அனல் காற்று வீசுதே.. சுட்டெரிக்கும் சூரியனால் பல நகரங்களில் புழுக்கத்தில் தவிக்கும் மக்கள்
தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரிப்பதால் அனல் காற்று வீசுகிறது.
சென்னை: தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது. பல மாவட்டங்களில் அனல் காற்று வீசுவதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். இன்றைய தினம் இயல்பை விட வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலின் படி தமிழகத்தில் பத்துக்கும் மேற்பட்ட நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட் அளவைத் தாண்டி பதிவாகியுள்ளது. சாலைகளில் ஆம்லெட் போடும் அளவிற்கு இப்போதே சுடுகிறது சூரியன்.

அக்னி நட்சத்திர காலம் போல அனல் காற்று வீசுவதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கிப் போயுள்ளனர்.
நேற்றைய தினம் பல நகரங்களில் வெயில் சுட்டெரித்தது. இரவு நேரங்களில் புழுக்கமும் நிலவியதால் மக்கள் அவதிக்கு ஆளாகினர். அதே நேரத்தில் பேச்சிப்பாறை, போடியில் தலா 1 செமீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது.
சென்னை 35 டிகிரி செல்சியஸ் - 95 டிகிரி பாரன்ஹீட்
கோவை, தொண்டி, தஞ்சாவூர் 36 டிகிரி செல்சியஸ் - 96.8 டிகிரி பாரன்ஹீட்
பாளையங்கோட்டை, திருச்சி, தர்மபுரி 37 டிகிரி செல்சியஸ் - 98.6 டிகிரி பாரன்ஹீட்
ஈரோடு 38.6 டிகிரி செல்சியஸ் - 101.4 டிகிரி பாரன்ஹீட்
வேலூர் 38.5 டிகிரி செல்சியஸ் - 101.3 டிகிரி பாரன்ஹீட்
மதுரை, நாமக்கல், சேலம் 39 டிகிரி செல்சியஸ் - 102.2 டிகிரி பாரன்ஹீட்
கரூர் பரமத்தி 39.5 டிகிரி செல்சியஸ் - 103.1 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

மார்ச் மாத தொடக்கத்திலேயே அனல் காற்று வீசும் நிலையில் அக்னி நட்சத்திர காலத்தை எப்படி சமாளிக்க போகிறோம் என்ற கவலை ஏற்பட்டுள்ளது. கோடை மழை பெய்து குளிர்வித்தால் மட்டுமே வெப்பத்தை சமாளிக்க முடியும் வருண பகவான் மனது வைக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாகும்.












Click it and Unblock the Notifications