ஐ.நா.வில் சீர்திருத்தங்கள்- ஒரு முன்னேற்றமும் இல்லை, இன்னும் 75 ஆண்டுகள் ஆகுமோ? இந்தியா பாய்ச்சல்!
புதுடெல்லி: ஐக்கிய நாடுகள் அவையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தையை அடுத்த கூட்டத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட விவகாரத்தில், ஐ.நாவை இந்தியா கடுமையாக விமர்சித்துள்ளது.
உலகின் தற்போதைய நிலைமைக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என பல நாடுகள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றன. இதற்கான தகுதி உள்ளதால், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக சேர்வதற்கு இந்தியா தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

வீட்டோ அதிகாரம்
ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளாக சீனா, பிரான்ஸ், ரஷியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன. இந்த நாடுகளுக்கு வீட்டோ அதிகாரமும் உள்ளன. தற்காலிக நாடுகளுக்கு இந்த வீட்டோ அதிகாரங்கள் கிடையாது. ஐக்கிய நாடுகளில் வீட்டோ அதிகாரம் எனப்படுவது, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பு நாடுகளாக இருக்கும் சீனா, பிரான்ஸ், ரஷியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் கொண்டுள்ள சிறப்பு அதிகாரம் ஆகும்.

இந்தியாவின் நீண்ட கால கோரிக்கை
இரண்டாம் உலகப்போரின் வெற்றிக்கு இந்த 5 நாடுகளின் பங்கு முக்கியமானது. ஐநா அமைக்கப்பட்ட 1946-ம் ஆண்டு முதல் வீட்டோ (தடுத்து நிறுத்தும்) அதிகாரம் பெற்ற நாடுகள் என்ற சிறப்பை இந்நாடுகள் பெறுகின்றன. இதன்படி பாதுகாப்பு சபையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் (இதர உறுப்பு நாடுகள்) ஆதரவு பெற்றிருந்தாலும் இந்த 5 நாடுகளில் எவரேனும் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தால் அந்தத் தீர்மானம் தோல்வியடையும்.
இத்தகைய அதிகாரம் மிக்க வீட்டோவில் சேருவதற்காக நிரந்தர உறுப்பு நாடாக வேண்டும் என்பது இந்தியாவின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. ஆனால், சீனா போன்ற நாடுகள் இந்தியாவின் முயற்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளன.

தொடர்ந்து வலியுறுத்தும் இந்தியா
21-ம் நூற்றாண்டுக்கு ஏற்றவாறு ஐ.நா அமைப்புகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. முக்கியமாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, அதில் இடமளிக்க வேண்டும் என்பதே இந்தியாவின் கோரிக்கையாக உள்ளது. ஆனால், இந்தியாவின் இந்த கனவு தொடர்ந்து தள்ளிப்போய்க்கொண்டுதான் இருக்கிறது

ஐ.நா மீது இந்தியா விமர்சனம்
இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் அவையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பாக அரசுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையை ஐக்கிய நாடுகள் அவையின் அடுத்த கூட்டத்திற்கு ஒத்திவைக்கப்பட்டதற்கு இந்தியா கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் வளர்ச்சியும் இல்லாத சூழலில், மீண்டும் அதற்கு உயிர் கொடுக்க நினைப்பது வீணான முயற்சி என சாடியுள்ளது. மேலும், ஐக்கிய நாடுகள் அவையின் நடைமுறை விதிகளை பயன்படுத்தாமல் எந்த ஆவண பதிவும் இன்றி நடைபெறும் பேச்சுவார்த்தையால் இன்னும் 75 ஆண்டுகள் கூட சீர்திருத்தத்தின் திசையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் ஐ.நா சபை செல்லக்கூடும் என்று சாடியுள்ளது.

ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து ஒரு நாடு கூட...
193 நாடுகள் உறுப்பினர்களாக கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் நேற்று வாய்மொழியில் ஒரு தீர்மானம் முன்னெடுக்கப்பட்டது. அதில், ஐக்கிய நாடுகள் அவையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பான அரசுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை 77-வது ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ஐநா பொதுச் சபையின் 76-வது அமர்வின் தலைவர் அப்துல்லா ஷாஹித் கூறுகையில், '' ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் என்பது மிகவும் நியாயமானது. அதேவேளையில் தாமதம் ஆன கோரிக்கையும் கூட. பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரித்து 57 ஆண்டுகள் ஆகின்றன. அப்போது ஐக்கிய நாடுகள் அவையின் உறுப்பு நாடுகள் எண்ணிக்கை 113. ஆனால், இன்று 193 ஆக உள்ளது. ஆனால், பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்த உறுப்பு நாடுகள் எண்ணிக்கை மாறாமல் அப்படியே உள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து ஒரு நாடு கூட இதில் பிரதிநிதித்துவம் பெறவில்லை"என்றார்.

ஜி 4 கூட்டமைப்பு நாடுகளின் கருத்து
இந்தியா, பிரேசில் , ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஜி 4 கூட்டமைப்பும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்கள் தவிர்க்க முடியாதது என்று கூட்டாக வலியுறுத்தி இருகின்றன. சிக்கலான மற்றும் அதிகரித்து வரும் சவால்களை சிறப்பாக கையாள ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்த்திருங்கள் கட்டாயம் என்பதே மேற்கண்ட நாடுகளின் கருத்தாக இருந்தது.












Click it and Unblock the Notifications