Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆளுநர் ரவி பேச்சால் சர்ச்சை- 'தமிழ்நாடு' வேண்டாம்- தமிழகம் போதுமாம்-. திராவிட கட்சிகளால் ஏமாற்றமாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு என சொல்வதற்கு பதில் தமிழகம் என குறிப்பிட்டால் போதுமாம்; 50 ஆண்டுகளாக திராவிட கட்சிகளால் தமிழக மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. பேசியிருப்பது சர்ச்சையாகி இருக்கிறது.

நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சி நடத்தப்பட்டது. உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் மத்திய அர்சு சார்பாக சுமார் 1 மாதம் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் காசிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை சிறப்பிக்கும் நிகழ்வு சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில் தன்னார்வலர்களை ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டினார்.

Tamil Nadu Governor RN Ravi controversial speech on Tamil Nadu, Dravidian

இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி பேசியதாவது: பிரதமர் மோடியின் சிந்ட்தனையால் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதுவும் மிக குறுகிய காலத்தில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. காசி தமிழ் சங்கமம் என்பது ஒரு வரலாற்று நிகழ்வு.

விடுதலைப் போராட்டத்தின் தொடக்கத்தில் பல்வேறு பிரிவினைகள் நம்மிடையே இருந்தன. இப்போது நமது நாடு ஒரே பாரதம். இதில் அனைவரும் அங்கம். பாரதம் என்பது ரிஷிகள், ஆன்மீக இலக்கியங்களால் உருவாக்கப்பட்டது. ஆனால் பாரதம் குறித்த் யாரும் பேசுவது இல்லை.

நமது பாரத தேசத்தை பிளவுபடுத்த, அழிப்பதற்கு ஆங்கிலேயர்கள் முயற்சித்தனர். ஆங்கிலேயரின் கல்வி திட்டத்தின் கீழ் படித்தவர்கள் இன்றளவும் உயர் பதவிகளில் உள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சியில்தான் இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் பலர் கல்வியை கற்றிருக்கவே முடியாது. இந்தியாவிலேயே தமிழகத்தில் வித்தியாசமான அரசியல் சூழ்நிலை உள்ளது. தமிழகத்தில் தவறான, எதிர்மறையான அரசியல் அணுகுமுறைகள் இருக்கின்றன. இது ஒழிக்கப்பட வேண்டும்.

இந்தியா என்பது ஒரே நாடு. ஆனால் சிலர் அமெரிக்காவை போல பல தேசங்கள் இணைந்த நாடாக கருதுகின்றனர். அது தவறு. தமிழர்கள் தங்களை திராவிடர்களாக உணருகின்றனர். தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும். திராவிட ஆட்சியில் 50 ஆண்டுகளாக மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.

ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த பேச்சை திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலு கடுமையாக கண்டித்துள்ளார். இது தொடர்பாக டிஆர் பாலு இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் பிரிவினையையும், மோதல்களையும், குழப்பத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் உள்ளே நுழைந்து நாள்தோறும் சர்ச்சைக்குரிய கருத்துகளையும் செயல்பாடுகளையும் செய்து கொண்டிருப்பவர்தான் ஆளுநர் ஆர்.என்.இரவி அவர்கள். எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் சனாதனம், ஆரியம், திராவிடம், திருக்குறள், காலனி ஆதிக்கம் உள்ளிட்டவை குறித்து அவர் கூறும் கருத்துகள் அபத்தமானவையாகவும், ஆபத்தானவையாகவும் இருக்கின்றன. பட்டியலின மக்கள் குறித்தும், அண்ணல் அம்பேத்கர் குறித்தும் அவதூறு பேச்சு பேசினார். அவரது திட்டம்தான் என்ன என்பதைப் புரிந்து கொள்வது சிரமம் அல்ல.

வகுப்புவாதப் பிரிவினை அரசியலைப் பேசி, மீண்டும் வர்ணாசிரம காலத்துக்கு இட்டுச்செல்வதுதான் அவரது நோக்கமாக இருந்து வருகிறது. இதுவரை பொதுவாக நுண்ணிய வர்ணாசிரம அரசியலைப் பேசி வந்த அவர், இப்போது வெளிப்படையாகத் தேர்தல் அரசியல்வாதியாகப் பேசத் தொடங்கிவிட்டார்.
'திராவிட ஆட்சியில் 50 ஆண்டுகளாக மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்' என்று ஆளுநர் ஆர்.என்.இரவி பேசியதாக நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பா.ஜ.க.வின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் போய்ப் பேச வேண்டியதை, ஆளுநர் மாளிகையில் உட்கார்ந்து கொண்டு அவர் பேசுவது கடும் கண்டனத்துக்குரியது. இவருக்குத் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவராக ஆகும் ஆசை இருந்தால், ஆளுநர் பதவியை விட்டுவிட்டு வந்து, இது போன்ற அபத்தங்களைப் பேசட்டும். அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட - அதே நேரத்தில் நியமனம் செய்யப்படும் பதவியில் உட்கார்ந்து கொண்டு தமிழ்நாட்டு அரசியல் லகானை செலுத்தப் பார்ப்பது அரசியல் சட்டத்தையே கேலிக்கூத்து ஆக்குவது ஆகும்.

சனாதனம், ஆரியம், திராவிடம், திருக்குறள் ஆகியவை குறித்த அவரது கருத்துகள் அவரது மூளையில் படிந்துவிட்ட ஆர்.எஸ்.எஸ். வகைப்பட்ட தன்மையைக் காட்டுகிறது என்றால், திராவிட ஆட்சி குறித்த அவரது விமர்சனம் பா.ஜ.க.வின் தேர்தல் அரசியல் உள்நோக்கத்தைக் காட்டுகிறது.
ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய பீகாரும், உத்தர பிரதேசமும் இன்று எப்படி இருக்கிறது - தமிழ்நாடு எப்படி இருக்கிறது? என்பது கூட அவருக்குத் தெரியாதா? தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது என்ன என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிந்துள்ளார்கள். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மதிப்பில், தமிழ்நாட்டின் பங்கு 9.22 விழுக்காடு! ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு 6 விழுக்காடு! இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 8.4 விழுக்காடு! ஜவுளித் துறை ஏற்றுமதியில் 19.4 விழுக்காடு! கார்கள் ஏற்றுமதியில் 32.5 விழுக்காடு! தோல் பொருட்கள் ஏற்றுமதியில் 33 விழுக்காடு! கல்வியின் இரண்டாவது இடம்! - இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். தொழில் நிறுவனங்களை ஈர்ப்பதில் மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு இருப்பதாக ஒன்றிய அரசே பாராட்டி இருக்கிறது.

Tamil Nadu Governor RN Ravi controversial speech on Tamil Nadu, Dravidian

இந்தியா முழுமைக்குமான பணவீக்கம் இப்போது அதிகமாகி உள்ளது. ஆனால், தமிழ்நாட்டுக்கு மட்டுமான பணவீக்கம் குறைந்துள்ளது. இதுவும் அண்மையில் ஒன்றிய அரசு வெளியிட்ட புள்ளிவிவரம்தான். தேசிய சராசரி பணவீக்கமானது 6.2 விழுக்காட்டில் இருந்து 7.79 விழுக்காடாக உயர்ந்தது. ஆனால் தமிழ்நாட்டின் பணவீக்கமானது 5.37 விழுக்காடாகக் குறைந்தது. வாங்கும் திறன் அதிகமாகி இருக்கிறது தமிழகத்தில். சமூக வளர்ச்சித் திட்டங்களின் மூலமாக அனைத்துப் பிரிவு மக்களும் வளர்ந்ததுதான் 'திராவிட மாடல்' வளர்ச்சியாக அமைந்துள்ளது. இந்தியாவின் தலைசிறந்த முதலமைச்சராக மட்டுமல்ல, இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்திக் காட்டி இருக்கிறார் எங்கள் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். இந்த வெற்றியானது, சில அரசியல் சக்திகளுக்கு எரிச்சலைத் தரலாம். அதில் ஒருவராக ஆளுநர் இருப்பதுதான் அதிர்ச்சியைத் தருகிறது. இப்படி எல்லாம் தமிழ்நாடு வளர்ந்துவிட்டதே என்ற ஆத்திரத்தில் ஆளுநர் இப்படி பேசுகிறாரோ என்ற ஐயமே எழுகிறது. அதனால்தான் திராவிட ஆட்சியின் மீது அவருக்குக் கோபம் வருகிறது. 'திராவிடம்' என்ற சொல்லைப் பார்த்து இவர் வயிறு ஏன் எரிகிறது? அந்தச் சொல் எதனால் இவருக்குச் சுடுகிறது? 'திராவிடக் கட்சிகள் பிரிவினையை வளர்த்தது' என்கிறார் அவர். தலையில், தோளில், தொடையில், காலில் பிறந்தவர்கள் என்று பிரித்தது திராவிடமல்ல; ஆரியம். இன்னார் படிக்கலாம், இன்னார் படிக்கக் கூடாது என்று பிரித்தது திராவிடமல்ல; ஆரியம். தொடக்கூடாத சாதி, கண்ணில் படக்கூடாத சாதி, மூச்சுக்காற்று படக்கூடாத சாதி என பிரித்தது திராவிடமல்ல; ஆரியம். சமூகத்தின் சரிபாதியான பெண்குலத்தை, மூலையில் முடக்கி இழிவுபடுத்தியது திராவிடமல்ல; ஆரியம். எனவே, பிரிவினைக்கு எதிராகக் கண்ணீர் வடிக்கும் ஆர்.என்.இரவி, ஆரியத்தை எதிர்த்துத்தான் குரல் எழுப்ப வேண்டுமே தவிர திராவிடத்தை அல்ல.

காலம் காலமாக பிறப்பின் பேரால், மதத்தின் பேரால், சாதியின் பேரால் இருக்கும் பிரிவினையை அகற்றப் பிறந்ததே திராவிட இயக்கம். தமிழர்களை இன உணர்வு பெற்றவர்களாக மாற்றியது திராவிட இயக்கம். அவர்களைக் கல்வியில், வேலைவாய்ப்பில் முன்னுக்குக் கொண்டு வந்தது திராவிட இயக்கம். 'வடக்கு வாழ்கிறது - தெற்கு தேய்கிறது' என்ற நிலைமையை மாற்றி, இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாகத் தமிழ்நாட்டை ஆக்கியது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. இந்த ஐம்பதாண்டு கால உண்மையை, தனக்கு ஏதோ மேடை கிடைத்துவிட்டது என்பதற்காக மாற்ற முனையக் கூடாது.
அனைவரும் 'இந்தியர்' என்று மேடைதோறும் பேசி வருகிறார் ஆளுநர். இந்தியர் என்ற ஒற்றுமை உணர்வு வேண்டும் என்பது உண்மைதான். அந்த ஒற்றுமை உணர்வுக்கு விரோதமான மதவாத அரசியலை அவரால் கண்டிக்க முடியுமா? அந்த ஒற்றுமை உணர்வுக்கு எதிரான சனாதன, வர்ணாசிரமக் கோட்பாட்டை அவரால் எதிர்த்துக் குரல் கொடுக்க முடியுமா? வர்ணாசிரம உணர்வு, வேதகால சனாதனக் கோட்பாட்டுகளைக் கையில் வைத்துக் கொண்டு தமிழ்நாடு - தமிழன் - தமிழ் என்று பேசுவதுதான் பிரிவினைவாதம் என்றால் அவரது உள்நோக்கம் தெளிவாகத் தெரிந்து விட்டது. அவருக்கு இம்மூன்றும் பிடிக்கவில்லை. தமிழ்நாடு - தமிழன் - தமிழ் என்பவை ஆளுநர் இரவிக்கு கசப்பானவையாக இருக்கின்றன. எனவே இவற்றை விட்டு விலகிச் செல்லும் முடிவை அவர்தான் எடுக்க வேண்டும். ஏற்கனவே தமிழ்நாட்டில் பா.ஜ.க.விற்கு ஒரு மாநில தலைவர் இருப்பதால், தமிழ்நாட்டில் ஆளுநராக இருந்துகொண்டு இன்னொரு மாநில பா.ஜ.க. தலைவராக செயல்பட்டு தமிழர்களுக்கே எதிராக திரு. இரவி அவர்கள் பேசிக் கொண்டிருக்காமல் அரசியல் சட்டப்படி பணியாற்றுவதே அவருக்கு சிறந்தது என்று தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு டிஆர் பாலு கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+