திரிபுராவில் பாஜக ஆட்சி, மேகாலயா, நாகலாந்தில் ஆட்சி யாருக்கு? - எக்ஸிட் போல் முடிவுகள்
டெல்லி: திரிபுராவில் பாஜக ஆட்சியை பிடிக்கும் எனவும், மேகாலயாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழக்கும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. மேகாலயாவில் தேசியவாத மக்கள் கட்சிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் எனவும் எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன.
திரிபுராவில் 60 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் பிப்ரவரி 18ஆம் தேதி நடைபெற்றது. இதில் பாஜக 51 தொகுதிகளிலும் அதன் கூட்டணி கட்சியான திரிபுரா மக்கள் முன்னணி 9 இடங்களிலும் போட்டியிட்டன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 57 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது. அதன் கூட்டணிக் கட்சிகள் ஆர்எஸ்பி, பார்வார்டு பிளாக், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
காங்கிரஸ் கட்சி இந்த முறை 59 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. கோமதி மாவட்டத்தில் உள்ள காக்ரபான் தொகுதியில் மட்டும் வேட்பாளரை நிறுத்தவில்லை.

எக்ஸிட் போல் முடிவுகள்
திரிபுராவில் பாஜக கூட்டணிக்கு 45 முதல் 50 இடங்கள் பாஜகவிற்கு கிடைக்கும் என ஆக்ஸிஸ் மை இந்தியா எக்ஸிட் போல் முடிவுகள் கூறுகின்றன. இடது சாரிகள் கூட்டணி 9 முதல் 10 இடங்களை மட்டுமே கைப்பற்றும் என கணித்துள்ளது. பாஜக வெற்றி பெறும் பட்சத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் 25 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வருகிறது.

பாஜக ஆட்சி அமைக்கும்
நியூஸ் எக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் திரிபுராவில் பாஜக கூட்டணிக்கு 35 முதல் 45 இடங்கள் கிடைக்கும் எனவும், ஆளும் இடதுசாரி கூட்டணி 14 முதல் 23 இடங்களை மட்டுமே கைப்பற்றும் எனவும் கணித்துள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என கணித்துள்ளது.

நாகலாந்தில் ஆட்சி
வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் 60 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. நாகாலாந்தில் பாஜக 27 முதல் 32 இடங்களை கைப்பற்றும் எனவும் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு இடங்கள் மட்டுமே கிடைக்கும் எனவும் நியூஸ் எக்ஸ் நிறுவனத்தின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. என்பிஎப் கட்சிக்கு 20 முதல் 25 இடங்கள் கிடைக்கும் என கணித்துள்ளது.

காங்கிரஸ் ஆட்சியை இழக்கும்
60 தொகுதிகள் கொண்ட மேகாலயாவில் 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. மேகாலயாவில் பாஜகவிற்கு 30 இடங்கள் கிடைக்கும் எனவும் காங்கிரஸ் கட்சிக்கு 20 இடங்கள் மட்டுமே கிடைக்கும் எனவும் ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் பிடிஎப் கட்சிக்கு 3 இடங்களும், என்சிபி கட்சிக்கு 2 இடங்களும், பிற கட்சிகளுக்கு 4 இடங்கள் கிடைக்கும் எனவும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.

என்பிபி கட்சிக்கு அதிக இடங்கள்
அதே நேரத்தில் நியூஸ் எக்ஸ் எக்ஸிட் போல் முடிவின் படி பாஜகவிற்கு 8 முதல் 12 இடங்கள் கிடைக்கும் எனவும், காங்கிரஸ் கட்சிக்கு 13 முதல் 17 இடங்கள் கிடைக்கும் எனவும் தேசியவாத மக்கள் கட்சிக்கு 23 முதல் 27 இடங்கள் கிடைக்கும் எனவும் அந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

பாஜக ஆளும் மாநிலங்கள்
நாடு முழுவதும் 19 மாநிலங்களில் பாஜக ஆட்சியில் உள்ளது. திரிபுராவில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் பட்சத்தில் பாஜக ஆளும் 20வது மாநிலமாக திரிபுரா இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!