பாஜக ஆட்சியில் குறைந்த வன்முறை! பிரதமர் மோடியை பாராட்டி ஓய்வு நீதிபதிகள் உள்பட 197 பேர் கடிதம்!
டெல்லி: பாஜக ஆட்சியில் வகுப்புவாத வன்முறைகள் குறைந்துள்ளது எனக்கூறி பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டி ஓய்வு பெற்ற நீதிபதிகள், மாஜி ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட 197 பேர் கடிதம் எழுதியுள்ளனர். இதன்மூலம் 2 நாட்களுக்கு முன்பு பாஜக வெறுப்பு அரசியலை கைவிட வேண்டும் என 108 முன்னாள் அதிகாரிகள் எழுதிய கடிதத்துக்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களில் இந்த மாத துவக்கத்தில் இருந்து வன்முறைகள் வெடித்தன. வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.
மேலும் ஆக்கரமிக்கப்பட்ட நிலத்தில் வீடு, கடைகள் கட்டியதாக மத்திய பிரதேசம், டெல்லி ஜஹாங்கிர்புரியில் முஸ்லிம்களின் வீடுகள் இடிக்கப்பட்டன. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் நாட்டில் வெறுப்பு அரசியல் அதிகரித்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன.

108 பேர் கடிதம்
இதன் தொடர்ச்சியாக முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (என்எஸ்ஏ) சிவசங்கர் மேனன், முன்னாள் வெளியுறவு செயலாளர் சுஜாதா சிங், முன்னாள் உள்துறை செயலாளர் ஜிகே பிள்ளை, டெல்லி முன்னாள் லெப்டினன்ட் ஆளுநர் நஜீப் ஜங், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் முதன்மை செயலாளர் டிகேஏ நாயர் உள்பட 108 பேர் கையெழுத்திட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பி இருந்தனர். அந்த கடிதத்தில் பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தனர்.

வெறுப்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி
அதாவது, ‛‛இந்தியாவில் நாம் இதற்கு முன்பு இல்லாத அச்சுறுத்தலை எதிர்கொள்கிறோம். அரசியலமைப்புக்கு அச்சுறுத்தல் உள்ளது. இதனால் மவுனம் கலைத்து தீர்வு காண வேண்டும். உங்கள் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களில் மிகவும் ஆர்வத்துடன் வெறுப்பு அரசியல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த வெறுப்பு அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும். அரசியலமைப்பு அமைப்புகளை சிதைக்கும் நோக்கிலான செயல் தான் கோபத்தையும், வேதனையையும் வெளிகாட்ட வைத்துள்ளது. முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பும், தீங்கு செய்யும் மனப்பான்மையும் அதிகரித்துள்ளது. இதனால் உங்கள் மவுனத்தை கலைத்து வெறுப்பு அரசியலுக்கு தீர்வு காண உங்கள் கட்சியினருக்கு அறிவுரை வழங்க வேண்டும்'' என குறிப்பிடப்பட்டு இருந்தது.

197 பேர் கடிதம்
இந்நிலையில் தற்போது பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்னொரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதில் 8 முன்னாள் நீதிபதிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்பட பல்வேறு அரசு உயர் பதவிகளில் செயல்பட்ட 97 பேர், முன்னாள் ஆயுதப்படை அதிகாரிகள் 92 பேர் என மொத்தம் 197 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.

கடிதத்தில் பாராட்டு
இந்த கடிதம் மூலம் பிரதமர் நரேந்திர மோடிக்கு வெளிப்படையான ஆதரவு அளித்து உள்ளதோடு, முந்தைய கடிதம் எழுதியவர்களை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். மேலும், பாஜக ஆட்சியில் நாட்டில் வகுப்புவாத வன்முறைகள் குறைந்துள்ளதாக பாராட்டியுள்ளனர். இந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

உண்மையான பற்று இல்லை
வெறுப்பு அரசியலை கைவிட வேண்டும் என கூறிய கடிதத்தின் மூலம் சிலர் பொதுமக்களின் நம்பிக்கையை திசைதிருப்ப முயற்சிக்கின்றனர். அவர்களது கடிதத்தின் மூலம் நல்ல விஷயத்துக்கான சமிக்ஞை துளியும் இல்லை. மேலும் மக்களிடம் எதிர் மனநிலையை உருவாக்க வெறுப்பை விதைக்க முயற்சிக்கின்றனர். நாட்டின் மீது அக்கறையுள்ள நபர்கள் என காட்டிக்கொள்ளும் அவர்கள் நாட்டின் மீது கொண்ட உண்மை பற்று காரணமாக கடிதம் எழுதியதாக தெரியவில்லை. தேர்தல் வெற்றிகளை பொறுத்து கொள்ள முடியாமல் உங்கள் அரசின் மீதான விரக்தியை வெளிப்படுத்த இவர்கள் மூலம் சிலர் முயன்றுள்ளனர்.

வகுப்புவாத வன்முறைகள் குறைவு
ஏனென்றால் மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பின் நடந்த வன்முறைகள் குறித்து இவர்கள் பேசவில்லை. இதுபோல் வெவ்வேறு மாநிலங்களில் பிரச்சனைகளும், மனித உரிமை மீறல் சம்பவங்களும் நடக்கின்றன. இது மதத்துக்கு அப்பாற்பட்டு ஏராளமான ஏழைகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் உள்ளது. இந்த விஷயங்களில் அவர்கள் மவுனம் சாதிக்கின்றனர். இத்தகைய ஒருதலைபட்சமான போக்கு என்பது அவர்களின் இழிவான மற்றும் கொள்கையற்ற அணுகுமுறையை காட்டுகிறது. மேலும் பாஜக அரசின் கீழ் வகுப்புவாத சம்பவங்கள் குறைந்துள்ளன. இது பொதுமக்களால் பாராட்டப்படக்கூடியது'' என தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications