சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்கப்படுகிறதா?.. இதுக்கு மத்திய அரசின் பதில் இதுதான்!
டெல்லி: நமது நாட்டின் மிக உயர்ந்த நீதித்துறை அமைப்பு உச்சநீதிமன்றமாகும். இந்தியாவின் உச்சநீதிமன்றம் தலைநகர் டெல்லியில் உள்ளது. நாட்டின் மிக முக்கியமான வழக்குகளுக்கு இங்குதான் தீர்வு காணப்படுகிறது.
இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்திற்கான தென் மாநில கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகிறது.

வழக்கறிஞரும் தி.மு.க., எம்.பி.,யுமான வில்சன் உள்பட பலர் இது தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இது தவிர தி.மு.க எம்.பி வில்சன் நாடாளுமன்றத்தில் உச்ச நீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் என்று தனிநபர் தீர்மானமும் கொண்டு வந்தார்.
இதற்கிடையே சுதந்திரத்திற்கு பின் முதல் முறையாக உச்ச நீதிமன்றத்தை விரிவுப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சென்னை, மும்பை மற்றும் கொல்கத்தாவிலும் உச்ச நீதிமன்றம் அமைய உள்ளது என்றும் இந்த முடிவினை எடுத்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள் என்று வாட்ஸ்-ஆப்பில் செய்தி ஒன்று வேகமாக பரவியது.
இந்த நிலையில் இந்த தகவலுக்கு மத்திய அரசு அதிரடியாக மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் துறை வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ' உச்சநீதிமன்ற கிளைகள் அமைப்பது தொடர்பாக வாட்ஸ்-அப்பில் செய்திகள் உலா வருகின்றன. இந்த செய்தி போலியானது, தவறானது' என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications