'புலிட்சர்' விருது.. அமெரிக்கா செல்ல காஷ்மீர் பெண் பத்திரிகையாளர் தடுக்கப்படுவதாக விமர்சனம்!
டெல்லி: புலிட்சர் விருதுக்கு தேர்வாகியுள்ள காஷ்மீர் பெண் புகைப்பட பத்திரிகையாளரான சன்னா இர்ஷாத் மட்டூவை அமெரிக்கா செல்ல இந்தியா தடுத்து வருவதாக ஒரு தரப்பினர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
காஷ்மீரில் நடைபெறுவதாக கூறப்படும் மனித உரிமை மீறல், அடக்குமுறை ஆகியவற்றுக்கு எதிராக கட்டுரைகளையும், புகைப்படங்களையும் வெளியிட்ட காரணத்தாலேயே, அவர் அமெரிக்கா செல்ல தடுக்கப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் பாரீஸில் நடைபெறும் புகைப்பட கண்காட்சிக்கு செல்லும் போதும், இந்திய அதிகாரிகள் அவரை தடுத்தது குறிப்பிடத்தக்கது.
உலகையே அதிரவைத்த புகைப்படக் கலைஞருக்கு புலிட்சர் பரிசு.. இறந்த பிறகு 2வது முறையாக விருது!

புகைப்படங்கள்
காஷ்மீரில் பிரபல பத்திரிகையாளரான சன்னா இர்ஷாத் மட்டூ, அங்கு நடைபெறும் அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் ஆவார். இதனிடையே, புகைப்பட கலைஞர்கள் டேனிஷ் சித்திக் (மறைந்துவிட்டார்), அமித் டேவ், அட்னான் அபிடி உள்ளிட்ட ராய்ட்டர்ஸ் குழுவுடன் இணைந்து, இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா கால நெருக்கடிகளை புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டார் சன்னா இர்ஷாத். இந்த புகைப்படங்கள் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

புலிட்சர் விருது - தடுத்து நிறுத்தம்
இந்த சூழலில், இப்புகைப்படங்களுக்காக சன்னா இர்ஷாத்துக்கு அண்மையில் புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டது. பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்களுக்கு வழங்கப்படும் உலக அளவில் கெளரவமிக்க விருதாக புலிட்சர் கருது கருதப்படுகிறது. இந்த விருதை வாங்குவதற்காக அமெரிக்காவுக்கு செல்ல இருந்த சன்னா இர்ஷாத் டெல்லி விமான நிலையத்தில் கடந்த 18-ம் தேதி தடுத்து நிறுத்தப்பட்டார்.

"ஏன் தடுக்கிறீர்கள்?"
இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து சன்னா இர்ஷாத் ஒரு இணைய ஊடகத்துக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், "எதற்காக என்னை தடுக்கிறீர்கள் என பாதுகாப்பு அதிகாரிகளிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் எஸ்எஸ்பி சிஐடி மற்றும் காஷ்மீரின் சில அதிகாரிகளிடமிருந்து இதுதொடர்பாக தங்களுக்கு உத்தரவு வந்திருப்பதாக தெரிவித்தனர். எனக்கு எதிராக ஏதாவது வழக்கு இருக்கிறதா என்று நான் அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், அப்படி ஏதும் இல்லை என பதிலளித்தனர். எந்த வழக்கும், குற்ற்சாட்டும் இல்லாத போது என்னை ஏன் இந்திய அரசாங்கம் தடுத்து நிறுத்துகிறது? புலிட்சர் விருது பெற வேண்டும் என்பது எனது வாழ்நாள் கனவு. அது தற்போது நடந்த போதிலும், அந்த விருதை நான் வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது" என அவர் கூறினார்.

பத்திரிகையாளர் சங்கம் வலியுறுத்தல்
இதனிடையே, புலிட்சர் விருது பெற சன்னா இர்ஷாத் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம் குறித்து பிரஸ் கிளப் ஆப் இந்தியா பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதுகுறித்து அது வெளியிட்ட அறிக்கையில், "புலிட்சர் விருது வழங்க சன்னா இர்ஷாத்தை அனுமதிக்க மறுப்பது ஏன்? இதற்கு சரியான விளக்கத்தை மத்திய அரசு கொடுக்க வேண்டும். ஒருபுறம், காஷ்மீரை தேசிய நீரோட்டத்தில் இணைக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபடுகிறது. மறுபுறம், காஷ்மீர் மக்களை இந்தியாவில் இருந்து அந்நியப்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.