
எடப்பாடி புலம்புவதற்கெல்லாம் பதில் சொல்லி நேரத்தை வேஸ்ட் செய்யமாட்டேன்! முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
தென்காசி: அரசியலில் இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக எடப்பாடி பழனிசாமி புலம்பி வருவதாகவும் அதற்கெல்லாம் தாம் பதில் சொல்ல விரும்பவில்லை எனவும் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருண்டுவிட்டதா நினைப்பதை போல் எடப்பாடி நினைத்து வருவதாக கிண்டல் அடித்தார்.
மேலும், இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது;
இமாச்சலில் ஆட்சியை பிடிக்கும் காங்கிரஸ்.. பிரியங்கா காந்தியின் முதல் அரசியல் வெற்றி.. என்ன வியூகம்?

எடப்பாடி புலம்பல்
ஒவ்வொருவருடைய தேவைகளையும் கேட்டுக் கேட்டு- ஒவ்வொரு பகுதியின் பிரச்சினையையும் அறிந்து, அறிந்து நிறைவேற்றித் தரும் அரசாக நம்முடைய அரசு செயல்பட்டு வருகிறது. இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சித் தலைவர், "திமுக ஆட்சிக்கு வந்ததும் எந்த சாதனையையும் செய்யவில்லை - எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை" என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். சில மாதங்கள் வரைக்கும் என்ன சொன்னார் என்றால், விடுபட்ட சில வாக்குறுதிகளை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டு "இதை நிறைவேற்றவில்லை, அதை நிறைவேற்றவில்லை" என்று சொல்லிவிட்டு இருந்தார், சொல்லிக்கொண்டு இருந்தார் என்று சொல்லக்கூடாது, புலம்பிக் கொண்டிருந்தார்.

பூனை கண்ணை மூடி
அதையும் நாம் நிறைவேற்றியதும் - என்ன சொல்லுவது என்று தெரியாமல் எதையுமே நிறைவேற்றவில்லை அப்படி என்று ஒரே வரியில் சொல்லி இருக்கிறார். பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருண்டுவிட்டதா நினைக்குமாம். அதுபோல எதிர்க்கட்சித் தலைவர் நினைத்துக் கொண்டு இருக்கிறார். இவர் வேண்டுமென்றால் கண்ணை மூடிக்கொண்டு இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டு மக்கள் 19 மாதத்துக்கு முன்பே விழித்துவிட்டார்கள்.

உதயசூரியன் காலம்
இருண்ட காலத்தை முடித்து வைத்து, உதயசூரியனின் காலத்தை உருவாக்கிவிட்டார்கள். எனவே, மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களின் எரிச்சல் வார்த்தைகளுக்கெல்லாம் நான் விரிவாக பதில் சொல்ல விரும்பவில்லை. நாங்கள் சொன்ன வாக்குறுதிகள் உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கே நேரம் கிடைக்கவில்லை. இதற்கெல்லாம் நாங்கள் பதில் சொல்லிக் கொண்டிருப்போம். ஏதோ அரசியலில் தாங்களும் இருக்கிறோம் என்று காட்டுவதற்காக நம்மை பற்றி விமர்சிக்கிறார்கள். ஆனால் எங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு நாங்கள் உண்மையாக இருக்கிறோம்.

புள்ளி விவரம்
ஒன்றிய அரசாங்கத்தின் சார்பில் சில நேரங்களில் வெளியாகக்கூடிய புள்ளிவிவரங்களை பார்த்தீர்கள் என்றால், தமிழ்நாட்டின் வளர்ச்சி கண்ணுக்குத் தெரியும். சில தன்னார்வ அமைப்புகள் வெளியிடும் அளவீடுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சி தெரியும். ஆங்கில ஊடகங்கள் வெளியிடும் கட்டுரைகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சியை பெருமைப்பட எழுதுகிறார்கள்.

மக்கள் வாழ்த்து
இவை அனைத்தும் தமிழ்நாடு உயர்ந்து வருகிறது - எல்லாத் துறையிலும் உயர்ந்து வருகிறது - எல்லாப் பிரிவினரையும் உயர்த்தி வருகிறது என்பதற்கான திட்டவட்டமான சான்றுகளாக அமைந்திருக்கிறது! இவை அனைத்துக்கும் மேலாக, பயனடைந்த மக்களுடைய மனங்களில் உருவாகி வரும் மகிழ்ச்சியை நான் பார்க்கிறேன். தென்காசியிலிருந்து இந்த இடத்திற்கு வர எவ்வளவு நேரம் ஆகும்? மிஞ்சி, மிஞ்சி போனால் ஒரு 15 நிமிடத்திற்கு வந்து சேர்ந்துவிடலாம். ஆனால் இங்கு வருவதற்கு நாங்கள் ஒன்றரை மணி நேரம் ஆகியிருக்கிறது. என்ன காரணம்? வருகிற வழியெல்லாம் சாலையின் இருபுறங்களிலும், ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள், இருமருங்கிலும் நின்றுகொண்டு என்னை வரவேற்றது மட்டுமல்ல, வாழ்த்தியது மட்டுமல்ல, இந்த ஆட்சி தான் தொடரவேண்டும், இந்த ஆட்சிதான் தொடரவேண்டும் என்று அவர்கள் என்னை ஊக்கப்படுத்திய அந்த காட்சியை நான் பார்த்தேன். இதுதான் நல்லாட்சியினுடைய அடையாளம்!