அரசு பள்ளி மட்டுமில்ல.. கோவையில் 23 இடங்களில் முகாம் நடத்தினோம் - ஆர்எஸ்எஸ் பரபர விளக்கம்
கோவை: அரசு பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். முகாம் நடத்தப்பட்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இருக்கும் நிலையில், தாங்கள் ஷாகா பயிற்சி நடத்தவில்லை என்றும் மொத்த 23 இடங்களில் சேவா நிகழ்ச்சிகளே நடத்தியதாகவும் அந்த அமைப்பு விளக்கமளித்துள்ளது.
பாஜகவின் சித்தாந்த அமைப்பான ஆர்.எஸ்.எஸ். நாடு முழுவதும் ஷாகா என்ற பெயரில் பயிற்சி முகாம்களை நடத்தி வருகிறது. இந்த முகாமில் மதவெறி ஊட்டப்படுவதுடன், ஆயுதப்பயிற்சிகள் அளிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
ஆனாலும், தமிழ்நாட்டின் பல இடங்களில் ஷாகா பயிற்சிகளை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர், பள்ளி சிறுவர்கள் தொடங்கி முதியோர்கள் வரை பலருக்கும் அளித்து வருகின்றனர். இதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் உள்ளன.

பள்ளிகளில் பயிற்சி
குறிப்பாக தமிழ்நாட்டின் பல்வேறு பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு சர்ச்சையாகி இருக்கின்றன. குறிப்பாக கன்னியாகுமரி, சென்னை, தஞ்சாவூர், கோவை என பல மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

கோவை அரசு பள்ளி
இந்த நிலையில் கோவையில் உள்ள தேவாங்க அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். ஷாகா பயிற்சி வகுப்பு நடத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காக்கி டவுசர் அணிந்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பயிற்சியில் ஈடுபடுவதை ரகசியமாக யாரோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட தற்போது அது வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

மாநகராட்சி விளக்கம்
அரசு பள்ளியில் 18 பேர் ஆர்எஸ்எஸ் உடை அணிந்து பயிற்சி வகுப்பில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கோவை மாநகர ஆணையர் பிரதாப் அளித்துள்ள விளக்கத்தில், "கோவை மாநகராட்சி பள்ளி வளாகங்களில் எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி தரப்படவில்லை. அரசு பள்ளியில் ஆர்எஸ்எஸ் பயிற்சி நடைபெற்றது குறித்து உரிய விசாரணை நடத்த அறிவுறுத்தி உள்ளோம்.

வழக்குப்பதிவு
அரசு பள்ளி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததற்காக மாநகராட்சி சார்பில் காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பள்ளி தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உள்ளோம்." என்றார். இது தொடர்பாக கோவை ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தபெதிக ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி வகுப்பு நடத்தப்பட்ட கோவை தேவாங்க அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம் முன்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கொடிகளை பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அந்த அமைப்பின் தலைவர் கு.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஆர்.எஸ்.எஸ். விளக்கம்
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இதுகுறித்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பு விளக்கம் கொடுத்துள்ளது. அதில், "ஆர்.எஸ்.எஸ் வருடத்திற்கு ஒரு முறை நடத்தும் சேவா தினத்தை முன்னிட்டு மாநகராட்சி பள்ளியில் இருந்த குப்பைகள் மற்றும் புதர்கள் அகற்றும் வேலையில் தொண்டர்கள் ஈடுபட்டனர். இந்த முகாமை திரித்து ஷாகா பயிற்சியை ஆர்.எஸ்.எஸ். நடத்தியதாக கூறுகின்றனர். கோவை முழுவதும் 23 இடங்களில் இப்படிப்பட்ட சேவா நிகழ்ச்சிகள் நடைபெற்றது." என்றனர்.


Click it and Unblock the Notifications
