"இது லிஸ்ட்லயே இல்லையே.." எனக்கு 4 குழந்தைகள் இருக்கவும் காங்கிரஸ்தான் காரணம்.. பாஜக எம்பி ரவி கிஷன்
டெல்லி: பிரபல போஜ்புரி நடிகரும் பாஜக எம்பியுமான ரவி கிஷன், தான் நான்கு குழந்தைகள் பெற்றுக் கொள்ளக் காங்கிரஸ் தான் காரணம் என்று கூறியுள்ளது இணையத்தில் வேகமாக உருவாக்கியுள்ளது. இதற்கு அவர் வினோதமான ஒரு காரணத்தையும் கொடுத்துள்ளார்.
உலகிலேயே அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடுகள் பட்டியலில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் இப்போது மக்கள் சுமார் 138 கோடி மக்கள் உள்ளனர்.
நமது நாட்டின் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இன்னும் சில மாதங்களில் சீனாவின் மக்கள் தொகையைக் கூட இந்தியா ஓவர்டேக் செய்துவிடும் எனச் சொல்லப்படுகிறது. அந்தளவுக்கு நமது நாட்டின் மக்கள் தொகை வேகமாக வளர்ந்து வருகிறது.

மக்கள் தொகை
மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மக்கள் தொகை இப்படித் தொடர்ந்து அதிகரித்து வந்தால், ஏகப்பட்ட பிரச்சினைகள் ஏற்படலாம் என அவர்கள் எச்சரித்து வருகின்றனர். குடும்பக் கட்டுப்பாடு உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக மத்திய அரசு தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இது ஓரளவுக்குப் பலன் தந்த போதிலும், முழுமையாகப் பலன் தரவில்லை.

மக்கள்தொகை கட்டுப்பாட்டுச் சட்டம்
மத்திய பாஜக அரசு மக்கள்தொகை கட்டுப்பாட்டுச் சட்டத்தைக் கொண்டு வர முயல்கிறது. இதன் மூலம் மக்கள்தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்பது பாஜகவின் வாதம். இதற்கிடையே பிரபல போஜ்புரி நடிகரும் பாஜக எம்பியுமான ரவி கிஷன், தான் நான்கு குழந்தைகள் பெற்றுக் கொள்ளக் காங்கிரஸ் தான் காரணம் என்று கூறியுள்ளது சலசலப்பை உருவாக்கியுள்ளது. 53 வயதான ரவி கிஷன் உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் இருந்து எம்பியாக தேர்வானவர். இந்தியா டுடே குழுமத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தான் அவர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.

காங்கிரஸ் தான் காரணம்
அந்த நிகழ்ச்சியில் மக்கள்தொகை கட்டுப்பாட்டு மசோதா குறித்துப் பேசிய ரவி கிஷேன், "காங்கிரஸ் கட்சி முன்னரே மக்கள்தொகை கட்டுப்பாட்டு மசோதாவை கொண்டு வந்திருந்தால், நான் 4 குழந்தைகளைப் பெற்றிருக்க மாட்டேன். நாங்கள் நிறுத்தி இருப்போம்.. எனக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.. இது எனது தவறில்லை.. காங்கிரஸ் கட்சி மசோதாவை கொண்டு வந்திருந்தால்.. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த சட்டம் இருந்தால், நான் நான்கு குழந்தைகளைப் பெற்றிருக்க மாட்டேன்.

சீனாவுடன் ஒப்பீடு
இந்த விவகாரத்தைக் காங்கிரஸ் கட்சி இன்னுமே சீரிஸசாக கையாண்டிருக்க வேண்டும். இப்போது நாம் எதிர்கொண்டுள்ள மக்கள் தொகை அதிகரிப்பு பிரச்சினைக்குக் காங்கிரஸ் கட்சிதான் காரணம், ஏனெனில் அப்போது ஆட்சியில் இருந்தது அவர்கள் தான். சீனா வெற்றிகரமாக மக்கள்தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்தியது. அதேபோல நமது நாட்டிலும் முந்தைய அரசுகள் சிந்தித்திருந்தால், இந்த பிரச்சினையைச் சமாளித்திருக்கலாம். பல தலைமுறைகள் போராடியிருக்காது.

பலன் கிடைக்கும்
இந்த விவகாரத்தில் நிச்சயம் பல்வேறு மாறி மாறி குற்றஞ்சாட்டிக் கொள்வார்கள். ஆனால் இதுபோன்ற சட்டங்கள் இருந்தால் 20-25 ஆண்டுகளுக்குப் பிறகு நமக்குப் பலன் கிடைக்கும். நாட்டில் வளங்கள் குறைந்து வருவதால் மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவது முக்கியமாகிறது. வரும் காலத்தில் இதுபோன்ற சட்டங்களால் சமூகத்திற்கே பலன் கிடைக்கும். நாடாளுமன்றத்தில் இது தொடர்பாகத் தனிநபர் மசோதாவைக் கொண்டு வர உள்ளேன்" என்று அவர் தெரிவித்தார்.

மக்கள்தொகை கட்டுப்பாட்டு மசோதா
மக்கள்தொகை கட்டுப்பாட்டு மசோதா 2019ஆம் ஆண்டில் ராஜ்யசபாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. விரைவில் இந்தியா மக்கள் தொகை சீனாவை ஓவர்டேக் செய்யும் என்பதால் அதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு இந்த மசோதாவை கொண்டு வந்தது. இரண்டு குழந்தைகளை மட்டுமே பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு இந்தச் சட்டத்தின் கீழ் பல சலுகைகள் கிடைக்கும். வரிச் சலுகைகள், வேலைவாய்ப்புப் பலன்கள் வழங்கப்படும்.












Click it and Unblock the Notifications