"உறுப்பினரே இல்லை.. ஒன்னும் பண்ண முடியாது".. சசிகலா ஆடியோ பற்றி உடைத்து பேசிய இபிஎஸ்.. பொளேர் பதிலடி
சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் சிலருடன் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை கூட்டம் நடத்திய நிலையில் சசிகலாவின் ஆடியோ விவாகரம் குறித்து பேசி இருக்கிறார். சசிகலா அதிமுக உறுப்பினர் கிடையாது என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
அதிமுகவை எப்படியாவது கைப்பற்றும் முடிவில் சசிகலா இருக்கிறார். கட்சிக்குள் ஏற்பட்டு இருக்கும் பிளவை பயன்படுத்தி, மீண்டும் கட்சியை கட்டுப்படுத்தும் முடிவில் இருக்கிறார்.
இதற்காக அதிமுக உறுப்பினர்கள் பலருடன் சசிகலா போனில் பேசி வருகிறார். சசிகலா இப்படி போனில் பேசும் ஆடியோக்கள் வெளியாகி வருகிறது. மீண்டும் அதிமுகவிற்குள் வருவதை அதிரடியாக சசிகலா அறிவிப்பது போல இந்த ஆடியோ அமைந்துள்ளது.

ஆடியோ
நான் இருக்கிறேன், நான் பார்த்துப்பேன், கொரோனா முடிஞ்சதும் கட்சியை மீட்டு விடுவேன் என்று சசிகலா இந்த ஆடியோக்களில் பேசி இருக்கிறார். அதிமுக நிர்வாகிகள் சிலரிடமும், அமமுக நிர்வாகிகள் சிலரிடமும் இப்படி பேசி இருக்கிறார். இதில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கேபி முனிசாமி ஆகியோருக்கு எதிராகவும் சசிகலா பேசி உள்ளார். இந்த நிலையில்தான் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் சிலருடன் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனை
9 மாவட்ட செயலாளர்கள் இந்த மீட்டிங்கில் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு விஷயங்கள் குறித்து இபிஎஸ் ஆலோசனை செய்து இருக்கிறார். முக்கியமாக ஓபிஎஸ் தனியாக அறிக்கை விடுவது. சில எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் தரப்பிற்கு ஆதரவு தருவது. சசிகலாவின் ஆடியோக்கள் தொடர்ச்சியாக வெளியாவது என்று பல விஷயங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி இதில் ஆலோசனை செய்து இருக்கிறார்.

பேட்டி
இந்த ஆலோசனைக்கு பின் பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி, வி. கே. சசிகலா அஇஅதிமுக உறுப்பினர் இல்லை. அரசியலில் இருந்து விலகியதாக ஊடகங்கள் மூலம் சசிகலா அறிவிப்பு வெளியிட்டார். சசிகலா அமமுக கட்சி தொண்டர்களுடன் பேசிய ஆடியோதான் வெளியானது. அவர் அரசியலிலேயே இல்லை.

அரசியல்
அஇஅதிமுக தொண்டர்களுடன் சசிகலா பேசவில்லை. சசிகலா பேசியதை வைத்து அதிமுக-வில் குழப்பம் ஏற்படுத்த முடியாது. அவர் பேசிய யாரும் அதிமுகவில் இப்போது இல்லை. அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் உடன் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. வீடு மாறுவதால் ஓபிஎஸ் இன்று நடந்த மீட்டிங்கிற்கு வரவில்லை.

மீட்டிங்
அதிமுகவில் எப்படியாவது காம்பேக் கொடுக்கலாம் என்றுர் சசிகலா வரிசையாக பேசி வருகிறார். இதற்கான ஆடியோவும் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் அனைத்து ஆடியோவிற்கும் பதில் அளிக்கும் விதமாக ஒரேயடியாக சசிகலா அதிமுக உறுப்பினர் கிடையாது என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications