'தமிழ்நாடு' பெயரை எதிர்ப்பதா?ஆளுநர் ரவிக்கு சங்கரலிங்கனார் தியாகம் தெரியுமா? தமிழார்வலர்கள் சீற்றம்
சென்னை: தமிழ்நாடு என்ற பெயருக்கு பதில் தமிழகம் என்பதே சரியாக இருக்கும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. தமிழ்நாடு என்ற பெயர் சூட்டக் கோரி சங்கரலிங்கனார் பட்டினி கிடந்து உயிர் தியாகம் செய்த வரலாறு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எங்கே தெரியப் போகிறது? என சீறுகின்றனர் தமிழார்வலர்கள்.
சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிய பேச்சுகள் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளன. தமிழ்நாடு என்பதற்கு பதில் தமிழகம் என இருக்க வேண்டும்; 50 ஆண்டுகால திராவிட ஆட்சியில் மக்கள் ஏமாற்றப்பட்டுவிட்டார்கள் என அப்பட்டமாக இந்துத்துவா அரசியலைப் பேசி இருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த பேச்சை திமுக மூத்த தலைவர் டிஆர் பாலு கடுமையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், அனைவரும் 'இந்தியர்' என்று மேடைதோறும் பேசி வருகிறார் ஆளுநர். இந்தியர் என்ற ஒற்றுமை உணர்வு வேண்டும் என்பது உண்மைதான். அந்த ஒற்றுமை உணர்வுக்கு விரோதமான மதவாத அரசியலை அவரால் கண்டிக்க முடியுமா? அந்த ஒற்றுமை உணர்வுக்கு எதிரான சனாதன, வர்ணாசிரமக் கோட்பாட்டை அவரால் எதிர்த்துக் குரல் கொடுக்க முடியுமா? வர்ணாசிரம உணர்வு, வேதகால சனாதனக் கோட்பாட்டுகளைக் கையில் வைத்துக் கொண்டு தமிழ்நாடு - தமிழன் - தமிழ் என்று பேசுவதுதான் பிரிவினைவாதம் என்றால் அவரது உள்நோக்கம் தெளிவாகத் தெரிந்து விட்டது. அவருக்கு இம்மூன்றும் பிடிக்கவில்லை. தமிழ்நாடு - தமிழன் - தமிழ் என்பவை ஆளுநர் இரவிக்கு கசப்பானவையாக இருக்கின்றன. எனவே இவற்றை விட்டு விலகிச் செல்லும் முடிவை அவர்தான் எடுக்க வேண்டும். ஏற்கனவே தமிழ்நாட்டில் பா.ஜ.க.விற்கு ஒரு மாநில தலைவர் இருப்பதால், தமிழ்நாட்டில் ஆளுநராக இருந்துகொண்டு இன்னொரு மாநில பா.ஜ.க. தலைவராக செயல்பட்டு தமிழர்களுக்கே எதிராக திரு. இரவி அவர்கள் பேசிக் கொண்டிருக்காமல் அரசியல் சட்டப்படி பணியாற்றுவதே அவருக்கு சிறந்தது என்று என காட்டமாக கூறியுள்ளார்.
தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்பட்டது அப்படி ஒன்றும் எளிதான நிகழ்வும் அல்ல; இது மிகப் பெரிய தியாக வாழ்வின், பெரும் போராட்டங்களின் தொடர்ச்சி என சுட்டிக்காட்டுகின்றனர் தமிழார்வலர்கள்.
நாடு விடுதலைக்கு முன்னர் ஆங்கிலேயர் ஆட்சியில் சென்னை மாகாணம் என்பதாகவே இருந்தது. சென்னை மாகாணத்தின் பகுதிகளாக இன்றைய கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் ஒடிஷாவின் கோரபுட் வரையிலான பகுதிகள் இணைந்திருந்தன. அதே கால கட்டத்தில் மொழிவாரி உணர்வுகளும் ஒவ்வொரு பிராந்தியத்திலும் எழுந்தன. இன்னொரு பக்கம் இந்தி மொழி திணிப்பும் நிகழ்ந்தது. 1930களின் இறுதியில் சென்னை மாகாணத்தில் இந்தி திணிப்புக்கு எதிரான கிளர்ச்சி நடைபெற்றது. முதலாவது இந்தி திணிப்பு எதிர்ப்பு போரின் முடிவில் தந்தை பெரியார் முன்வைத்த முழக்கம் 'தமிழ்நாடு தமிழருக்கே' என்பது. சென்னை மாகாணம் என்பது பெயரளவில் இருந்தாலும் தமிழ்நாடு என்பதாகத்தான் நடைமுறையில் இருந்தது. அதனையே தந்தை பெரியாரும் முழக்கமாக முன்வைத்தார்.
நாடு விடுதலைக்குப் பின்னரும் தந்தை பெரியார் தனித் தமிழ்நாடு - தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கத்தை முன்வைத்தார். அப்போதும் சென்னை மாகாணம் என்றே பெயர் இருந்தது. மொழிவாரியாக சென்னை மாகாண பகுதிகள் கூறு போட்ட பின்னரும் கூட அதே பெயர் இருந்து வந்தது. ஆகையால் அன்றைய மெட்ராஸ் மாகாணம் அல்லது மதராஸ் மாகாணம் அல்லது சென்னை மாகாணம் என்ற பெயரை மாற்றி தமிழ்நாடு என பெயர் சூட்ட வலியுறுத்தி விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சங்கரலிங்கனார், 1956-ல் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். எத்தனையோ தலைவர்கள் கேட்டுக் கொண்டும் தம் போராட்டத்தை சங்கரலிங்கனார் கைவிடவில்லை. மொத்தம் 76 நாட்கள் பட்டினி கிடந்து தமிழ்நாடு பெயர் மாற்றத்துக்காக தன் உயிரையே தியாகம் செய்தார் சங்கரலிங்கனார். அப்போது தமிழ்நாடு எனப் பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் கோரிக்கையாக உருமாறியது.
இந்திய நாடாளுமன்றத்தில் இடதுசாரித் தலைவர் பூபேஷ் குப்தா, தமிழ்நாடு பெயர் மாற்றம் தொடர்பாக மசோதா கொண்டு வந்தார். வரலாறு, மொழி, கலாசார அடிப்படைகளுக்கு இசைவாக தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கருத்து மெட்ராஸ் மாகாணம் மற்றும் தேசத்தின் மற்ற பகுதகளில் உள்ள மக்களிடம் ஆழமாக இருக்கிறது என முழங்கியவர் தமிழர் அல்ல.. பூபேஷ் குப்தா என்ற தமிழர் அல்லாதவர்.

இதன் தொடர்ச்சியாக 1967-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வென்று முதல் முறையாக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. பேரறிஞர் அண்ணா முதல்வரானார். தமிழக மக்களின் நெடுநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் 1968-ம் ஆண்டு ஜூலை 18-ந் தேதி தமிழ்நாடு பெயர் மாற்ற சட்டத்தை சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றினார் பேரறிஞர் அண்ணா. பின்னர் நாடாளுமன்றத்திலும் இந்த சட்டம் நிறைவேறியது. இந்த கால கட்டத்தில் கூட ஒருவர் கூட இன்றைய ஆளுநர் ஆர்.என்.ரவியை போல தமிழ்நாடு என்பதற்கு பதில் தமிழகம் என பெயர் சூட்ட வலியுறுத்தவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்கின்றனர் தமிழார்வலர்கள்.
இப்படி தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஜூலை 18-ந் தேதியை தமிழ்நாடு நாள் என தமிழ்நாடு அரசு - தற்போது ஆளும் திமுக அரசு பிரகடனம் செய்து கொண்டாடி வருவது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications