பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டிலிருந்து உதிர்ந்த "முல்லை".. இறந்த சித்ராவின் பின்னணி என்ன?
சென்னை: வறுமையுடன் பிறந்த நடிகை சித்ரா தனது உழைப்பின் மூலம் மக்கள் மனதில் இடம்பெற்றது எப்படி? யார் இந்த சித்ரா?
விஜே, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல், டிக்டாக் உள்ளிட்டவை மூலம் மக்களிடம் பிரபலமானவர் சித்ரா. படப்பிடிப்புக்காக ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த சித்ரா நேற்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது சின்னத்திரையினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜேவாக தனது பணியை தொடங்கிய சித்ரா, முல்லையாக மக்கள் மனங்களில் உலா வந்தார். இவருக்கென பேஸ்புக் பக்கங்கள், பேன்ஸ் பக்கங்கள் என இருக்கும் அளவுக்கு புகழ்பெற்ற இவர் யார் என்பதை பார்ப்போம்.
நடிகை சித்ராவின் தற்கொலைக்கு என்ன காரணம்?.. குடும்பத்தகராறில் விபரீதத்தை செய்தாரா?

காவலர்
மே 2-ஆம் தேதி 1992-ஆம் ஆண்டு வேலூரில் பிறந்தவர் சித்ரா. இவரது தந்தை வேளச்சேரி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது தாத்தா ராணுவத்தில் பணியாற்றியவர். சித்ராவின் அண்ணன் சென்னை அண்ணாநகர் போக்குவரத்து பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார்.

தொகுப்பாளினி
ஆரம்பத்தில் இருந்தே இவர்கள் சென்னை கோட்டூர்புரம் காவல் நிலைய குடியிருப்பில் வசித்து வருகிறார்கள். எளிமையான குடும்பத்தில் பிறந்த சித்ரா, உளவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்று தங்கப்பதக்கத்தையும் பெற்றுள்ளார். எனினும் ஊடகத்துறை மீதான ஆர்வம் காரணமாக 2013-ஆம் ஆண்டு மக்கள் தொலைக்காட்சியில் பணிக்கு சேர்ந்து தொகுப்பாளராக தனது பணியை தொடங்கினார்.

உள்ளம் கொள்ளை கொண்ட சித்ரா
பின்னர் இவர் மன்னன் மகள், சின்ன பாப்பா, பெரிய பாப்பா, சரவணன் மீனாட்சி- 2, டார்லிங் டார்லிங் ஆகிய சீரியல்களில் நடித்து புகழ் பெற்றார். தற்போது இவர் நடித்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மேலும் ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டுவிட்டார்.

காதல்
இந்த நிலையில் சித்ரா ஈசிஆர் சாலையில் உள்ள வெட்டுவாங்கேணியில் உள்ள அபார்ட்மென்ட்டில் தங்கியிருந்தார். அந்த வீட்டின் இன்னொரு பகுதியில் ஹேம்நாத் என்பவர் தங்கியிருந்தார். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் இன்றி வீட்டிலிருந்த சித்ராவுக்கு ஹேம்நாத்திற்கும் இடையே காதல் மலர்ந்தது.

திருமணம்
இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆகஸ்ட் மாதம் எளிமையான முறையில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதையடுத்து ஜனவரியில் திருமணம் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அக்டோபர் 19-ஆம் தேதியே இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாக ஹேம்நாத் போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.