அந்த 4 பேர்.. பதவிக்கு ஆபத்தா? ‘சேச்சே..’ ராதாகிருஷ்ணனுக்கு கிடைத்த முக்கிய பொறுப்பு! பின்னணி என்ன?
சென்னை : ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேரில் ஒருவரான ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்க்கு சிக்கல் ஏற்படும் என கருதப்பட்ட நிலையில், அவருக்கு முக்கியமான பொறுப்பையும் அளித்தது தமிழக அரசு.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தலைவர் பொறுப்பு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியிடம் இருந்து உணவுத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணனுக்கு சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டது.
ஜெ.ராதாகிருஷ்ணன், ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையால் சர்ச்சையில் சிக்கி இருக்கும் நிலையில், அமைச்சரிடம் இருந்த பதவி அவருக்கு மாற்றப்பட்டது குறித்து சில தகவல்கள் உலா வருகின்றன.
20 பெண்கள் பலாத்காரம்! ஐஏஎஸ் அதிகாரி மீது பரபர புகார்.. ஊழியரின் பகீர் வாக்குமூலம்! அந்தமான் கொடூரம்

டிஎன்சிஎஸ்சி தலைவர்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத் தலைவர் பொறுப்பு, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணியிடம் இருந்து உணவுத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணனுக்கு சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டது. தமிழக உணவுத் துறையின் கீழ் இயங்கும் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் (டிஎன்சிஎஸ்சி) தலைவராக கடந்த 2014 வரை கூட்டுறவு, உணவுத்துறை செயலர்களே இருந்தனர். அதிமுக ஆட்சியில், இந்த பொறுப்பு செயலரிடம் இருந்து, அமைச்சராக இருந்த ஆர்.காமராஜுக்கு மாற்றப்பட்டது.

பொறுப்பு மாற்றம்
திமுக ஆட்சி வந்த பிறகும் இந்த நடைமுறை மாறாமல் இருந்து வந்தது. உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணியே நுகர்பொருள் வாணிபக் கழக தலைவராக இருந்தார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு டிஎன்சிஎஸ்சி தலைவர் பொறுப்பை அமைச்சரிடம் இருந்து உணவுத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணனுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இது பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

ஆறுமுகசாமி ஆணையம்
குறிப்பாக, ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசமை ஆணைய அறிக்கையில் ஜெ.ராதாகிருஷ்ணனும் குற்றம்சாட்டப்பட்டிருந்தார். ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் சென்றால், அது இந்திய மருத்துவர்களை அவமதிக்கும் செயல். சுகாதாரத்துறை செயலராக தன்னால் அதை அனுமதிக்க முடியாது என்று ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாக ஆறுமுகசாமி ஆணையம் பதிவு செய்துள்ளது. கால்நடை மருத்துவரான ராதாகிருஷ்ணன், முதல்வராக இருந்தவரை காப்பாற்ற முடியாமல் இப்படி பேசியதால் அவரை மருத்துவர் என்று கூறாமல் இருப்பதே உகந்தது என்றும் விமர்சித்திருந்தது ஆறுமுகசாமி ஆணையம்.

பதவிக்கு சிக்கல்?
சசிகலா, முன்னாள் அதிமுக அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோருடன் அப்போதைய சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணனையும் விசாரிக்க வேண்டும் என ஆணையம் பரிந்துரை செய்துள்ளதால் அவர் தற்போது வகித்து வரும் உணவுத்துறை செயலர் பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஜெ.ராதாகிருஷ்ணன் மீது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அரசு சட்ட ஆலோசனைகளை தொடங்கி இருப்பதாகவும் தகவல் வெளியானது.

கூடுதல் பொறுப்பு
இந்த நிலையில் தான் அமைச்சர் வகித்து வந்த டிஎன்சிஎஸ்சி தலைவர் பொறுப்பு துறை செயலரான ராதாகிருஷ்ணனுக்கு மாற்றப்பட்டது. ராதாகிருஷ்ணன் வகித்து வரும் பதவிக்கே சிக்கல் எனக் கூறப்பட்ட நிலையில், அவருக்கு கூடுதல் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறதே என பலரும் வியந்தனர். ஏன் இந்த மாற்றம், எதற்காக இப்படி நடந்தது என்பது குறித்து திமுக வட்டாரத்தில் சில செய்திகள் அடிபடுகின்றன.

திமுக சீனியருக்கு
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தலைவர் பொறுப்பை திமுக மூத்த நிர்வாகி ஒருவருக்கு வழங்க முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்காக அமைச்சரிடம் இருந்து அந்தப் பொறுப்பைப் பெற்றால், அது அமைச்சர் மீதான நடவடிக்கை என்பது போல் மாறிவிடும் அபாயம் இருப்பதால், அந்தப் பொறுப்பை, சைலண்டாக செயலர் வசம் மாற்றி இருக்கிறார்களாம். விரைவில் அந்தப் பதவிக்கான நியமனம் நடக்கும் என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்.