"அன்று நாகாலாந்து, இன்று தமிழ்நாடு" ஆளுநர் ரவிக்கு கண்டனம்.. ராஜ்பவனை முற்றுகையிட்ட திருமாவளவன் கைது
சென்னை: சட்டசபையில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகளை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
சட்டசபையில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றிய போது, சில வார்த்தைகளை சேர்த்தும் சில வாக்கியங்களை விடுத்தும் வாசித்தார். அதுமட்டுமல்லாமல் தேசிய கீதம் பாடுவதற்கு முன்னதாக சட்டசபையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்தார்.
இதற்கு திமுக, விசிக, கம்யூனிஸ்ட், மதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து சட்டசபையில் ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பாடுகளை கண்டித்து aஅளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் ஜன.13ம் (இன்று) தேதி நடைபெறும் என்று விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்தார்.

திருமாவளவன் அறிக்கை
இதனைத் தொடர்ந்து திருவாளவன் வெளியிட்ட அறிக்கையில், ஆளுநர் பதவியே தேவையில்லை என்பதே எமது நிலைப்பாடு. எனினும், தற்போதைய ஆளுநர் அப்பதவியில் நீடிப்பதற்கான தார்மீகத் தகுதியை இழந்திருப்பதால் பதவி விலக வலியுறுத்துகிறோம். சட்டப்பேரவை மரபுகளை மீறியிருப்பதன்மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும் அவமதித்துள்ளார்.

திருமாவளவன் அழைப்பு
அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த சதித் திட்டம் தீட்டியிருப்பதாக தனது நடவடிக்கைகளின் மூலம் உணர்த்துகிறார். எனவே, அவரைப்பதவி விலக வலியுறுத்தி இன்று சென்னையில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெறவுள்ளது. இந்த அறப்போராட்டம் வெற்றிகரமாக அமைந்திட வேண்டும். தமிழகம் தழுவிய அளவில் பொறுப்பாளர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டுமென அழைக்கிறேன். களத்தில் சந்திப்போம் என்று அழைப்பு விடுத்தார்.

விசிக முற்றுகை
இந்த நிலையில் திருமாவளவன் அழைப்பை ஏற்று ஆயிரக்கணக்கானோர் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் கலந்துகொண்டனர். இன்று காலை திருமாவளவன் தலைமையில் தொடங்கிய போராட்டத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தீவிர கோஷங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்த முற்றுகை போராட்டத்தில் விசிக, இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கலந்துகொண்டனர்.

நாகாலாந்து போராட்டம்
இந்த போராட்டத்தில் திருமாவளவன் பேசுகையில், ஆளுநரின் போக்கை ஜனநாயக சக்திகள் கண்டித்து வருகின்றனர். சட்டசபையில் நடந்து கொண்டது மட்டுமல்ல, ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்ட நாளில் இருந்து பிரச்சினை தான். ஆளுநரால் தமிழ்நாட்டில் அரசியல் குழப்பம் வரும் என்று தொடக்கம் முதலே விசிக எச்சரித்து வந்தது. ஆர்.என்.ரவிக்கு எதிராக நாகாலாந்து மக்கள் எப்படி போராடினார்களோ, அதேபோல் இன்று அதே ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாட்டில் போராடி வருகிறோம். அவருக்கும் விசிகவுக்கும் தனிப்பட்ட பிரச்சினை இல்லை.

ஆர்எஸ்எஸ் சிந்தனை
ஆளுநர் ஆர்.என்.ரவி தீவிரமான ஆர்எஸ்எஸ் சிந்தனை கொண்டவர். ஆளுநர் ஆர்.என்.ரவி வடிக்கட்டிய சனாதனி. அவர் வந்த நாள் முதல், பொது நிகழ்ச்சிகளில் சனாதனம் பற்றி மட்டுமே பேசி வருகிறார். ஒவ்வொரு பேச்சிலும் சனாதனம் தர்மம் பற்றியே பேசுகிறார். தெற்கில் இருந்து சனாதனம் தோன்றியது என்று திரிபுவாதம் பேசி வருகிறார். அதுமட்டுமல்லாமல், ஆளுங்கட்சியான திமுகவோடு நேரடியாக மோதும் நிலைப்பாட்டையும் தமிழ்நாடு விவகாரம் மூலம் எடுத்துள்ளார்.

கொள்கை சிக்கல்
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசால் உருவாக்கப்படும் அமைச்சரவை எடுக்கும் முடிவை நடைமுறைப்படுத்துகிற பொறுப்பாளர் தான் ஆளுநர். ஆளுநர்களுக்கு என்று தனி அதிகாரம் கிடையாது. விருப்பப்படி இயங்க முடியாது. பாஜக ஆட்சியில் ஆளுநர்கள் கொள்கை சிக்கல் அடிப்படையில் முரண்படுகிறார்கள். இது ஆபத்தானது. நிர்வாக ரீதியாக சிக்கல் வந்தால், அவர்களுக்குள் பேசி தீர்க்கலாம். ஆனால் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் அரசியல் சமூகநீதி கொள்கைகளுக்கு எதிரானது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications