இந்து மதத்துக்கு எதிராக கருத்து: பதவியில் இருந்து விலகிய டெல்லி அமைச்சரிடம் போலீஸ் இன்று விசாரணை
டெல்லி: டெல்லியில் மதமாற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இந்துக்களுக்கு எதிராக பேசிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம் தன் பதவியில் இருந்து விலகினார். தற்போது அவரிடம் இன்று போலீசார் விசாரணை நடத்த உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த 5 ஆம் தேதி நடைபெற்ற விஜயதசமி நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் இந்து மதத்தில் இருந்து புத்த மதத்திற்கு மாறினர்.
அப்போது, 'இந்துக் கடவுள்கள் மீது நம்பிக்கை இல்லை என்றும் அவர்களை வழிபட மாட்டேன்' எனவும் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

நான் வழிபட மாட்டேன்
இந்த நிகழ்ச்சியில் டெல்லியின் முன்னாள் சமூக நலத்துறை அமைச்சர் ராஜேந்திர பால் கவுதமும் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''எனக்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் மீது நம்பிக்கை இல்லை. எனவே அவர்களை நான் வழிபட மாட்டேன். கடவுளின் அவதாரமாக கூறப்படும் ராமர் மீதும், கிருஷ்ணர் மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை. இதனால், அவர்களையும் நான் வழிபட போவது இல்லை. விஷ்ணுவின் அவதாரமே புத்தர் எனக் கூறப்படுவது பொய்ப் பிரச்சாரம்'' என்றார்.

பாஜக கடும் எதிர்ப்பு
டெல்லி சமூக நலத்துறை அமைச்சரின் இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதோடு சர்ச்சையை கிளப்பியது. பாஜகவும் இவரது பேச்சுக்கு கடுமையான விமர்சனங்களை முன்வைத்து இருந்தது. குஜராத்தில் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்து வரும் ஆம் ஆத்மிக்கு எதிராக இந்த விவகாரத்தை பாஜக பயன்படுத்தியது. குஜராத்தில் பல இடங்களில் கெஜ்ரிவால் இந்துக்களுக்கு எதிரானவர் என்ற வாசகங்களுடன் போஸ்டர்களையும் ஓட்டியிருந்தது. இதனால், டெல்லியில் ஆளும் ஆத்மி கட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.

கவுதம் விளக்கம்
அமைச்சர் கவுதமின் கருத்து ஆம் ஆத்மி கட்சி இந்துக்கள் மீதுள்ள கொண்டுள்ள வெறுப்பை காட்டுகிறது என்று பாஜக விமர்சித்தது. தொடர்ந்து தனது கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து அமைச்சர் கவுதம் விளக்கம் அளித்தார். இது தொடர்பாக கவுதம் கூறுகையில், ''தனிப்பட்ட முறையில் நான் அனைத்து தெய்வங்களையும் மதிக்கிறேன். எந்த தெய்வத்தையும் அவமதிக்க வேண்டும் என கனவில் கூட நினைத்தது இல்லை'' என்றார்.

கவுதமிடம் இன்று போலீஸ் விசாரணை
இருந்தாலும் அவருக்கு எதிரான நெருக்கடி குறையவில்லை. இதையடுத்து, அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம் நேற்று முன் தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில், மத மாற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தொடர்பாக டெல்லி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பால் கவுதமிடம் இன்று போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். எனினும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது தொடர்பாக ஏற்கனவே ராஜேந்திர பால் கவுதமிடம் போலீசார் அவரது வீட்டிற்கே சென்று சில கேள்விகளை எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications