சசிகலாவை மீண்டும் எப்படி நம்புகிறார் ஓபிஎஸ்? - பதில் ‘பரம ரகசியம்’ - பன்னீர் வைக்கும் ‘பலே’ செக்!
சென்னை : தன்னை ஓரங்கட்டிய சசிகலாவை மீண்டும் சீனில் கொண்டு வர ஓ.பன்னீர்செல்வம் முயற்சிப்பது அவருக்கே எதிர்காலத்தில் சிக்கலை ஏற்படுத்துமே என்ற கேள்விக்கு ஓ.பன்னீர்செல்வத்திடம் 'ஒரு பரம ரகசிய' பதில் இருக்கிறதாம்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா குடும்பத்தினரின் குடைச்சலால் டென்ஷனாகி, 'தர்மயுத்தம்' நடத்திய ஓபிஎஸ், மீண்டும் சசிகலாவுடன் இணையத் துடிப்பது ஏன் என்பதுதான் எடப்பாடி பழனிசாமி தரப்பினரின் கேள்வி.
அந்தக் கேள்வி ஓபிஎஸ்ஸை ஆதரிக்கும் சாமானிய தொண்டர்களுக்கும் எழுந்திருக்கும். ஏன் ஓபிஎஸ்ஸுக்கே கூட எழுந்திருக்கக்கூடும். தொண்டர்களுக்குத் தெரியாத அந்த பதில், ஓபிஎஸ்ஸிடம் இருக்கிறது என்கிறார்கள்.
தனக்கு விரோதியாக இருந்தவரையே மீண்டும் நாடிச் செல்வதற்கு பின்னணியில், ஓபிஎஸ் நம்பும் ஒரு பயங்கரமான 'செக்' இருக்கிறதாம். அந்த செக் சுமார் 2000 கி.மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள டெல்லியில் இருக்கிறது.

அதிமுகவில் அடுத்தகட்டம்
அ.தி.மு.கவில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே கடும் அதிகார மோதல் நிலவி வருகிறது. இருவரின் கைகளும் மாறி மாறி ஓங்கி வருகின்றன. அதிமுக பொதுக்குழு செல்லாது என சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஓபிஎஸ்ஸுக்கு சாதகமான ஒரு உத்தரவைப் பிறப்பித்த நிலையில், அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. அந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வரவுள்ளது. அந்தத் தீர்ப்புதான் இந்த அதிகாரப் போட்டியின் அடுத்தகட்டத்தைத் தீர்மானிக்கும்.

மூவர் கூட்டணி
இதற்கிடையே, சசிகலாவுக்கும், டிடிவி தினகரனுக்கும் ஓபிஎஸ் அழைப்பு விடுத்த நிலையில், அவர்களும் அதற்கு பச்சைக்கொடி காட்டியிருப்பதால் இவர்கள் மூவரும் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. சசிகலாவோடு ஓ.பன்னீர்செல்வம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், சசிகலாவுக்கு நெருக்கமான பெண் பிரமுகர் ஒருவர் ஓ.பிஎஸ்ஸை நேரடியாகச் சந்தித்து சில வியூகங்கள் குறித்தும் பேசியிருக்கிறார். விரைவில், சசிகலாவும், ஓ.பன்னீர்செல்வமும் நேருக்கு நேர் சந்திப்பார்கள் என்றும் தகவல்கள் பரபரக்கின்றன.

பெரிய கேள்விக்குறி
இதெல்லாம் இருக்கட்டும், ஒரு பெரிய கேள்வி அனைவரின் மனதிலும் தொக்கி நிற்கிறது. அது, எடப்பாடி பழனிசாமியின் ஆதிக்கத்தை எதிர்த்து நிற்கும் ஓ.பன்னீர்செல்வம், ஏற்கனவே 2017ல் சசிகலா குடும்பத்தின் ஏகபோக ஆதிக்கத்தை எதிர்த்து 'தர்மயுத்தம்' செய்தவர். இப்போது ஈபிஎஸ் உடன் ஏற்பட்டிருக்கும் மோதலுக்கு சசிகலாவின் உதவியை நாடுவது கெட்டிக்காரத்தனமா? நாளையே சசிகலா, தினகரன் இணைந்து ஓபிஎஸ்ஸை ஓவர்டேக் செய்து கட்சியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரக்கூடும் என்ற ஐயமே ஓபிஎஸ்ஸுக்கு எழவில்லையா? எனும் கேள்விகள் எழுகின்றன.

சசிகலாவின் செயல்பாடுகள் எப்படி
இந்தக் கேள்விகள் நியாயமானதும் கூட. ஏனெனில் சசிகலா, இன்றும் தான் தான் கட்சியின் பொதுச் செயலாளர் எனக் கூறி வருகிறார். இப்போதும் கூட தனக்கு ஆதரவு திரட்டும் வகையில் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வருகிறார். ஒற்றைத் தலைமை தான் வரும், கட்சித் தலைமையை நான் கைப்பற்றுவேன் என தொடர்ந்து சூளுரைத்து வருகிறார். சசிகலா அதிமுகவில் இணைந்தால், அடுத்து அவரே பொதுச் செயலாளராக வர விரும்புவார். இது ஓபிஎஸ்ஸுக்கும் ஆபத்தாகத்தானே போய் முடியும் என்ற சந்தேகம் எல்லோருக்குமே எழுகிறது.

எப்படி நம்புகிறார் ஓபிஎஸ்?
எடப்பாடி பழனிசாமி, சசிகலாவை கிட்ட நெருங்க அஞ்சுவதே, அவர் தனது ஆதரவாளர்களை இழுத்து, தனக்கே ஆப்பு வைத்து விடுவார் என்ற அச்சத்தால் தான். இதனால் தான், சசிகலாவை அதிமுகவில் இணைப்பது என்ற பேச்சைக்கூட ஈபிஎஸ் விரும்பவில்லை. எடப்பாடி பழனிசாமியை விட நீண்டகாலமாக சசிகலாவை நன்கு அறிந்த ஓபிஎஸ் எப்படி, கண்மூடித்தனமாக சசிகலாவை நம்பி, மீண்டும் அழைக்கிறார்? அவருடன் கைகோர்த்துச் செயல்பட நினைக்கிறார்? இன்றைய சூழலுக்காக அவரை அனுமதித்தால், நாளை மீண்டும் ஓரங்கட்டப்படும் சூழல் வந்தால் என்ன செய்வார்? என்ற கேள்விகள் எழுகின்றன.

ஓபிஎஸ்ஸிடம் இருக்கும் பதில்
அரசியல் பார்வையாளர்கள் பலருக்கும் எழும் கேள்வி ஓ.பன்னீர்செல்வத்திற்கும் எழாமலா போகும்? அதில் தான் ஓபிஎஸ் ஒரு ராஜதந்திரத்தைக் கையாண்டு வருகிறார் என்கிறார்கள். தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் முழுமையாக தன் பக்கம் ஆதரவைக் குவிக்க சசிகலாவின் உதவி கட்டாயம் ஓபிஎஸ்ஸுக்கு தேவை. சசிகலாவுடன் இணைவதால் ஆட்டோமேட்டிக்காக பலம் பெருகும் என்பதால், மற்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களையும் எளிதாக இழுத்துவிடலாம். அதனால்தான், அவரது தயவை நாடுகிறார் என்கிறார்கள்.

செக் இருக்கு
அதேநேரம், சசிகலா, கட்சியை கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டால் என்ன செய்வது? அதற்குத்தான் 2000 கி.மீட்டருக்கு அப்பால் டெல்லியில் இருக்கிறது பாஜக தலைமை. ஓபிஎஸ்ஸின் ஒவ்வொரு நகர்வுக்கும் பின்னால் டெல்லியின் கை இருக்கிறது. சசிகலா, தினகரன் அதிமுகவுக்கு ஆதரவு தரவேண்டும் என்பதே டெல்லியின் பிளான். சசிகலா அதிமுகவுக்குள் வந்தாலும், அவரை டெல்லி தலைமை டீல் செய்துகொள்ளும், டெல்லியை மீறி சசிகலாவால் தன்னை ஓவர்டேக் செய்ய முடியாது என முழுமையாக நம்புகிறாராம் ஓபிஎஸ்.

ஓபிஎஸ் கணக்கு
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றவர் என்பதால், சசிகலாவை ஆட்சி அதிகாரத்தில் வைப்பதை பாஜக விரும்பாது. எனவே தனது அதிகாரத்துக்கு எந்தச் சிக்கலும் வராது. கௌரவ பதவியை மட்டும் சசிகலாவுக்கு கொடுத்துவிட்டு, பாஜகவின் ஆதரவோடு அதிகாரத்தில் வீற்றிருக்கலாம் என்பதே ஓபிஎஸ்ஸின் கணக்கு. இந்தக் கணக்கு காரணமாகவே, இத்தனை பட்ட பிறகும் சசிகலாவுடன் கைகோர்க்க ஓபிஎஸ் தயாரானார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.












Click it and Unblock the Notifications