சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

போராடும் விவசாயிகள்.. கைகளில் செங்கொடியுடன் களம் குதிக்கும் இடதுசாரிகள்.. 4ம் தேதி முதல் தொடர்மறியல்

Google Oneindia Tamil News

சென்னை: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட்டுகள் போராட்டம் அறிவித்துள்ளன.. இதையடுத்து, வரும் டிசம்பர் 4ந் தேதி முதல் தமிழக முழுவதும் இடதுசாரி கட்சிகள் தொடர் மறியல் போராட்டம் நடத்துவது என்றும், புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன்பு இந்த போராட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தின் பல இடங்களில் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் ஆங்காங்கே போராட்டத்தை கையில் எடுத்து வருகின்றனர்.

 TN Communist Parties against New Former Bills

இதில் ஒரு பகுதியாக, புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெறக் கோரி மத்திய, மாநில அரசு அலுவலகங்களுக்கு முன்பு தொடர்ச்சியான மறியல் போராட்டம் நடத்துவது என்று கம்யூனிஸ்ட்கள் அறிவித்துள்ளன.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன். சிபிஐ (எம்-எல்) லிபரேசன் கட்சியின் மாநில செலயாளர் கே.என் நடராஜன் ஆகியோர் கூட்டாக இணைந்து அறிக்கை வெளியிடுள்ளனர். அதில் அவர்கள் சொல்லி உள்ளதாவது:

மத்திய பாஜக அரசு கொரோனா தொற்றுப் பரவல் காலத்தைப் பயன்படுத்தி அவசர கோலத்தில் ஜனநாயக விரோதமாக மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்காமல், நாடாளுமன்றத்தில் முறையாக விவாதிக்கப்படாமல் நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களை நிபந்தனையின்றி ரத்து செய்ய கோரி விவசாயிகளின் நாடு தழுவிய போராட்டம் நடைபெற்று வருகிறது.

வரலாற்றில் இல்லாத அளவு லட்சக்கணக்கான விவசாயிகள் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்து சென்று டில்லியில் முகாமிட்டுள்ளனர். வேளாண் சட்டங்களையும், மின்சார சட்டத்திருத்த முன்வடிவையும் திரும்ப பெற கோரி நடைபெறும் நியாயமான எழுச்சிமிக்க போராட்டத்தினை இடதுசாரி கட்சிகள் ஆதரிப்பதோடு அவர்களோடு இணைந்து களத்தில் நின்று போராடி வருகின்றனர்.

போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து தீர்வு காண்பதற்கு மாறாக, மோடி அரசு விவசாயிகள் மீது கொடூரமான அடக்குமுறை நடவடிக்கைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. டில்லி நகரத்திற்குள் நுழைய விடாமல் பாஜக அரசின் காவல்துறையும், துணை ராணுவப்படையும் தொடுக்கும் தாக்குதல்களையும், தடைகளையும் எதிர்கொண்டு விவசாயிகள் டெல்லியைச் சுற்றி முகாமிட்டு போராடி வருகின்றனர்.

விவசாயத்தையும், உணவுப் பாதுகாப்பையும் சிதைக்கும் வகையிலும், விவசாய உற்பத்தி பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காத நிலையை ஏற்படுத்தும் வகையிலும், விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்கி பெருமுதலாளிகளிடமும், கார்ப்பரேட் நிறுவனங்களிடம் சிறு-குறு, நடுத்தர விவசாயிகள் தங்கள் நிலத்தினை இழக்க வழிவகுக்கும் வகையிலும், கிராமப்புற மக்கள் வாழ்வாதாரத்தை அழித்தொழிக்கும் வகையிலும் கொண்டு வரப்பட்டுள்ள புதிய வேளாண் சட்டங்களையும், மின்சாரத்தையும், மின்விநியோகத்தையும் தனியார் கொள்ளை லாபத்திற்கு அனுமதிக்கும் மின்சார திருத்தச்சட்ட முன்வடிவினையும் மத்திய பாஜக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டுமென்று இடதுசாரி கட்சிகள் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளன.

மோடி அரசு நிறைவேற்றியுள்ள இச்சட்டங்களை, விவசாயம் மாநில பட்டியலில் உள்ள ஒன்று என்பதை பற்றி கூட கிஞ்சித்தும் கவலைப்படாமல், அதிமுக அரசு நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக ஆதரித்துள்ளது மட்டுமின்றி, உடனடியாக தமிழக சட்டமன்றத்திலும் நிறைவேற்றி தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் மாபெரும் துரோகத்தினை இழைத்துள்ளது.

இந்நிலையில் விவசாயிகளின் பேரெழுச்சி மிக்க போராட்டத்திற்கு ஆதரவையும், ஒருமைப்பாட்டையும் தெரிவிக்கும் வகையிலும், போராடும் விவசாயிகளை அழைத்து பேசி அவர்களது கோரிக்கைகளை ஏற்று புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், தமிழகத்தில் மாவட்ட, வட்ட, ஒன்றிய தலைநகரங்களில் 2020 டிசம்பர் 4ந் தேதி முதல் மத்திய, மாநில அரசு அலுவலகங்களுக்கு முன்பு தொடர்ச்சியான மறியல் போராட்டம் நடத்துவது என சிபிஐ (எம்), சிபிஐ, சிபிஐ (எம்-எல்) லிபரேசன் ஆகிய இடதுசாரி கட்சிகள் தீர்மானித்துள்ளன.

இவ்வியக்கத்தில் தமிழக விவசாய பெருங்குடி மக்களும், விவசாயத் தொழிலாளர்களும், உழைப்பாளி மக்களும், ஜனநாயக சக்திகளும் பெருந்திரளாக பங்கேற்று டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கோரிக்கைகளை எழுப்பிட வேண்டுமென இடதுசாரி கட்சிகள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
TN Communist Parties against New Former Bills
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X