வங்கக் கடலில் உருவாகும் ஜவாத் புயல் எங்கே போகுது பாருங்க.. தமிழ்நாட்டுக்கு மழை வருமா?
டெல்லி: வங்கக்கடலில் உருவாகியுள்ள ஜவாத் புயல் செல்லும் பாதை எது, எங்கெல்லாம் அதிக மழைப் பொழிவு இருக்கும் என்பது பற்றிய வரைபட முன்னெச்சரிக்கை தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
வங்கக்கடலில் அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருக்கிறது. அது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி வெள்ளிக்கிழமையான நாளை, புயலாக வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
3 வேளாண் சட்டங்கள் ரத்து.. மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கினார் குடியரசு தலைவர்
இந்த புயலுக்கு ஜவாத் என்று பெயரிடப்பட்டுள்ளது.

மக்களிடம் கேள்வி
இந்த புயல் காரணமாக, சென்னை உட்பட தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழை இருக்குமா என்ற கேள்விகள் பரவலாக மக்களிடம் எழுந்துள்ளன. ஏனென்றால் நவம்பர் மாதம் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 23 நாட்கள் தொடர்ந்து மழை இருந்துள்ளது. 7 நாட்கள்தான் மழை இல்லாத நாட்களாக இருந்தது.

சென்னை மழை வெள்ளம் வாய்ப்பு இல்லை
ஜாவத் புயல் காரணமாக மீண்டும் மழை, வெள்ளம் ஏற்பட்டால் சென்னை தாங்குமா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. ஆனால் ஜவாத் புயல் எங்கே செல்லும், எந்த வழியாக செல்லும் என்பது பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி பார்த்தால், சென்னை உட்பட தமிழகத்திற்கு இந்த புயல் காரணமாக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை. புயல், தாக்கத்தால் லேசான மழை வேண்டுமானால் இருக்கக்கூடும்.

ஆந்திரா நிலவரம்
இந்த புயலின் தாக்கம், வடக்கு ஆந்திர பிரதேசம், ஒடிசா மாநிலம், மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகளில் தான் அதிகமாக மழையை ஏற்படுத்தப் போகிறது. எனவே வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஆந்திர மாநிலத்திற்கு தேசிய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் பிறப்பித்திருக்கிறது. சில மாவட்டங்களில் ரெட் அலர்ட் விட வைக்கும் அளவுக்கு அதிக மழைப்பொழிவை கொடுக்கக் கூடும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது.

மழைக்கு ஸ்டாப்
ஒடிசா மாநிலத்தில் 7 மாவட்டங்களுக்கு, டிசம்பர் 4ம் தேதி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த புயலின் தாக்கம் கஞ்சம், பூரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அங்கு மிக அதிக அளவிற்கு மழை பெய்யக்கூடும். தமிழகத்திற்கு இனி மழை பிரேக் விடும் என்று பல தனியார் வானிலை ஆய்வாளர்களும் கணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.