சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புழுதிக் காடான சென்னை.. பெரும் பாதிப்பு ஏற்படும் - எச்சரிக்கும் அன்புமணி ராமதாஸ்

Google Oneindia Tamil News

சென்னை: மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் மழைநீர் வடிகால் கட்டுமானப் பணிகளால் வரலாறு காணாத புழுதி உருவாகி சென்னை மக்களை கடுமையாக பாதித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்தாதது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளது.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை, "சென்னை மாநகரில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் மழைநீர் வடிகால் கட்டுமானப் பணிகளால் வரலாறு காணாத புழுதி உருவாகி சென்னை மக்களை கடுமையாக பாதித்து வருகிறது. புழுதியையும், அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளையும் கட்டுப்படுத்துவது இந்த வளர்ச்சித் திட்டங்களின் ஓர் அங்கமாக சேர்க்கப்பட்டிருக்கும் போதிலும், அது பின்பற்றப்படாதது கண்டிக்கத்தக்கது.

சென்னையில் மாதவரம் - சிப்காட், மாதவரம் - சோழிங்கநல்லூர், கலங்கரை விளக்கம் & பூவிருந்தவல்லி என மூன்று வழித்தடங்களில் 121 கிமீ தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகளும், சென்னையில் 6 திட்டங்களின்படி மொத்தம் 125 கி.மீ தொலைவுக்கு வெள்ளநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகளும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் நடைபெறும் பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் தொடர்ச்சியாக கடந்து செல்பவர்களின் எண்ணிக்கை சென்னையின் மொத்த மக்கள்தொகையில் 75% ஆகும். ஒட்டு மொத்த சென்னை மாநகர மக்களுமே வாரத்திற்கு ஒருமுறையாவது இந்த பணி நடைபெறும் பகுதிகளை கடந்து செல்கின்றனர். அவ்வாறு இருக்கும் போது இந்த பணிகள் நடைபெறும் பகுதிகளில் அனைத்து வகை பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டியது கட்டாயம்.

ஆவின் தயிர் -நெய் விலை உயர்வு! முதல் எதிர்ப்பை பதிவு செய்த பாமக! விலையை குறைக்க அன்புமணி புது யோசனை!ஆவின் தயிர் -நெய் விலை உயர்வு! முதல் எதிர்ப்பை பதிவு செய்த பாமக! விலையை குறைக்க அன்புமணி புது யோசனை!

புழுதி பிரச்சனை

புழுதி பிரச்சனை

ஆனால், களத்தில் அத்தகைய ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. மெட்ரோ ரயில் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் துளையிடும் போதும், பள்ளம் தோண்டும் போதும் எதிரில் இருப்பவர்கள் தெரியாத அளவுக்கு புழுதி எழுகிறது; வாகனங்கள் செல்லும் போதும், ஆடி மாதமாகிய இப்போது வேகமாக காற்று வீசும் போதும் புழுதி பறக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், அலுவலகம் செல்வோர், அப்பகுதிகளில் வாழும் பொதுமக்கள் என அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். சாலைப் புழுதியால் கண் எரிச்சல், மூக்கு மற்றும் தொண்டை எரிச்சல் ஏற்படுகிறது. குழந்தைகள், கருவுற்ற பெண்கள், வயதானோர் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். இதயம், நுரையீரல் நோய்களால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதுமட்டுமின்றி, சாலையோரத்தில் குவிக்கப்படும் மண்ணால் காற்று மாசுவும், விபத்துகளும் ஏற்படுகின்றன.

காற்று மாசு

காற்று மாசு

புழுதியும், அதனால் ஏற்படும் காற்று மாசுவும் எளிதில் கடந்து போகக்கூடிய விஷயங்கள் அல்ல. காற்று மாசு ஓர் உயிர்க்கொல்லி. இதனால் ஆண்டுதோறும் உலகளவில் 70 இலட்சம் பேரும், இந்தியாவில் 17 இலட்சம் பேரும், சென்னையில் 11,000 பேரும் உயிரிழக்கின்றனர். காற்று மாசுபாட்டால் சென்னை மாநகரில் ஏற்படும் பொருளாதார இழப்பு ஆண்டுக்கு ரூ. 11,000 கோடி. காற்று மாசுபாட்டிற்கு இரண்டாவது முக்கியக் காரணம் புழுதி மாசு ஆகும். சென்னையின் மாசுபாட்டில் புழுதியின் பங்கு 23.5% ஆகும்.

கட்டுப்படுத்துவது கட்டாயம்

கட்டுப்படுத்துவது கட்டாயம்

இதையெல்லாம் கட்டுப்படுத்துவது எப்படி சாத்தியம்? என்பது தான் மக்களின் பொதுபுத்தியாக உள்ளது. இந்த மனநிலை காரணமாகவே இந்த சீர்கேடுகளை தட்டிக்கேட்கும் எண்ணம் யாருக்கும் ஏற்படுவதில்லை. ஆனால், இந்திய அரசின் கட்டுமானம் மற்றும் இடிபாடுகள் கழிவு மேலாண்மை விதிகள் 2016, இந்திய சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) திருத்த விதிகள் 2018 (Construction and Demolition Waste Management Rules 2016 & Environment (Protection) Amendment Rules 2018) ஆகியவற்றின்படி இவற்றை கட்டுப்படுத்த வேண்டியது கட்டாயமாகும். கட்டிட இடிபாடுகள், மண், மணல் உள்ளிட தூசு கிளம்பக்கூடிய எதையும் திறந்த வெளியில் வைத்திருப்பதை சட்டவிதிகள் தடை செய்கின்றன. தடுப்புகளை அமைத்தல், தண்ணீர் தெளித்தல், மூடி வைத்தல் உள்ளிட்டவற்றின் மூலம் புழுதி பறப்பதை தடுப்பது ஒப்பந்ததாரர்களின் பணி.

 நிதி ஒதுக்க வேண்டும்

நிதி ஒதுக்க வேண்டும்

இந்தப் பணிகளை ஒப்பந்தக்காரர்கள் இலவசமாக செய்யத் தேவையில்லை. அதற்காக திட்ட மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக சென்னை கலங்கரை விளக்கம் & பூவிருந்தவல்லி இடையிலான மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் திட்டத்தில் மட்டும் இத்திட்டப் பணிகளுக்காக ரூ.22.79 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், நான் அறிந்தவரை இந்தப் பணிகள் எங்குமே நடப்பதாக தெரியவில்லை.

மாசு அதிகரிப்பு

மாசு அதிகரிப்பு

சென்னை ஏற்கனவே காற்று மாசு அதிகம் உள்ள மாநகரங்களில் ஒன்றாக உள்ளது. அதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்திய அரசின் நிதியுதவியுடன் கூடிய தேசியத் தூய காற்றுத் திட்டத்தில் சென்னை மாநகரம் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், இப்போது நடைபெற்று வரும் பணிகள் சென்னையின் காற்று மாசுவை குறைப்பதற்கு பதிலாக அதிகரித்து வருகின்றன. இது கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

வேடிக்கை பார்க்கக்கூடாது

வேடிக்கை பார்க்கக்கூடாது

சென்னை புழுதிக்காடாக மாறுவதை சென்னை மாநகராட்சியும், தமிழ்நாடு அரசும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. கட்டுமானம் மற்றும் இடிபாடுகள் கழிவு மேலாண்மை விதிகள், இந்திய சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) திருத்த விதிகள், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்ட உடன்படிக்கை ஆகியவற்றின்படி சென்னை மெட்ரோ ரயில் பணிகள், மழைநீர் வடிகால் பணிகள் ஆகியவற்றில் புழுதி பறப்பதையும், சாலைகளில் மண் கொட்டப்படுவதையும் தடுத்து நிறுத்த தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பான விதிகளை மதிக்காத ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் காற்று மாசு பாதிப்புகளில் இருந்து சென்னை மக்களை ஓரளவாவது பாதுகாக்க வேண்டும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

English summary
PMK leader Anbumani Ramadass warned about dust pollution in chennai: மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் மழைநீர் வடிகால் கட்டுமானப் பணிகளால் வரலாறு காணாத புழுதி உருவாகி சென்னை மக்களை கடுமையாக பாதித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்தாதது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X