டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்- காணாமல் போன காங்.- புதிய தலைமை வருமா?'கலகத் தலைவர்கள்' இன்று ஆலோசனை

Google Oneindia Tamil News

டெல்லி: 5 மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ள நிலையில் கட்சி மேலிடத்துக்கு எதிரான கலகக் குரல்கள் வெடித்துள்ளன. இதனைத் தொடர்ந்து புதிய கட்சித் தலைமை, கட்சி கட்டமைப்பை அடியோடு மாற்றுவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்க அதிருப்தி தலைவர்கள் இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தல்களில் பாஜக அமோக வெற்றியை பெற்று ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி விஸ்வரூப வெற்றி பெற்று காங்கிரஸிடம் இருந்து ஆட்சியை பறித்திருக்கிறது.

சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது.. பஞ்சாப்பில் செஞ்சு காட்டிய சித்து, ராகுல், பிரியங்கா கோஷ்டி! சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது.. பஞ்சாப்பில் செஞ்சு காட்டிய சித்து, ராகுல், பிரியங்கா கோஷ்டி!

உ.பி. பரிதாப காங்.

உ.பி. பரிதாப காங்.

உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் வெறும் 2 இடங்களில்தான் காங்கிரஸ் வெற்றி பெற முடிந்தது. அதன் வாக்கு சதவீதமும் வெறும் 2.4% ஆக மோசமான நிலையில் உள்ளது. இத்தனைக்கும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில்தான் உ.பி.யில் தேர்தலை அந்த கட்சி எதிர்கொண்டது. எத்தனையோ போராட்டங்கள், பிரசாரங்கள் என பிரியங்கா காந்தி தீவிரம் காட்டிய போதும் மக்களின் நம்பிக்கையை காங்கிரஸ் கட்சியால் பெற முடியவில்லை. இனிமேலும் அக்கட்சியால் பெற முடியுமா? என்பதற்கும் கண்ணுக்கெட்டிய தொலைவுக்கு சாத்தியம் எதுவும் இல்லை.

யார் காரணம்?

யார் காரணம்?

பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருந்தது காங்கிரஸ். ஆனால் காங்கிரஸ் கட்சியில் நிலவிய அதி உச்ச கோஷ்டி பூசல் இப்போது அக்கட்சியை படுகுழிக்குள் தள்ளிவிட்டது. குறிப்பாக நவ்ஜோத்சிங்கின் ஆட்டத்தை காங்கிரஸ் மேலிடம் கண்டும் காணாமல் அல்லது கட்டுப்படுத்தாமல் விட்டதால் அம்மாநிலத்தில் பேரழிவை சந்தித்துள்ளது காங்கிரஸ். இத்தனைக்கும் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தின் மூலமான மகத்தான ஆதரவை காங்கிரஸ் தக்க வைக்கக் கூடிய வாய்ப்பு இருந்தது. விவசாய சட்டங்களுக்கு எதிராக அகாலி தளம் பாஜகவுடனான உறவை முறித்து கொண்ட போது அதனுடன் கூட்டணி வைக்க ஜன்னல்கள் திறந்திருந்தன. ஆனால் ஈகோ பிடித்த காங்கிரஸ் தலைவர்களின் போக்குகளால் உள்ளதும் போச்சுடா என்ற நிலையில் உள்ளது காங்கிரஸ்.

அதிகார மோகம்

அதிகார மோகம்

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆளும் பாஜக மீது மக்களுக்கு அதிருப்தி இருந்தது. அதனைத்தான் முதல்வர் புஷ்கர் தாமி படுதோல்வியும் காட்டுகிறது. ஆனால் மக்களின் அதிருப்தியை அறுவடை செய்து ஆட்சியை பிடிப்பதில் கவனம் செலுத்தவில்லை காங்கிரஸ் தலைவர்கள். குறிப்பாக ஹரீஷ் ராவத் போன்ற சீனியர்கள் முதல்வர் நாற்காலிக்காக அடித்துக் கொண்டதனை மக்கள் ரசிக்கவில்லை. அதனால்தான் ஹரீஷ் ராவத்தையும் தோற்கடித்திருக்கின்றனர் வாக்காளர்கள்.

காணாமல் போன காங்.

காணாமல் போன காங்.

மணிப்பூர், கோவா மாநிலங்களில் 2017 தேர்தலின் போதே காங்கிரஸ் மேலிடம் கோட்டைவிட்டுவிட்டது. இந்த மாநிலங்களில் இருந்த காங்கிரஸ் தலைவர்கள் எல்லாம் கட்சியைவிட்டே வெளியேறிப் போயினர். பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் என தங்களுக்கு வாய்ப்பான கட்சிகளில் அந்த தலைவர்கள் ஐக்கியமாகினர். இதனால் மணிப்பூரிலும் கோவாவிலும் இருந்த இடம் தெரியாமல் காங்கிரஸ் துடைத்தெறியப்பட்டுவிட்டது.

கலகத் தலைவர்கள் ஆலோசனை

கலகத் தலைவர்கள் ஆலோசனை

இந்நிலையில் மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சசிதரூர் தமது ட்விட்டர் பக்கத்தில், காங்கிரஸ் கட்சியில் சீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டிய தருணம் இது. இப்போதாவது மக்கள் நம்பிக்கையைப் பெறக் கூடிய செயல்திட்டத்தை முன்வைக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார். அதேநேரத்தில் தேர்தல் தோல்வி குறித்து செயற்குழுவில் விவாதிக்க வேண்டும் என்கிற சம்பிரதாய சடங்கு குரல்களும் காங்கிரஸில் கேட்கிறது. இத்தகைய சம்பிரதாயங்கள் ஒருபோதும் காங்கிரஸுக்கு ஆக்சிஜனை கொடுக்கப் போவது இல்லை. இதனிடையே காங்கிரஸில் சீரமைப்பு தேவை; வலுவான தலைமை தேவை என வலியுறுத்தும் அதிருப்தி தலைவர்கள் இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சும் தலைவர் ஒருவர் வராமல் போனால் சிங்கிள் டிஜிட் இடங்கள் இனி பூஜ்ஜியங்களாக மாறுவதைத் தடுக்கவே முடியாது என்பதுதான் அரசியல் பார்வையாளர்களின் கருத்து.

English summary
Congress G 23 Leaders Meeting Today News in Tamil: 5 மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ள நிலையில் கட்சி மேலிடத்துக்கு எதிரான கலகக் குரல்கள் வெடித்துள்ளன. இதனைத் தொடர்ந்து புதிய கட்சித் தலைமை, கட்சி கட்டமைப்பை அடியோடு மாற்றுவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்க அதிருப்தி தலைவர்கள் இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X