5 அர்ச்சகர்கள் மரணம்- தமிழ்நாடு சட்டசபையில் இரங்கல்! ரூ10 லட்சம் வழங்க எடப்பாடி பழனிசாமி கோரிக்கை!
சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டில் கோவில் குளத்தில் மூழ்கி 5 அர்ச்சகர்கள் மரணம் அடைந்த சம்பவத்துக்கு தமிழ்நாடு சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அர்ச்சகர்கள் குடும்பத்துக்கு ரூ10 லட்சம் நிவாரணம் வழங்க வலியுறுத்தினார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
சென்னை நங்கநல்லூர் சர்வ மங்கள தேவி சமேத தர்மலிங்கேஸ்வரர் கோயில் தீர்த்தவாரி நேற்று நடைபெற்றது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு மூவரசம்பட்டு குளத்தில் இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. தீர்த்தவாரி சடங்குகள் முடிவடைந்த நிலையில் சாமி சிலையுடன் 20 கோவில் அர்ச்சகர்கள் குளத்தில் இறங்கினர்.

அப்போதுச் சாமி சிலையை நீராட்டிக் கொண்டிருந்த போது ராகவன் என்ற அர்ச்சகர் முதலில் நீரில் மூழ்கிக் கொண்டிருந்தார். இதனைக் கண்டு பதறிய இதர அர்ச்சகர்கள், ராகவனை மீட்க முயற்சித்தனர். ஆனால் மீட்க சென்ற அர்ச்சகர்களும் அடுத்தடுத்து நீரில் மூழ்கி இறந்தனர். மொத்தம் 5 அர்ச்சகர்கள் கோவில் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த 5 பேருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், 5 பேர் குடும்பத்துக்கு தலா ரூ2 லட்சம் நிவாரண தொகை வழங்குவதாக அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டசபை இன்று தொடங்கிய உடன் மூவரசம்பட்டில் கோவில் தீர்த்தவாரியின் போது 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி மரணம் அடைந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சட்டசபை உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடம் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.

இதன் பின்னர் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, 5 அர்ச்சகர்கள் மரணம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீது பேசிய எடப்பாடி பழனிசாமி, கோவில் குளங்களை தமிழ்நாடு அரசு தூர்வார வேண்டும். மூவரசம்பட்டு சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ10 லட்சம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கோவில் குளம் பஞ்சாயத்தால் நிர்வகிக்கப்பட்டது. கோவில் குளத்தில் தீர்த்தவாரி நடைபெறுவது குறித்து இந்து சமய அறநிலையத்துறைக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை. உயிரிழந்த அர்ச்சகர்களின் குடும்பங்கள் கேட்கும் நிவாரணங்களை தமிழ்நாடு அரசு செய்து தர தயாராக இருக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications