ஓபிஎஸ்ஸிடம் அதிமுக அலுவலக சாவியை தராதது ஏன்? காரணங்களை அடுக்கிய நீதிபதி.. முழு விபரம்
சென்னை: ஓ பன்னீர் செல்வத்திடம் அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்காதது ஏன் என்பது குறித்து நீதிபதி பல்வேறு காரணங்களை அடுக்கியுள்ளார்.
Recommended Video
சென்னை ராயப்பேட்டையில் அதிமுக அலுவலகத்தில் கடந்த 11-ஆம் தேதி நடந்த வன்முறையை அடுத்து அந்த அலுவலகத்திற்கு வருவாய் துறை சீல் வைத்தது. இதையடுத்து அதிமுக அலுவலகத்தின் சீலை அகற்ற கோரி ஓபிஎஸ் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு மீது இன்று நீதிபதி சதீஷ்குமார் தீர்ப்பளித்தார். அதில் அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிச்சாமியிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

சாவி
இந்த நிலையில் தங்களிடம் சாவியை ஒப்படைக்குமாறு ஓபிஎஸ் தரப்பு பல்வேறு வாதங்களை முன்வைத்த போதும் சாவியை அவர்களிடம் ஒப்படைக்காதது ஏன் என்பதற்கு நீதிபதி சதீஷ்குமார் அளித்த பல்வேறு காரணங்கள் மூலம் தெரியவருகிறது. நீதிபதி சதீஷ் குமார் தனது தீர்ப்பில், ஓ.பி.எஸ். அணி அதிமுக அலுவலகத்திற்கு செல்லும்வரை காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

லேசான தடியடி
பின்னரே லேசான தடியடியை நடத்தி உள்ளனர். பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களை திரட்டி ஆயுதங்களுடன் அலுவலகத்திற்குள் நுழைந்தது, வன்முறையை கட்டவிழ்த்தது போன்றவற்றை செய்திருக்க கூடாது. எடப்பாடி பழனிசாமியும் தனது ஆதரவாளர்களை கட்சி அலுவலகத்தில் அனுமதித்து இருக்கக் கூடாது.

சட்டம் ஒழுங்கு
இரு தலைவர்களும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை பற்றி கருத்தில் கொள்ளவில்லை. காவல்துறை உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த வன்முறை தடுக்கப்பட்டிருக்கும். பொதுக்குழு கூட்டத்தில் பெருமான்மையினரின் முடிவை உரிமையியல் நீதிமன்றம் ரத்து செய்யாத வரை, பொதுக்குழு முடிவே மேலோங்கி நிற்கும்.

ஓபிஎஸ் நீக்கம்
ஓ.பி.எஸ். நீக்கப்பட்டுள்ளதால் கட்சி அலுவலக கட்டடத்தின் மீதான சுவாதீன உரிமையை கோர முடியாது. கட்சியில் இரு பிரிவினருக்கு இடையிலான பிரச்சினை என்பது சொத்தில் சுவாதீனம் சம்பந்தப்பட்டதா, இல்லையா என்பது வருவாய் கோட்டாட்சியரின் உத்தரவில் குறிப்பிட்டு தெரிவிக்கப்படவில்லை.

மோதல்
மோதல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், மனதை செலுத்தாமல் இயந்திரத்தனமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஜூலை 5 முதல் 11ஆம் தேதி வரை கட்சி அலுவலகத்தில் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை என்பது, கட்சி அலுவலகம் ஒ.பன்னீர்செல்வம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறது.

காவல் துறை தாக்கல்
காவல்துறை தாக்கல் செய்த அறிக்கையில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி கட்டுப்பாட்டில்தான் அதிமுக அலுவலகம் இருந்ததும் தெளிவாகிறது. எனவே அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஆர்.டி.ஓ. உடனடியாக ஒப்படைக்க வேண்டும். அலுவலகத்திற்கு காவல்துறை 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

தீர்ப்பு விவரம்
ஒரு மாதத்திற்கு தனது ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களை எடப்பாடி பழனிசாமி அனுமதிக்கக் கூடாது. காவல்துறை தாக்கல் செய்த வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களை உயர் நீதிமன்ற பதிவுத்துறை பாதுகாக்க வேண்டும். சாவியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமென்ற ஓ.பி.எஸ். கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். ஆகியோரின் வழக்குகள் முடித்துவைக்கப்படுகிறது என தனது தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications