சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் நடத்தும் திருக்குறள் வாரம், திருக்குறள் பெருவிழா!

Google Oneindia Tamil News

சென்னை: அயர்லாந்து நாட்டில், தமிழ்க் கல்விக் கழகம் அமைப்பு, திருக்குறள் விழாவை கொண்டாடுகிறது.

இதுபற்றி வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: கடல் கடந்து அயர்லாந்து நாட்டில் வசித்தாலும், தாய் மொழியை இளைய தலைமுறையினர் மத்தியில் எடுத்தச் செல்ல உன்னதப் பணியாற்றி வரும், அயர்லாந்து தமிழ்க் கல்விக் கழகம், உலகப் பொதுமறையாம் திருக்குறளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் விதத்தில் திருக்குறள் வாரம் மற்றும் திருக்குறள் பெருவிழா - 2021 என்னும் விழாவை சீரும் சிறப்புமாக நடத்தத் திட்டமிட்டு, 09-01-2021 முதல் 16-01-2021 வரை கொண்டாடி வருகிறது.

திருக்குறள் வாரத்தில் ஒவ்வொரு நாளும் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து, தமிழறிஞர் பெருமக்களின் அறிமுகவுரையோடு மாணவச் செல்வங்கள் திருக்குறள் பொழிவு செய்கிறார்கள். ஒரு நாளுக்கு, ஒரு அதிகாரம் வீதம் ஒன்பது அதிகாரங்களை இதன் மூலம் வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

Thirukkural Festival, In Ireland

கடவுள் வாழ்த்து - முனைவர் மணலி சோமசுந்தரம்

வான் சிறப்பு - பேரா. முனைவர் மறைமலை இலக்குவனார்

நீத்தார் பெருமை - கவிஞர் திரு. பிச்சினிக்காடு இளங்கோ, எழுத்தாளர், சிங்கப்பூர்

அறன் வலியுறுத்தல் - பேச்சாளர் திருவாட்டி பொன் கோகிலம்

இல்வாழ்க்கை - திரு. அகத்தியன் ஜான் பெனடிக்ட்

வாழ்க்கைத் துணைநலம் - கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி

மக்கட்பேறு - கவிஞர் திரு. புகாரி, எழுத்தாளர், கனடா

அன்புடைமை - திரு. நாகை சுகுமாறன்

விருந்தோம்பல் - மருத்துவர் கந்தசாமி செல்வன்

திருக்குறள் பெருவிழாவைத் தமிழக அமைச்சர் பாண்டியராஜன் தலைமையேற்றுச் சிறப்பிக்க, திரைப்படப் பின்னணிப் பாடகர் அனந்து தமிழ்த்தாய் வாழ்த்துடன், திருக்குறள் தூயர் முனைவர் மோகனராசு சிறப்புரை வழங்க, பேராசிரியர் முனைவர். அப்துல் காதர் மற்றும் மருத்துவர் விஜய் ஜானகிராமன் வாழ்த்துரையோடு, கவிஞர் முனைவர் சக்திஜோதி அவர்களின் தலைமையில் "திருக்குறள் - உலகப் பொதுமறை -- ஏன்? " என்ற சொல்லரங்கமும் நடைபெற உள்ளது.

நிகழ்வுகள் அனைத்தும் அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகத்தின் கீழ்காணும் சமூக ஊடகங்களில் நேரலை செய்யப்படுகிறது.

*முகநூல் நேரலை:*

https://www.facebook.com/IrelandTamilAcademy/

*வலையொளி நேரலை:*

https://m.youtube.com/channel/UC63KZCYuwNwE2bU9XV1X5Pw

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் பற்றி: பல்வேறு நாடுகளில் வாழும் தமிழ் அறிஞர்களின் வழிகாட்டுதலோடு, அயர்லாந்து தமிழ் ஆர்வலர்களால் 2020 ஆண்டு அக்டோபர் இரண்டாம் வாரத்தில் அன்னைத் தமிழுக்குப் பணியாற்ற ஆரம்பிக்கப்பட்ட தன்னார்வ அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம், அயர்லாந்திற்கான இந்தியத் தூதர் மேதகு. சந்தீப் குமார் அவர்களால் இணையம் வழியாகத் தொடங்கி வைக்கப்பட்டது. இது, சாதி, சமய, அரசியல் சார்பற்ற, இலாப நோக்கமற்ற, தமிழ் மொழி, தமிழ் கலாச்ச்சாரப் பண்பாட்டு விழுமியங்களை இளம் தலைமுறையினர் மத்தியில் எடுத்துச் செல்லப் பணியாற்றும் தன்னார்வ அமைப்பாகும். தற்போது 84 குழந்தைச் செல்வங்களுக்கு 16 தன்னார்வ ஆசிரியர்கள், நம் தாய்மொழியைப் பயிற்றுவிக்கின்றனர்.

மேலும், பெரியவர்கள் மத்தியில் தமிழ் மொழியையும், கலாச்சாரப் பண்பாட்டு விழுமியங்களையும் எடுத்துச் செல்லவும் தொடர்ந்து கருத்தமர்வுகளையும் திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறார்கள். நோக்கம் (Mission): உயர்தனிச் செம்மொழியாம் தமிழ் மொழியின் மொழி வளம், வாழ்வியல் நெறிமுறைகள், பண்பாட்டு விழுமியங்களைப் பரந்துபட்ட புரிதலோடு, அனைத்து மக்களுக்கும் தமிழ்க் கல்வி மூலம் கொண்டு சேர்த்தல்.

Thirukkural Festival, In Ireland

தொலை நோக்கு (Vision):

அயர்லாந்து தமிழ்க் கல்விக் கழகம் தமிழ் மொழியின் மேன்மையைப் பறைசாற்றி, உலகளாவிய பார்வையோடு, உயர்தரத் தமிழ் மொழிவளர் மையமாக உருவெடுத்து, அனைவரின் ஒத்துழைப்போடு தமிழ் மொழி,கலை, இலக்கியம், பண்பாட்டு வளர்ச்சிக்குத் தொண்டாற்றும்.

திட்ட வடிவங்கள் (Plans):

1. தமிழ் மொழியைப் பயில விரும்பும் யாவருக்கும், தமிழ் மொழியை எழுத, படிக்க, பேசப் பயிற்றுவித்தல்

2. உலக அளவில் உள்ள தமிழ் சார்ந்த பெரு நிறுவனங்கள், ஆய்வு மையங்கள், குழுக்கள், குழுமம் மற்றும் அமைப்புகளோடு தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு தமிழ்த் தொண்டாற்றுதல்.

3. உலகின் மிகத் தொன்மையான தமிழ் மொழி மூலமாக உலகில் வாழும் பல்வேறு மொழி பேசும் தேசிய இனங்களோடு கல்வி சார்ந்த இணக்கமான சூழலை உருவாக்கிச் சமூக ஒருங்கிணைவு ஒற்றுமையைப் பேணுதல்.

4. நமது வாழ்வியல், மரபு, கலை, இலக்கியம், பண்பாடு சார்ந்த கருத்துகளை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் பொருட்டுக் கருத்தரங்குகள், பயிலரங்குகள், பயிற்சிப் பட்டறைகள் நிகழ்த்துதல்.

5. தமிழ் மொழி சார்ந்த கல்வியைத் தொடர விரும்புவோர் பட்டம், பட்டயம் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை உலகத்தரமான கல்வி நிறுவனங்களில் கற்பதற்கும், பெறுவதற்கும் தொடர்பு மையமாகச் செயலாற்றுதல்.

6. தமிழ் மொழிக் கல்வியை அயலகத் தமிழ்த் தலைமுறையினருக்கு எளிய முறையில் எடுத்துச் செல்லும் பொருட்டு தமிழறிஞர்கள், தமிழ் ஆய்வாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களின் வழிகாட்டுதலோடு ஆய்வுகள் மேற்கொள்ளுதல்.

7. தமிழ் மொழியின் மேல் இளைய தலைமுறையினருக்கு ஆர்வம் ஏற்படுத்தும் விதமாகத் தமிழ் மொழி சார்ந்த போட்டிகளை நடத்துதல் மற்றும் இளைய தலைமுறையினரை உலகளாவிய போட்டிகளில் பங்கேற்கும் வண்ணம் வழிகாட்டுதல்.

வள்ளுவத்தின் வழியில்: உலகப் பொதுமறை திருக்குறள் காட்டும் வாழ்க்கை நெறிமுறைகளைக் குழந்தையர், இளையோர் மற்றும் பெரியோர் மத்தியில் எடுத்துச் செல்ல நவம்பர் முதல் வாரத்தில், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர். குறிஞ்சிவேந்தன் அவர்களின் உரைப் பொழிவில் "திருக்குறள் காட்டும் மேலாண்மைக் கூறுகள்" என்ற பொருண்மையில் இணையக் கருத்தரங்கு நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து, தற்போது ஜனவரி 9 முதல் 15 ஆம் தேதி வரை திருக்குறள் வாரமும், ஜனவரி 16 ஆம் தேதி இந்திய நேரம் இரவு 8.00 மணிக்கு "திருக்குறள் விழாவும்" இணையவெளியில் கொண்டாடுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு்ளது.

English summary
In Ireland, the Tamil Educational Organization celebrates the Thirukkural Festival.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X