ரெடியா இருங்க.. அடுத்த வாரம் சென்னையை புரட்டிப் போடப் போகும் கனமழை? வானிலை மையத்தின் முக்கிய அப்டேட்
சென்னை : 8ஆம் தேதியில் இருந்து 10ஆம் தேதி வரை வட மாவட்டங்களில் மீண்டும் மழைப்பொழிவை எதிர்பார்க்கலாம் எனவும், காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து வட தமிழகத்தை நோக்கி வரக்கூடும் என்பதால் அடுத்த வாரத்தில் வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த வாரம் பல மாவட்டங்களில் விடாமல் மழை கொட்டியது. 21ஆம் தேதி முதல் படிபடியாக மழை குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறிய நிலையில் அது போலவே மழை குறைந்தது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை குறைந்து. சில மாவட்டங்களில் வழக்கமான மழை கூட பெய்யவில்லை.

மழை அளவு
கடந்த அக்டோபர் மாதம் இறுதிப் பகுதியிலேயே வடகிழக்கு பருவமழை தொடங்கினாலும் திண்டுக்கல் தேனி ராமநாதபுரம் சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் வழக்கமாக பெய்யும் மழை அளவு கூட பெய்யவில்லை. பெரும்பாலான மாவட்டங்களில் சராசரி அளவைவிட அதிகமாக மழை பெய்தது. ஆனால் சில மாவட்டங்களில் இயல்பு அளவை கூட பருவமழை பெய்யவில்லை. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், உள்ளிட்ட வட மாவட்டங்களில் இயல்பை விட மழை பெய்ததால் ஆறு குளம் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பின.

காற்றழுத்து தாழ்வு
ஆனால் தென் மாவட்டங்களில் அதற்கு நேர்மாறாக பல குளங்கள் இன்னும் வற்றியே இருக்கிறது. கடந்த மாதத்தில் வங்க கடலின் தென்மேற்கு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்து தாழ்வு பகுதி வலுவாகி வட தமிழகத்தில் கனமழை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது வலுவிழந்தது இதனால் எதிர்பார்த்த மழை அளவு கிடைக்கவில்லை.

வானிலை ஆய்வு மையம்
இந்த நிலையில் தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் வருகின்ற ஐந்தாம் தேதி அதாவது நாளை புதிய காற்றழுத்து தாழ்வு பகுதி உருவாகும் அதற்கு அடுத்த 48 மணி நேரத்தில் அது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்து தாழ்வு மண்டலமாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது.

வடதமிழகத்தில் மழை
இந்த காற்றழுத்து தாழ்வு மண்டலம் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து வருகின்ற எட்டாம் தேதி வட தமிழகம் புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளில் நிலவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து வடதமிழகத்தை நோக்கி வர கூடும் என்பதால் அடுத்த வார இறுதியில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது எனவும் எட்டாம் தேதியில் இருந்து பத்தாம் தேதி வரை இந்த மாவட்டங்களில் மீண்டும் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

புயலாக மாறுமா?
இந்தக் காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக மாறி புயலாக மாறுமா அல்லது தாழ்வு மண்டலமாகவே கனமழை தருமா என்பது இன்னும் சில நாட்களில் தெரியும் எனவும், நாளை மற்றும் நாளை மறுநாள் அந்தமான் கடல் பகுதிகளில் ஐந்தாம் தேதி மற்றும் ஆறாம் தேதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications
