்த நாளை முன்னிட்டு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவின் சமூகநீதி வரலாற்றில் தவிர்க்க முடியாத தலைவரான சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் 92&ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. சாமானிய மக்களுக்கு சமூகநீதி கிடைப்பதை உறுதி செய்வதற்காக எதையும் இழப்பேன் என்று முழங்கிய வி.பி.சிங் அவர்களின் பிறந்தநாளில் அவரது சமூகநீதி சாதனைகளை நினைவு கூர்வதிலும், அவரை போற்றுவதிலும் பெருமை கொள்கிறேன்.

வி.பி.சிங் பிறந்த நாள்- ஒடுக்கப்பட்டோரின் நன்றிகடனான ஒருசேர நினைவுகூரும் ஸ்டாலின், திருமா, அன்புமணி!வி.பி.சிங் பிறந்த நாள்- ஒடுக்கப்பட்டோரின் நன்றிகடனான ஒருசேர நினைவுகூரும் ஸ்டாலின், திருமா, அன்புமணி!

ஏன் சமூக நீதி காவலர்?

ஏன் சமூக நீதி காவலர்?

இந்தியாவில் பட்டியலின, பழங்குடியின மக்களைத் தவிர்த்து சமூக அடிப்படையிலும், கல்வி ரீதியாகவும் பின்தங்கிய பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உள்ளனர்; அவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன், அதற்கான சட்டப்பிரிவுகளை இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் சேர்த்தவர் அண்ணல் அம்பேத்கர். அவர் கண்ட கனவை நிறைவேற்றி முடித்தவர் வி.பி.சிங் அவர்கள் தான். அதனால் தான் அவர் சமூகநீதிக் காவலர் எனப் போற்றப்படுகிறார்.

வி.பி.சிங் தந்த 27% இடஒதுக்கீடு

வி.பி.சிங் தந்த 27% இடஒதுக்கீடு

இந்தியாவில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் 1950-ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட உடனேயே தொடங்கப்பட வேண்டும் என்பது தான் அம்பேத்கரின் விருப்பம். ஆனால், தேசிய அளவில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு சாத்தியமானது 1990-ஆவது ஆண்டில் தான். வி.பி.சிங் மட்டும் இல்லையென்றால் அதுவும் கூட சாத்தியமாகியிருக்காது. சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் அரசியல் துணிச்சலும், சமூகநீதியில் கொண்டிருந்த அக்கறையும் தான் இடஒதுக்கீட்டை சாத்தியமாக்கின.

இணையற்ற தலைவராக வி.பி.சிங்

இணையற்ற தலைவராக வி.பி.சிங்

இந்தியாவின் சமூகநீதிச் சூழல் இன்றும் கூட செழுமையானதாக இல்லை. 30 ஆண்டுகளுக்கு முன் சமூகநீதி குறித்து தேசிய அளவில் பேசுவதே பாவமாக கருதப்பட்டது. தென் மாநிலங்கள் சமூகநீதிக்கு சாதகமானவையாக திகழ்ந்தன என்றால், வட மாநிலங்களில் நிலைமை அதற்கு நேர் எதிராக இருந்தது. வட மாநிலங்களில் தேர்தல் வெற்றி வாய்ப்பை தீர்மானிப்பவர்கள் உயர்வகுப்பினராகத் தான் இருந்தனர்; அவர்கள் கைகாட்டுபவர்களுக்கு வாக்களிக்கும் அவல நிலையில் தான் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இருந்தனர். அதனால் தான் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்த காகா கலேல்கர் ஆணையத்தின் அறிக்கை நிராகரிக்கப்பட்டது; மண்டல் ஆணைய அறிக்கை 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. இத்தனை தடைகளையும் தகர்த்து மண்டல் ஆணையத்தின் பரிந்துரையின் ஒரு பகுதியை ஏற்று மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கியதால் தான், இந்தியாவின் சமூகநீதி வரலாற்றில் வி.பி.சிங் இணையற்ற தலைவராக உயர்ந்து நிற்கிறார்.

வி.பி.சிங் போராட்டம்

வி.பி.சிங் போராட்டம்

மத்திய அரசு வேலைவாய்ப்பில் 27% இட ஒதுக்கீட்டை வி.பி.சிங் நடைமுறைப்படுத்தியதால் தான், பின்னாளில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் முயற்சியால் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அந்த இட ஒதுக்கீட்டை நீட்டிக்க முடிந்தது. பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளின் சட்டப்போராட்டத்தால் மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பிலும் 27% இட ஒதுக்கீடு சாத்தியமானதற்கு வி.பி.சிங் அமைத்துக் கொடுத்த அடித்தளம் தான் காரணம். வி.பி.சிங் மட்டும் மண்டல் ஆணைய அறிக்கையை செயல்படுத்தியிருக்காவிட்டால், இன்று வரை பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தேசிய அளவில் இட ஒதுக்கீடு கிடைத்திருக்க வாய்ப்பில்லை. மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் 27% இட ஒதுக்கீடு வழங்கி ஆணை பிறப்பித்ததுடன் வி.பி. சிங் ஓய்ந்து விடவில்லை. அது செயல்படுத்தப்படுவதற்காகவும் போராடினார்.

பாடத்தில் சேர்த்து மணி மண்டபம்

பாடத்தில் சேர்த்து மணி மண்டபம்

27% இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் அதை நரசிம்மராவ் அரசு செயல்படுத்த தாமதித்ததால், இட ஒதுக்கீடு செயலாக்கப்படும் வரை தில்லிக்குள் நுழைய மாட்டேன் என்று கூறி தலைநகரை விட்டு வி.பி.சிங் வெளியேறினார். அவரது இந்த போராட்டத்தால் அடுத்த ஒரு மாதத்திற்குள்ளாக 27% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டது. வி.பி.சிங் மட்டும் 27% இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்தாமல் இருந்திருந்தால், உயர்வகுப்பு மக்களின் முழுமையான ஆதரவுடன் அடுத்து வந்த தேர்தல்களிலும் வெற்றி பெற்றி பிரதமராக தொடர்ந்திருக்கலாம். ஆனால், ஆட்சிக் கணக்கைப் போடாமல், சமூகநீதிக் கணக்கை போட்டதால் தான் அவர் சமூகநீதிக் காவலராக போற்றப்படுகிறார். சமூகநீதியை நிலை நிறுத்துவதற்காக போராடிய வி.பி.சிங் அவர்களின் வரலாற்றை இன்றைய தலைமுறை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். அதற்கு வசதியாக அவரது வரலாறு தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் பாடமாக சேர்க்கப்பட வேண்டும். அத்துடன் சென்னையில் வி.பி.சிங் அவர்களுக்கு முழு உருவச் சிலையுடன் கூடிய பிரமாண்ட மணிமண்டபமும் அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

English summary
PMK President Anbumni Ramadoss has demanded that Tamilnadu Govt should built on Memorial for Ex PM VP Singh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X