ஒற்றுமை... ரம்ஜான் தினத்தில் இந்து-முஸ்லிம்கள் இணைந்து ஊர்வலம்! கர்நாடக மடங்களில் மதநல்லிணக்கம்
கதக்: கர்நாடகத்தில் மதம்சார்ந்த பிரச்சனைகள் அடிக்கடி நடந்த நிலையில் ரம்ஜானையொட்டி இன்று கதக் மாவட்டம் கஜேந்திரகடா மற்றும் முண்டர்கி டவுன்களில் உள்ள மடங்கள் சார்பில் இந்து-முஸ்லிம்கள் ஒற்றுமை ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மதம் சார்ந்து இருபிரிவினர் மோதி கொள்வது கடந்த மாதம் அதிகரித்தது. டெல்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் உள்பட பல்வேறு மாநிலங்களில் ராமநவமி, அனுமன் ஜெயந்தி ஊர்வலம் நடந்தன.
இந்த ஊர்வலங்களின்போது இருதரப்பினர் மோதிக்கொண்டனர். இது கலவரமானது. வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதனால் சில இடங்களில் ஊரடங்கும் அமலானது.

கர்நாடகத்தில் எழுந்த பிரச்சனைகள்
முன்னதாக கர்நாடகத்திலும் மதம் சார்ந்த பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து செல்ல மாணவிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தொடர்ந்து பிரச்சனைகள் எழுந்தன. கோவில்களில் முஸ்லிம்களுக்கு கடை அமைக்க அனுமதி மறுக்கப்பட்டது. அதன்பிறகு ஹலால் இறைச்சி பிரச்சனை, முஸ்லிம் வியாபாரிகளிடம் பழங்கள் வாங்க கூடாது, முஸ்லிம்களின் வாகனங்களில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும் என்பன போன்ற பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சூறையாடப்பட்ட கடை
தார்வாரில் சில நாட்களுக்கு முன்பு அனுமன் கோவில் முன்பு முஸ்லிம் வியாபாரி நடத்திய கடை இந்துத்துவா அமைப்பினர் சார்பில் சூறையாடப்பட்டது. இதில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதுதவிர மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்தப்பட்டால் இந்து கோவில்களிலும் பயன்படுத்தப்படும் என சில இந்து அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்து முஸ்லிம்கள் ஒற்றுமை ஊர்வலம்
இந்நிலையில் தான் ரம்ஜான் தினமான இன்று கதக் மாவட்டத்தில் உள்ள மடங்களில் ரம்ஜான் மற்றும் பசவ ஜெயந்தி (12ம் நூற்றாண்டின் சீர்த்திருத்தவாதி) விழா கொண்டாடப்பட்டது. மேலும் இந்து - முஸ்லிம்கள் அமைதியை வலியுறுத்தி ஒற்றுமை ஊர்வலம் சென்றனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதன் விபரம் வருமாறு:

மதம் பெரியது கிடையாது
கதக் மாவட்டம் கஜேந்திரகடாவில் உள்ள மைசூர் மடத்தின் மடாதிபதி விஜய மஹாந்தேஷ்வர் சுவாமி மற்றும் மவுலானா ஆகியோருடன் சேர்ந்து மடத்தில் பசவ ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. அதன்பிறகு நகரின் முக்கிய வீதிகளில் இந்து முஸ்லிம்கள் ஒற்றுமை ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தின்போது, ‛‛மதம் என்றைக்கும் பெரியது கிடையாது. சாதியை காட்டிலும் கருணையே சிறந்தது. மனிதனாக பிறந்த அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் '' என கோஷமிட்டனர். விஜய மஹாந்தேஸ்வர சுவாமி பேசுகையில், ‛‛ உலகில் அமைதி நிலவ வேண்டும். அனைவரும் அமைதியாக செயல்பட வேண்டும். அரசியல் தலைவர்கள் உணர்ச்சிபூர்வமாக செயல்படக்கூடாது. மக்கள் உணர்வை புரிந்து கொண்டு நடக்க வேண்டும்'' என்றார்.

மடத்தில் ரம்ஜான் கொண்டாட்டம்
இதேபோல் கதக் மாவட்டம் முண்டர்கி நகரில்ஸ்ரீ அன்னதானீஸ்வர மடத்தில் ரம்ஜான், பசவண்ணர் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. சுவாமிகள் மற்றும் முஸ்லிம் மதகுருக்கள் பங்கேற்றனர். இந்து, முஸ்லிம்களின் ஒற்றுமை குறித்து அவர்கள் பேசினர். இதற்கு மக்களிடம் வரவேற்பு அதிகரித்துள்ளது. ஏராளமானவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications