புத்தாண்டில் ஷாக் செய்தி.. தமிழக அரசிடமே வேலையை காட்டிய ஹேக்கர்கள்! டிஐபிஆர் ட்விட்டர் பக்கம் ஹேக்!
சென்னை : புத்தாண்டில் அதிர்ச்சி செய்தியாக தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ செய்திகளை வெளியிடும் தமிழக செய்தி தொடர்பு துறையின் ட்விட்டர் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டு கிரிப்டோ கரன்சி தொடர்பான விளம்பரங்கள் இடம் பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே சமீபகாலமாகவே அரசியல் பிரமுகர்கள், பிரபலங்களின் சமூக வலைதள பக்கங்களான ட்விட்டர், பேஸ்புக் ஆகியவை ஹேக் செய்யப்பட்டு, தவறான தகவல்கள் பதிவுச் செய்யப்பட்டு வருகின்றன.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட பிரதமர் அலுவலக ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டு பின்னர் பலத்த போராட்டங்களுக்குப் பின் அது மீட்கப்பட்டது. தொடர்ந்து தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் பக்கம் நேற்று ஹேக் செய்யப்பட்டது.

ட்விட்டர் பக்கம்
செந்தில் பாலாஜியின் ட்விட்டர் பக்கம் நேற்று ஹேக் செய்யப்பட்டு, கிரிப்டோகரன்சி தொடர்பாக பதிவிடப்பட்டிருந்தது. மேலும் ட்விட்டரில் அவரது ட்விட்டர் கணக்கின் பெயரும் மாற்றப்பட்டதோடு, கொரோனாவுக்காக நிதி திரட்டப்படுவதாகவும், குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கு அடுத்தபடியாக தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் ட்விட்டர் கணக்கு அடையாளம் தெரியாத நபர்களால் முடக்கப்பட்டுள்ளது. ப்ளு டிக் உடன் கூடிய அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா குறித்த தகவல்கள் பதிவிடப்பட்டன.

கணக்கு முடக்கம்
இதனால் பெரும் பரபரப்பு நிலவிய நிலையில் அமைச்சர்களின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது குறித்து தி.மு.க ஐடி விங் சார்பில் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களது கணக்குகள் மீட்கப்பட்டன. அமைச்சர்களின் ட்விட்டர் பக்கத்தில் மர்ம நபர்கள் பதிவிட்டிருந்த ட்வீட்களும் நீக்கப்பட்டுள்ளது. மேலும் ஹேக்கர்கள் குறித்தும் விசாரணை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரு அமைச்சர்களின் ட்விட்டர் கணக்குகளும் ஹேக் செய்யப்பட்ட போதும் அதில் கிரிப்டோகரன்சி குறித்த தகவல்களே இடம்பெற்று இருந்தன.

டிஐபிஆர்
இந்த நிலையில் புத்தாண்டில் அதிர்ச்சி செய்தியாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பு நிறுவனமான தமிழ்நாடு அரசு செய்தி தொடர்பு துறை ஹேக் செய்யப்பட்டுள்ளது. நேற்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறிக்கை ஒன்றினை வெளியிட்ட பின் அந்தப் பக்கத்தை மர்ம நபர்கள் முடக்கியுள்ளனர். நள்ளிரவு ஒன்றரை மணியிலிருந்து அந்த ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து புகைப்படத்துடன் "டெஸ்லா பிக் கிரிப்டோ ஈவன்ட்" என்ற பெயரில் விளம்பரங்கள் வெளியாகின.

அதிர்ச்சி
இதனால் முதலில் அந்தப் பக்கத்தை பின் தொடர்பவர்களும் அரசு அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்த நிலையில் அதற்குப் பிறகுதான் இது ஹேக்கர்களின் கைவரிசை என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக ட்விட்டர் நிறுவனத்திற்கு புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஹேக் செய்யப்பட்ட ட்விட்டர் பக்கத்தினை மீட்கும் முயற்சியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அடுத்தடுத்து தமிழக அரசை குறி வைத்து ஹேக்கர்கள் ட்விட்டர் பக்கங்களை முடக்குவதும் அதற்குப் பிறகு அந்தப் பக்கங்களை மீட்டெடுப்பதும் வழக்கமாகி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications