For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

15ஆவது நிதிக் குழு: சிக்கலில் தென் மாநிலங்கள்

By BBC News தமிழ்
|

15ஆவது நிதிக்குழு மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டு அளவை முடிவு செய்வதற்கு 1971ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை விடுத்து 2011ம் ஆண்டு கணக்கெடுப்பை அளவு கோலாகக் கொள்ளத் திட்டமிட்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தென்னிந்தியாவை விட, வட இந்தியாவின் மக்கள் தொகை அதிகம் உள்ளதால், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்கள் இதற்கு எதிராக குரல் எழுப்பியுள்ளன.

15ஆவது நிதிக்குழுவின் பரிந்துரையால் மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கான வரி வருவாய் குறைய வாய்ப்பு இருப்பதால், மத்திய நிதிக் குழுவின் இந்த அறிவிப்பு கண்டிக்கத்தக்கது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி இருந்தார்.

இது தொடர்பாக அவர் 10 மாநில முதலமைச்சர்களுக்கு கடிதமும் எழுதியிருந்தார்.

15ஆவது நிதிக்குழு என்றால் என்ன?

நிதிக்குழு என்பது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அமைக்கப்படும் அரசியலமைப்பு அமைப்பாகும். மாநிலங்களுக்கான வரி வருவாய் ஒதுக்கும் விகித்ததை நிர்ணயித்து இந்த குழு பரிந்துரைக்கும்.

15ஆவது நிதிக்குழுவானது கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமைக்கப்பட்டது. அதன் தலைவராக முன்னாள் ராஜ்ய சபை உறுப்பினரும், மத்திய வருவாய்ப் பிரிவின் முன்னாள் செயலாளருமான நந்த கிஷோர் சிங் நியமிக்கப்பட்டார். 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் இந்தக்குழு அதன் அறிக்கையை சமர்பிக்க வேண்டும்.

14-வது நிதிக்குழு ஒதுக்கீட்டின் படி, மத்திய வரி வருவாயின் 42 சதவீதம் மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும். மீதமுள்ள 58 சதவீதம் மற்ற தேசிய திட்டங்களுக்கு வழங்கப்படும்.

தென் மாநிலங்கள் அதிருப்தி அடைந்தது ஏன்?

15ஆவது நிதிக்குழு படி, 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய பரிந்துரைத்ததே தென் மாநிலங்கள் அதிருப்தி அடைந்ததற்கான காரணமாகும்.

14ஆவது நிதிக்குழு பரிந்துரைகள்படி, மத்திய வரியாக செலுத்தப்படும் ஒரு ரூபாய்க்கும் 67 பைசாவை ஆந்திர மாநிலம் பெறுகிறது. ஆனால், தான் செலுத்தும் ஒவ்வொரு ரூபாய் வரிக்கும் ஈடாக, உத்திர பிரதேச மாநிலம் 1 ரூபாய் 79 பைசா பெறுகிறது என ஒரு பொருளாதார வல்லுநர் கூறுகிறார்.

15ஆவது நிதிக்குழுவுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ள உத்தரவுகளின்படி பார்த்தால் தென் மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு மேலும் குறையும்.

2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் என்ன பிரச்சனை?

நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் மத்திய வருவாயை மாநிலங்களுக்கு பங்கீடு செய்வதில் மக்கள் தொகையை ஒரு காரணியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று இந்திய அரசியலமைப்பு கூறுகிறது.

அரசின் குடும்பக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் 1971ஆம் ஆண்டுக்குப் பிறகு தென் மாநிலங்களின் மக்கள் தொகை பெருக்கம் குறைந்தது. ஆனால், வட மாநிலங்களில் இது தலைகீழாக இருக்கிறது.

நிதி ஒதுக்கீடு என்பது மக்கள் தொகை கணக்கின்படி முடிவு செய்யப்பட்டால், குறைந்த மக்கள் தொகை உள்ள மாநிலங்களுக்கு குறைந்தளவு நிதியே ஒதுக்கீடு செய்யப்படும் என்பதே தற்போது எழுந்துள்ள விவாதம்.

இதை கருத்தில் வைத்தே, 42ஆவது மற்றும் 84ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டபோது, நிதி ஒதுக்கீடு செய்வதில் 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பே எடுத்துக் கொள்ளப்படும் என முடிவெடுக்கப்பட்டது.

மக்கள் தொகை (1971-2011)

1971-2011 ஆம் ஆண்டுக்குள் தென் மாநிலங்களை விட வட மாநிலங்களின் மக்கள் தொகை அதிகரித்துள்ளது.

உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, பிகார் போன்ற மாநிலங்களில் இருமடங்கு மக்கள் தொகை உயர்ந்துள்ளது. ஆனால், தமிழ்நாடு, கர்நாடகா, மற்றும் கேரளாவில் மக்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

தமிழகத்துக்கு பலன் கிடைக்கும் - மோதி

https://twitter.com/PMOIndia/status/984344834566582272

சென்னை அடையாறு புற்று நோய் மருத்துவமனையில், வைர விழா கட்டடத்தை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோதி, "சில குறிப்பிட்ட மாநிலங்களுக்கு எதிராக 15வது நிதிக்குழுவின் செயல்பாடுகள் இருப்பதாக அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகின்றன. மக்கள்தொகை கட்டுப்பாட்டிற்காகச் செயலாற்றிய மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்படக்கூடாது என்று மத்திய அரசு நிதிக்குழுவிற்கு யோசனை தெரிவித்துள்ளது. இந்த அளவுகோல் காரணமாக மக்கள்தொகைக் கட்டுப்பாட்டிற்கு பெருமுயற்சியையும், சக்தியையும், ஆதாரவளங்களையும் செலவிட்டுள்ள தமிழ்நாடு போன்ற மாநிலத்திற்கு நிச்சயமாகப் பயன் கிடைக்கும்" என்று கூறியுள்ளார் மோதி. அவர் வெளியிட்ட, ஒரு ட்விட்டர் செய்தியிலும் இது தொடர்பான வாக்குறுதியை அளித்தார்.

பிற செய்திகள்:

BBC Tamil
English summary
15ஆவது நிதிக்குழு படி, 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய பரிந்துரைக்கப்பட்டதே தென் மாநிலங்கள் கோபப்பட்டதற்கான காரணமாகும்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X