சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாணவிக்கு மஞ்சள் கயிறு கட்டிய வழக்கு.. "கைது செய்து என்ன சாதித்தீர்கள்?".. உயர் நீதிமன்றம் கேள்வி

Google Oneindia Tamil News

சென்னை: கடலூரில் 16 வயது பள்ளி மாணவிக்கு சக மாணவன் மஞ்சள் கயிறு கட்டியது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அவர்கள் இருவரையும் கைது செய்ததன் மூலம் நீங்கள் என்ன சாதித்து விட்டீர்கள்? என்று போலீஸாரை பார்த்து கேள்வியெழுப்பியுள்ளது.

மேலும், குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள் தெளிவாக இருந்த போதிலும், சிறார் குற்றங்கள் தொடர்பான விவகாரத்தில் காவல்துறையினர் வரைமுறையின்றி கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

What have you achieved by arresting those school student? Madras HC Questions Police

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 16 வயது மாணவிக்கு சக மாணவன் ஒருவர் மஞ்சள் கயிற்றை கட்டும் காட்சிகள் சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் பரவியது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், மாணவனுக்கு எதிராக சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதேபோல, மாவட்ட குழந்தைகள் நலக்குழு, மாணவியை அரசு காப்பகத்தில் சேர்த்தது.

இதனிடையே, மாணவியை மீட்கக் கோரி அவரது தந்தை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மாணவியை பெற்றோரிடம் ஒப்படைக்கவும், மாணவனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கு குறித்து அறிக்கை அளிக்கவும் காவல்துறைக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த மனுவானது நீதிபதிகள் பி.என். பிரகாஷ், ஜி.சந்திரசேகர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "சமூக வலைதளங்கள் உருவாக்கும் அழுத்தம் காரணமாக என்ன செய்வதென்று தெரியாமல் ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் இது போன்ற நடவடிக்கைகளை எடுக்கின்றனர். இருவரையும் கைது செய்ததன் மூலம் நீங்கள் என்ன சாதித்து விட்டீர்கள்?" என கேள்வியெழுப்பினர்.

அப்போது, சட்டங்கள் மற்றும் உத்தரவுகள் எல்லாம் தெளிவாக உள்ளதாகவும் அதனை அமல்படுத்துவதில் தான் சிக்கல்கள் உள்ளதாகவும் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் சந்துரு விளக்கம் அளித்தார்.

இதுபோன்ற கைது நடவடிக்கைகளுக்கு உயர் அதிகாரிகளும் பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், சிறார் சம்பந்தப்பட்ட வழக்குகளை கையாள்வது குறித்து காவல்துறை, மருத்துவத்துறை, குழந்தைகள் நல வாரியம், நீதிமன்றத்திற்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ஆகியோர் இணைந்து ஆலோசனை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

English summary
Madras High Court asked Police What have they achieved by arresting those school students, when it heard a case related to a fellow student tying a yellow thread to a girl student.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X