Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விசாரணை கமிஷன்களின் அதிகாரம் என்ன.. அறிக்கைகளால் பலன் கிடைக்குமா.. சட்ட ரீதியான முழு அலசல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆறுமுகச்சாமி மற்றும் அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட இரண்டு விசாரணை ஆணையங்களின் அறிக்கைகளும் தமிழக சட்டமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இரண்டு அறிக்கைகளிலும் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள், முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் ஆகியவை சர்ச்சைகளையும் அதிர்ச்சிகளையும் ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், விசாரணை ஆணையங்களின் அறிக்கைகளுக்கு வலிமை உண்டா ? சட்ட அதிகாரம் அதற்கு இருக்கிறதா? அந்த அறிக்கைகளை வைத்து அரசு என்ன நடவடிக்கை எடுத்திட முடியும்? குற்றம்சாட்டப்பட்டவர்களை தண்டித்து விடமுடியுமா? என்றெல்லாம் பல்வேறு கேள்விகள் இதில் அடங்கியிருக்கின்றன. விசாரணை ஆணையங்கள் குறித்து சில விசயங்களை பார்ப்போமா..

விசாரணை ஆணையங்கள் என்கிற ஒரு சட்டத்தை 1952-ல் உருவாக்கியது மத்திய அரசு. அதற்கான ஆய்வு வரம்புகளையும் அந்த சட்டத்தில் வரையறை செய்யப்பட்டிருக்கிறது. ஆக, அந்த சட்டத்தின் படியே மத்திய-மாநில அரசுகள் விசாரணை ஆணையங்களை அமைக்கின்றன. நாட்டில் ஒரு சம்பவம் நடக்கிறது. அது, தேசிய அளவிலோ அல்லது மாநில அளவிலோ பெரும் தாக்கத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்துவதாக இருப்பின், குறிப்பிட்ட பிரச்சனை அல்லது சம்பவம் குறித்து அரசாங்கத்துக்கு சில தெளிவுகளும் உண்மைகளும் தேவைப்படுகிறது. அதனை அறிந்து கொள்வதன் மூலம் எதிர்காலங்களில் அப்படிப்பட்ட பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க அல்லது தடுக்கப்பட அல்லது ஒரு நல்ல முடிவினை எடுக்க அரசுக்கு தேவையாக இருக்கிறது. அதற்காக, ஒரு விரிவான சுய அதிகார விசாரணையின் அடிப்படையில் ஒரு அறிக்கைத் தேவைப்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால்... ஒரு முன்னெச்சரிக்கை என்பதாக வைத்துக் கொள்ளலாம். அந்த வகையில்தான் விசாரணை ஆணையங்கள் அமைக்கப்படுகின்றன.

 ஓய்வு பெற்ற நீதிபதிகள்

ஓய்வு பெற்ற நீதிபதிகள்

பணியிலுள்ள நீதிபதி அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று 1952-ல் இயற்றப்பட்ட சட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், 99 சதவீத விசாரணை ஆணையங்கள் ஓய்வு பெற்ற நீதிபதியைக் கொண்டே ஆளும் அரசுகள் அமைக்கின்றன. சர்வீஸில் உள்ள நீதிபதியைக் கொண்டு விசாரணை ஆணையம் அமைக்க எந்த அரசும் முன்வருவதில்லை. இதற்கு ஆயிரம் அரசியல் காரணங்கள் இருக்கின்றன. அது வேறு ரகம்!

தண்டனை வழங்க முடியாது

தண்டனை வழங்க முடியாது

விசாரணை ஆணையத்திற்கு நிறைய அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மத்திய-மாநில அரசின் எத்தகைய உயர் பொறுப்பில் உள்ள அலுவலராக இருந்தாலும் அவர்களை அழைத்து விசாரிக்க ஆணையத்திற்கு அதிகாரம் இருக்கிறது. அதேபோல, மத்திய-மாநில அரசாங்கத்திடமிருந்து எந்த ஒரு ஆவணத்தையும் கேட்டு பெற முடியும். அதற்கேற்ப அதிகாரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணைகளை நடத்தி குற்றத்தை கண்டறியும்பட்சத்தில், அது தொடர்பான பரிந்துரைகளை அரசுக்கு விசாரணை ஆணையம் வழங்க முடியுமே தவிர, குற்றவாளிகள் என ஆணையம் சுட்டிக்காட்டும் நபர்களுக்கு தண்டனை ஏதும் வழங்க ஆணையத்திற்கு அதிகாரம் கிடையாது. அதாவது, அரசுக்கு பரிந்துரை செய்யலாம்; அவ்வளவே!

 ஆணைய பரிந்துரை உயிர்பெறுவது இப்படித்தான்

ஆணைய பரிந்துரை உயிர்பெறுவது இப்படித்தான்

விசாரணை ஆணையம் தனது அறிக்கையில் பரிந்துரைக்கும் விசயங்களை அரசாங்கம் ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம். ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் அரசுக்கு கிடையாது. அதேசமயம், ஆணையத்தின் பரிந்துரைகளை ஒரு அரசாங்கம் ஏற்றுக் கொண்டு, சம்மந்தப்பட்ட நபர்களை தண்டிக்க வேண்டும் என முடிவு செய்து விட்டால், ஆணையத்தின் அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்து, அதன் மீது அரசாணை ஒன்று பிறப்பித்து முறைப்படி குற்றவியல் நடைமுறை சட்டத்தின் படி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே குற்றவாளிகளை தண்டிக்க வழி பிறக்கும். இது ஒருபுறமிருக்க, குற்றவியல் நடைமுறை சட்டத்தின் நடவடிக்கை எடுத்து, அந்த வழக்கு நீதிமன்றங்களுக்கு சென்று அது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிற சூழலில், அரசு தனது தரப்பு விவாதங்களின் போது, விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகளை ஒரு ஆதாரமாகவோ அல்லது சாட்சியமாகவோ காட்ட முடியாது. அப்படியே காட்டினாலும் அதனை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆக, விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகளின் உண்மை நிலை இதுதான்!

விசாரணை கமிஷன் பற்றி கருணாநிதி கருத்து

விசாரணை கமிஷன் பற்றி கருணாநிதி கருத்து

இந்தியாவில் எத்தனையோ விசாரணை ஆணையங்கள் அமைக்கப் பட்டு அதன் அறிக்கைகள் அரசாங்கத்திடம் ஒப்படைக்கவும் பட்டிருக்கிறது. அதன் மீது எந்த அரசியல் தலைவரும் தண்டிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. பல ஆணையங்களின் பரிந்துரைகள் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படாமலே தூங்குகின்றன. தமிழகத்தில் 2001-ஜெயலலிதா ஆட்சியில், முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது காவல்துறையினரால் திமுகவினர் கடுமையாக தாக்கப்பட்டனர். அப்போது ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டபோது, ''இந்த விசாரணை கமிஷனை ஏற்கமுடியாது. விசாரணை எப்படி இருக்க வேண்டும்? அறிக்கை எப்படி தயாரிக்கப்பட வேண்டும்? என்றெல்லாம் நீதிபதிக்கு ஜெயலலிதா அரசு சொல்லிவிட்டது. அதனால் இந்த கமிஷனை ஏற்க முடியாது. '' என்று தெரிவித்தார் கருணாநிதி. அதேபோல், விசாரணை கமிஷன்கள் பற்றி 2005-ல் ஒருமுறை கருத்து தெரிவித்த கருணாநிதி, "விசாரணை கமிஷன் அமைப்பதில் விசேஷம் ஏதுமில்லை. இதனால் எந்த பயனும் ஏற்படப்போவதுமில்லை'' என்றார் அழுத்தமாக. தமிழகத்தின் மூத்த தலைவராக 60 ஆண்டு கால அரசியல் சாணக்கியராக இருந்த கருணாநிதி கருத்து இது. இதனால் விசாரணை கமிசன்களின் மீதான நம்பகத்தன்மை என்பது எப்போதோ மறைந்து போய்விட்டது.

அதிரடி ஆரம்பித்த தமிழக அரசு

அதிரடி ஆரம்பித்த தமிழக அரசு

தற்போது வந்துள்ள ஆறுமுகச்சாமி மற்றும் அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் மீது "ஏதேனும் அதிசயம் நடந்தால்" ஒரு வேளை நம்பிக்கை வரலாம். இதைத்தவிர்த்துப் பார்த்தால், விசாரணை ஆணையங்கள் என்பது அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது புலனாகும். புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் மற்றும் பத்திரிகை ஆசிரியரான கல்கி, ''ஒரு பிரச்சனையை அரசாங்கம் முடிவுக்கு கொண்டுவர வேண்டுமானால் அந்த பிரச்சனையின் மீது ஒரு கமிசனைப் போடு அல்லது பிரச்சனைக்குரியவர்களின் தலையில் கல்லைப் போடு'' என்று வேடிக்கையாக பதிவு செய்திருக்கிறார். அவருடைய வேடிக்கையான அதேசமயம் எதார்த்த உண்மைகளைச் சொல்லும் அவரது வரிகள் தான் நினைவுக்கு வந்துப்போகிறது. அரசாங்கத்துக்கு பரிந்துரைக்கும் அதிகாரத்தை மட்டுமே கொண்ட விசாரணை ஆணையங்களினால் எந்த பலனும் இல்லாத நிலையில், மக்களின் வரிப்பணம்தான் விரயமாகின்றன என்பதே ஜீரணிக்க முடியாத உண்மையாக இருந்து வகருகிறது. ஆனால், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் கமிஷனின் பரிந்துரையின் பேரில் 3 வட்டாட்சியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதோடு, தூத்துக்குடி டிஎஸ்பியாக இருந்த லிங்கத் திருமாறன் மற்றும் 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது, ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, இந்த விஷயத்தை எவ்வளவு சீரியசாக எடுத்துள்ளது என்பதை பிரதிபலிக்கிறது. ஆணையங்களின் மீதான நம்பிக்கை துளிர் விட ஆரம்பித்துள்ளது. இது தொடருமா என்ற கேள்வியை விட.. இந்த அதிரடி தொடர வேண்டும்.. என்பதே மக்களின் கோரிக்கை!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+