ராஜ்யசபாவில் எதிரொலித்த ஆளுநர் விவகாரம்: பூஜ்ய நேரத்தை நிறுத்துங்கள்! பொங்கியெழுந்த திமுக எம்பிக்கள்
நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என். ரவி வெளிநடப்பு செய்ததைக் கண்டித்து திமுக எம்.பிக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
டெல்லி: நீட் விலக்கு மசோதவை ஆளுநர் திருப்பி அனுப்பியது குறித்து விவாதிக்க வேண்டும் என்று திமுக எம்பிக்கள் ராஜ்யசபாவில் கூச்சலிட்டனர். தமிழக எம்.பிக்களின் கோரிக்கை குறித்து விவாதிக்க அனுமதிக்க முடியாது என ராஜ்யசபா அவைத்தலைவர் வெங்கையா நாயுடு திட்டவட்டமாக கூறியதை அடுத்து திமுக எம்.பிக்கள் ராஜ்யசபாவை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆளுநர் ஆர்.என் ரவி நீண்ட காலமாக ஒப்புதல் அளிக்கவே இல்லை.
திமுக உள்ளிட்ட பல கட்சியினரும் நீட் விலக்கு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். நீண்ட கால தாமதத்திற்கு பிறகு, அந்த மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி உள்ளார்.

ஆளுநர் மாளிகை விளக்கம்
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களை இந்த மாசோதா பாதிக்கும் என்று ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது. பிப்ரவரி 1ஆம் தேதியே உரிய விளக்கத்துடன் சபாநாயகருக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டதாகவும் நீட் ரத்து மசோதாவை சட்டசபையில் மறுஆய்வு செய்ய ஆளுநர் மாளிகை அறிவுறுத்தி உள்ளது. இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுக எம்.பிக்கள் முழக்கம்
இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் நேற்று எதிரொலித்தது. லோக்சபாவில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, நீட் மசோதாவை திரும்ப பெற கோரி தமிழக எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பினர். தமிழகத்தின் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என அவையின் மையப்பகுதிக்கு சென்று முழக்கமிட்டனர்.

ஆளுநருக்கு அதிகாரமில்லை
நீட் மாசோதாவை தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில் அவருக்கு எதிராக தமிழக எம்.பிகள் லோக்சபாவில் அமளியில் ஈடுபட்டனர். மசோதாவை திருப்பி அனுப்ப ஆளுநருக்கு அதிகாரமில்லை என்று கூறினர் . 5 மாதங்களாக மசோதாவை கிடப்பில் போட்டு வைத்துவிட்டு தற்போது திருப்பி அனுப்பியது எந்த வகையில் நியாயம் என்று மக்களவையில் திமுக எம்.பி டி.ஆர்.பாலு ஆவேசமாக கேள்வி எழுப்பினார். இதையடுத்து, நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தமிழக எம்.பி.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

திருச்சி சிவா
இதற்கிடையே நீட் விலக்கு மசோதா குறித்து விவாதம் நடத்தக்கோரி மாநிலங்களவையில், திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளது. மாநிலங்களவை செயலரிடம் திமுக எம்.பி.யான திருச்சி சிவா இந்த ஒத்திவைப்பு நோட்டீஸை வழங்கியுள்ளார். அந்த மனுவில் மாநிலங்களவை அலுவல் நடவடிக்கைகளை ஒத்தி வைத்துவிட்டு விவாதிக்க வேண்டும் என திருச்சி சிவா குறிப்பிட்டுள்ளார்.

ஜீரோ ஹவரை நிறுத்துங்கள்
இதனிடையே இன்று காலையில் ராஜ்யசபா கேள்வி நேரத்துடன் தொடங்கியது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்பிக்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வு விலக்கு மசோதவை திருப்பி அனுப்பிய ஆளுநர் ரவியின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு வெங்கையா நாயுடு அனுமதிக்கவில்லை. ஜீரோ ஹவரை நிறுத்துங்கள் என்று திமுக எம்.பிக்கள் கூச்சலிட்டனர். இதனால் அவையில் அமளி ஏற்பட்டது.

வெங்கையா நாயுடு மறுப்பு
ஆளுநரின் செயல்பாடு குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் திமுக எம்.பி திருச்சி சிவா கோரிக்கை வைத்தார். கேள்வி நேரத்தின் போது விவாதிக்க அனுமதிக்க முடியாது என்று வெங்கையா நாயுடு உறுதியாக கூறினார். அதே நேரத்தில் குடியரசுத்தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசும் போது விவாதிக்கலாம் என்றும் தெரிவித்தார்.
Recommended Video

திமுக எம்.பிக்கள் வெளிநடப்பு
நீட் விலக்கு மசோதவை திருப்பி அனுப்பிய தமிழக ஆளுநர் ஆர் என் ரவியின் செயல்பாடுகளைக் கண்டித்து பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜ்யசபாவில் இருந்து திமுக எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர். நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என். ரவி பல மாதங்களாக கிடப்பில் போட்டதோடு தற்போது திருப்பி அனுப்பியுள்ளது தமிழக அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பை பற்ற வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications