சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தொடக்கக்கல்வி தரத்தில் பின்தங்கியுள்ளது தமிழகம்.. "கட்டமைப்பை வலுப்படுத்துக" - ராமதாஸ் வலியுறுத்தல்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வியின் தரம் மிகவும் பின்தங்கியுள்ளதாக கூறியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், இதை சரிப்படுத்தும் வகையில் அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில் 3- வகுப்பு மாணவர்களில் 20 விழுக்காட்டினரால் தான் தமிழ் சொற்களை புரிந்து கொள்ள முடிகிறது. 23 விழுக்காட்டினரால் தான் அடிப்படை கணிதத்தை மேற்கொள்ள முடிகிறது என ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது. தமிழக மாணவர்களின் கற்றல் குறைபாடு நீண்டகாலமாக நீடிக்கும் பிரச்சினை தான் என்றாலும், அதை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படாதது கவலையளிக்கிறது.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் நடத்திய 'அடிப்படை கற்றல்' குறித்த ஆய்வில் இந்த தகவல்கள் தெரியவந்துள்ளன.

 பின்தங்கியுள்ள தமிழகம்

பின்தங்கியுள்ள தமிழகம்

இந்த ஆய்வுக்காக நாடு முழுவதும் 86 ஆயிரம் மாணவர்களின் கற்றல் திறன் சோதிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் 336 பள்ளிகளைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு பயிலும் 2,937 மாணவர்களிடம் தமிழ் மற்றும் கணிதப் பாடங்களில் இருந்து வினாக்கள் எழுப்பப்பட்டன. அதில், 20% மாணவர்களால் தான் தமிழை புரிந்து கொள்ள முடிகிறது. சுமார் 50% மாணவர்களால் தமிழை பிழையில்லாமல் படிக்கக் கூட முடியவில்லை என்று தெரியவந்துள்ளது. கேரளா, கர்நாடகாவில் 44% மாணவர்களாலும், ஆந்திரம் மற்றும் தெலுங்கானாவில் 45% மாணவர்களாலும் தாய்மொழியை நன்றாக புரிந்து கொள்ளவும், படிக்கவும் முடியும் நிலையில், தமிழக மாணவர்கள் தான் இதில் மிகவும் பின்தங்கியுள்ளனர்.

"நாள் - கிழமை கூட தெரியவில்லை"

தமிழகத்தில் மூன்றாம் வகுப்பு மாணவர்களில் 52 விழுக்காட்டினருக்கு நாள்காட்டியில் (காலண்டர்) நாள், கிழமை, மாதம் ஆகியவற்றைக் கூட அடையாளம் காண முடியவில்லை என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. கணிதத் திறனிலும் பிற தென் மாநிலங்கள், தமிழ்நாட்டை விட உயர்ந்த நிலையில் இருக்கின்றன. தமிழக மாணவர்களின் கற்றல் திறன் இப்போது திடீரென குறைந்துவிடவில்லை. பல ஆண்டுகளாகவே இந்த நிலைதான் தொடர்கிறது. கல்வி கற்பிப்பதன் நோக்கம் கற்றல் திறன் குறைவாக இருப்பவர்களையும் கல்வியில் சிறந்தவர்களாக முன்னேற்றுவது தான். ஆனால், அந்த அதிசயம் பெரும்பாலான காலங்களில் நடைபெறுவதில்லை என்பது தான் வேதனையான உண்மை.

"ஆசிரியர்கள் பற்றாக்குறையும் காரணம்"

இதற்கான முதன்மைக் காரணம் கற்றல் கட்டமைப்பு வலிமையாக இல்லாததும், ஆசிரியர்கள் பற்றாக்குறையும் தான். அண்மையில் தமிழக அரசின் தொடக்கக்கல்வித்துறை வெளியிட்ட புள்ளிவிவர அறிக்கை ஒன்றின்படி, 3,800 தொடக்கப்பள்ளிகளில் 5 வகுப்புகளைக் கையாள்வதற்கு தலா ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளனர். மீதமுள்ள 25,618 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சராசரியாக ஒரு பள்ளிக்கு 2 முதல் 5 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். 8-ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு 2 முதல் 3 ஆசிரியர்களை மட்டும் வைத்துக் கொண்டு தரமான கல்வியை எவ்வாறு வழங்க முடியும்?

"கட்டமைப்பை வலுப்படுத்துங்கள்"

மாணவர்களின் கற்றல் திறனை ஊக்குவிக்க தமிழக அரசின் சார்பில் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், அவை மட்டுமே போதாது. அரசு பள்ளிகளின் கட்டமைப்பை வலுப்படுத்துவதன் மூலமே மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த முடியும். அதைக் கருத்தில் கொண்டு, பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது மட்டுமின்றி, வகுப்புக்கு ஓர் ஆசிரியர் வீதம் நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டமைப்பு மேம்பாடு மற்றும் ஆசிரியர்கள் நியமனத்தை ஓர் இயக்கமாக கருதி மேற்கொள்ள தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். இவ்வாறு தனது அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.

English summary
PMK founder Ramadoss said that the quality of primary education in Tamil Nadu is very backward and has emphasized that the structure of government schools should be strengthened to correct this.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X