அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை தொடர்ந்து து.மு. மணீஷ் சிசோடியாவை கைது செய்ய சதி- அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி: டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினைத் தொடர்ந்து துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்படலாம் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருப்பது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், அன்னிய செலாவணி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அரசு ஊழியராக பணிபுரிந்த காலத்தில் அவர் மீதான புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.

மேலும் சத்யேந்தர் ஜெயினை அமலாக்கப் பிரிவு தற்போது காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. சத்யேந்தர் ஜெயின் கைது தொடர்பாக சில மாதங்களுக்கு முன்னரே அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரித்திருந்தார்.
பஞ்சாப் தேர்தல் பிரசாரத்தின் போது, பொய் வழக்கில் எங்களது அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை எந்த நேரத்திலும் போலீசார் கைது செய்யக் கூடும். மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைதான் இது என கூறியிருந்தார்.
இப்போது, டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவையும் கைது செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், வெகு விரைவில் மணீஷ் சிசோடியா கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. அவர் மீதும் பொய் வழக்கு போடப்பட இருக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications