”புரட்சித் தலைவர்” எங்கே? திமுக அரசு எம்ஜிஆரை கலங்கப்படுத்துவிட்டது -திடீரென கொதித்த எஸ்.பி வேலுமணி
சென்னை: சென்ட்ரல் ரயில்நிலைய மேம்படுத்தப்பட்ட சதுக்கம் மற்றும் சுரங்க நடைபாதை சதுக்க திறப்பு விழா விளம்பரத்தில், புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என்று குறிப்பிடாமல் "புரட்சித் தலைவர்" என்ற வார்த்தையை தமிழ்நாடு அரசு அரசியல் காழ்புணர்ச்சியுடன் தவறவிட்டுவிட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார்.

புரட்சித் தலைவர் எங்கே?
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட, 'சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னை சென்ட்ரல் மத்திய சதுக்கத் திட்டத்தின் கீழ் அழகுபடுத்தப்பட்ட நில மேம்பாட்டு வசதிகள் மற்றும் சுரங்க நடைபாதை திறப்பு விழா. விளம்பரத்தில், புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என்று குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி
ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் பழிவாங்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வரும் திமுக அரசு, புரட்சித் தலைவர் என்ற அடைமொழியை நீக்கி விளம்பரம் வெளியிட்டிருப்பது கண்டனத்திற்குரியது. பொன்மனச் செம்மல் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு "புரட்சித்தலைவர்" என்ற அடைமொழி மக்களின் ஏகோபித்த உணர்வுகளால் சூட்டப்பட்டது.

எம்.ஜி.ஆர். புகழுக்கு களங்கம்
கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை நிறுத்தி வந்த திமுக அரசு, தற்போது ஒரு படி மேலே சென்று, பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

மீண்டும் அடைமொழியை சேர்க்க வேண்டும்
இவ்வாறான செயல்களை தொடர்ந்து இந்த அரசு செய்யுமேயானால், அதற்கான பலனை திமுக விரைவில் அறுவடை செய்யும். மக்களால் சூட்டப்பட்ட புரட்சித் தலைவர் என்ற அடைமொழியை, அரசு விளம்பரங்களில் மீண்டும் சேர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்." எனப் பதிவிட்டு உள்ளார்.

ரூ.34.22 கோடி மதிப்பில் சதுக்கம்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் பகுதியில் CMDA நிதி உதவியுடன் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மத்திய சதுக்கத் திட்டத்தின் கீழ் ரூ.34.22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அழகுப்படுத்தப்பட்ட நில மேம்பாட்டு வசதிகள் மற்றும் சுரங்க நடைபாதையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

அழகான நடைபாதை
இங்கு நடந்து செல்பவர்களுக்கு நிழல் தரும் மரங்களும், கண்ணுக்கு குளிர்ச்சியான புல் தரையும், ரம்மியமான வெளிப்புற தோற்றமும், வரலாற்று சிறப்புமிக்க கட்டிங்களை மேலும் கலைநயத்துடன் காட்டு வகையில் சுற்றுபுறமும் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இவ்வழியாக செல்வோரை தன்பக்கம் ஈர்க்க மனதுக்கு இதமூட்டும் செயற்கை நீரூற்றுகள், வண்ண விளக்குகள், வாகனங்கள் ஓட்டிச்செல்வதற்கு அழகிய பாதைகள், அமர்ந்து பேசுவதற்கான கிராணைட் இருக்கைகளும் இந்த சதுக்கத்தில் உள்ளன.

லிஃப்ட் வசதியுடன் சுரங்கப்பாதை
சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முகப்பில் பல்லவன் சாலை மற்றும் ஈ.வே.ரா.பெரியார் சாலை சந்திப்பில் பாதசாரிகள் சாலையை கடக்க வசதியாக சுரங்க நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. முதியோர்கள், நோயாளிகளுக்காக லிஃப்ட், எஸ்கலேட்டர் வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்த புதிய சுரங்க நடைபாதை ஏற்கனவே ஈ.வே.ரா.பெரியார் சாலை குறுக்கே உள்ள சுரங்கப்பாதையுடன் இணைக்கப்பட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications