For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பட்ஜெட் 2022: 80சி பிரிவும் வருமான வரியும்: சம்பாதிப்பவரா நீங்கள்? பலன் தரும் எளிய விளக்கம்

By BBC News தமிழ்
|
நிர்மலா சீதாராமன்
AFP
நிர்மலா சீதாராமன்

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கிறார்.

அதில் அவர் வருமான வரி பிடித்தம் தொடர்பான சலுகை வரம்பை உயர்த்தும் அறிவிப்பை வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு வரி செலுத்துவோர் மத்தியில் மேலோங்கியிருக்கிறது.

அவர்களின் எதிர்பார்ப்புகள் ஒருபுறமிருக்க, வருமான வரி அதிகம் பிடித்தம் செய்யப்படாமல் இருக்க அத்துறையின் சில சட்டப்பிரிவுகள் சில வாய்ப்புகளை வழங்கியிருக்கின்றன.

அதில் முக்கியமானது 80சி பிரிவு. அது குறித்தும் வருமான வரி பிடித்தம் மற்றும் விலக்கு சலுகை தொடர்புடைய பிற சட்டப்பிரிவுகள், ஆண்டுதோறும் உங்களுடைய சம்பளம் கையை கடிக்காத வகையில் எப்படி சேமிக்க உதவுகின்றன என்பதை இங்கே பார்க்கலாம்.

பணத்தை மிச்சப்படுத்த உதவும் பிரிவுகள்

வருமான வரி விலக்கு
Getty Images
வருமான வரி விலக்கு

வருமான வரிச் சட்டம் 1961 பிரிவு 80C, வரி செலுத்துவோர் கைகளில் ஒரு சக்திவாய்ந்த வாய்ப்பு. இது வருமான வரி பிடித்த அளவை குறைக்க உதவுகிறது.

இந்த 80சி பிரிவில் 80CCC, 80CCD (1), 80CCD (1b) மற்றும் 80CCD (2) போன்ற உட்பிரிவுகளும் உள்ளன. அவை, சரியான முதலீடுகள் மற்றும் தகுதியான செலவுகள் மூலம் வரி செலுத்துவோருக்கு அவர்களின் வரிச்சுமையை குறைக்க உதவும்.

இந்த சட்டப்பிரிவுகளை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்த, வரி செலுத்துவோர் பொது வருங்கால வைப்பு நிதி (PPF), தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS), தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC), வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துதல் போன்ற பல வடிவங்களில் முதலீடுகளைத் திட்டமிடலாம். அப்படி செய்தால் அதற்கு தக்கபடி உங்களுடைய வரி பிடித்தம் குறையலாம்.

இந்த சலுகை மூலம் தனி நபர் ஒவ்வோர் ஆண்டும் ரூ 1.5 லட்சம் வரை உரிய ஆவணங்களை சமர்ப்பித்து வரி பிடித்த விலக்கையோ வரி விதிக்கப்படும் அளவையோ குறைக்கலாம்.

இந்த விலக்கு, தனி நபர்கள் மற்றும் இந்து கூட்டுக் குடும்பங்களுக்கு (HUFs) மட்டுமே கிடைக்கும்.

நிறுவனங்கள், கூட்டு நிறுவனங்கள் மற்றும் பங்குகள் வைத்திருக்கும் நிறுவனங்கள் போன்றவற்றுக்கு இந்த சலுகை இல்லை என்பதால், இந்த சலுகைகள் நடுத்தர வகுப்பினருக்கு மிகவும் பயனுள்ளவை.

இதுவா அதுவா தேர்வில் கவனம்

வருமான வரி விலக்கு
Getty Images
வருமான வரி விலக்கு

இருப்பினும், நிதிச் சட்டம் 2020இன் '115BAC பிரிவு' அல்லது புதிய வரி முறையின் கீழ் வரி செலுத்தும் வாய்ப்பை நீங்கள் தேர்வு செய்திருந்தால், இந்த ரூ. 1.50 லட்சம் வரி பிடித்த விலக்கு பெறும் வாய்ப்பை நீங்கள் பெற முடியாது.

எந்தவொரு நிதியாண்டிற்கும் பழைய வரி முறையைத் தேர்ந்தெடுத்தவர்கள் மட்டுமே இந்த சலுகையை அனுபவிக்க முடியும்.

வரி செலுத்துவோர் அல்லது அவர்களது வாழ்க்கைத் துணைவர்கள் அல்லது குழந்தைகளின் பெயர்களின் கீழ் எடுக்கப்பட்ட பாலிசியை தனது வரி பிடித்த சலுகை அல்லது விலக்கு பெற உரிய வாய்ப்பாக பயன்படுத்தலாம்.

HUF எனப்படும் இந்து கூட்டு குடும்பத்தை பொறுத்தவரையில், வரி செலுத்துவோரின் குடும்ப உறுப்பினர்களில் யாரேனும் ஒருவரின் பெயரில் எடுக்கப்பட்ட பாலிசி தொகையை அவர் தனது வரி விலக்கல் சலுகை பெற பயன்படுத்தலாம்.

பெற்றோர் உட்பட வேறு எந்த நபரின் பெயரிலும் எடுக்கப்பட்ட பாலிசியைப் பொறுத்தவரை பிரீமியம் தொகையில் எந்தப் பிடித்தமும் கிடையாது.

லாக்-இன் காலம்

வருமான வரி விலக்கு
BBC
வருமான வரி விலக்கு

ELSS, PPF மற்றும் டெர்ம் டெபாசிட்கள் போன்ற சில திட்டங்கள், 80C பிரிவின் கீழ் விலக்கு பெறத் தகுதியுடையவை. ஆனால், இவை லாக்-இன் காலத்துடன் வருகின்றன.

உதாரணமாக, ELSS திட்டத்திற்கான லாக்-இன் காலம் 3 ஆண்டுகள். அதுவே PPF என்றால் 15 ஆண்டுகள்.

ELSS என்பது ஈக்விட்டி லிங்க்டு சேவிங்க்ஸ் திட்டம் ஆகும். இது வருமானவரிச் சட்டம் 1961-இன் 80C பிரிவின் கீழ் ஒரு முதலீட்டாளர் ரூ. 50,000 வரை முதலீடு செய்திருந்தால், அந்தத் தொகை அவரின் மொத்த வரிக்குரிய வருமானத்தில் இருந்து கழிக்கப்பட்டு, அவரின் வரிச் சுமை குறைக்க உதவும்.

இந்தத் திட்டங்கள், யூனிட்கள் ஒதுக்கப்பட்ட தேதியில் இருந்து மூன்று வருடங்கள் லாக்-இன் காலகட்டத்தைக் கொண்டிருக்கும். லாக்-இன் காலகட்டம் முடிந்த பின்பு, யூனிட்களை பணமாக்கவோ அல்லது ஸ்விட்ச் செய்யவோ முடியும்.

வரி செலுத்துவோர் லாக்-இன் காலத்தின் கட்டுப்பாடுகளை மீறினால், அந்த வருமானம் அந்த நிதியாண்டிற்கான வரி செலுத்துபவரின் வருமானமாகக் கருதப்பட்டு, வரி விதிக்கப்படும்.

இப்போது, ​​வரி செலுத்துவோர் PPF போன்ற நீண்ட கால முதலீடுகளை செய்திருந்தாலும், அவர்கள் 15 ஆண்டுகாலத்துக்கு இதே கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும்.

எனவே, வரி செலுத்துவோர் சரியான நிதி முதலீடுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இதில் இருந்து இரண்டு விஷயங்களை நீங்கள் கண்டிப்பாக உணர வேண்டும்.

உங்களுடைய முதலீடுகள் மீது எவ்வளவு வருமான வரி பிடித்தம் அல்லது விலக்கை பெற முடியும், அது முதிர்ச்சி அடையும்போது பெறப்படும் தொகை என்ன போன்றவற்றை, முதலீட்டுத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் முன்பே ஒவ்வொரு வரி செலுத்துபவரும் அறிய வேண்டும்.

காப்பீட்டுத் தொகையின் மீதான விலக்கு தொகையின் வரம்பு

வருமான வரி சலுகை
Getty Images
வருமான வரி சலுகை

வருமான வரித் துறையின் கூற்றுப்படி, ஏப்ரல் 1, 2012க்குப் பிறகு பாலிசிகள் வழங்குவதற்கான காப்பீட்டுத் தொகையில் 10% மட்டுமே கழிக்கப்படும்.

"பிரீமியத்தின் முழுத் தொகையும் 80சி பிரிவின் கீழ் கழிக்கப்படும் என்பது பலரும் தவறாகக் கொண்டிருக்கும் கருத்தாகும்.

எவ்வாறாயினும், 01.04.2012 அன்று அல்லது அதற்குப் பிறகு எடுக்கப்பட்ட பாலிசிகளுக்கு, காப்பீட்டுத் தொகையில் 10% அளவுக்கு செலுத்தப்பட்ட பிரீமியத்தை மட்டுமே விலக்காகக் கோர முடியும்.

மேலும் சுயமாகவோ, மனைவிக்காகவோ குழந்தைகளுக்காகவோ செலுத்தப்படும் பிரீமியம் தொகையை வரி செலுத்துவோர் விலக்காகப் பெற அனுமதிக்கப்படும். அவர் தனது பெற்றோருக்கு செலுத்திய பிரீமியத்தை 80C பிரிவின் கீழ் விலக்காகக் கோர முடியாது.

தனியார் கடன் செல்லுபடியாகாது

வருமான வரி சலுகை
Getty Images
வருமான வரி சலுகை

வரி செலுத்துவோர் 80C பிரிவின் கீழ் எந்த வகையான வீட்டுக் கடனையும் திருப்பிச் செலுத்துவதில் விலக்கு கோர முயற்சிப்பர்.

இங்கே தனியார் கடன்களின் முக்கிய கூறுகளை கவனிக்க வேண்டும். அதாவது, நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து பெறப்பட்ட கடன்கள் 80C பிரிவின் கீழ் வராது.

வரி செலுத்துவோர் தனது வீட்டுக் கடன் தொகையின் முதன்மைப் பகுதிக்கு (ப்ரின்சிபல் காம்பனன்ட்) விலக்கு கோர விரும்பினால், அவருக்கு ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களால் மட்டுமே கடன் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக, பொதுத்துறை அல்லது இந்திய ரிசர்வ் வங்கி அங்கீகாரம் பெற்ற தனியார் வங்கி, கூட்டுறவு வங்கி, தேசிய வீட்டு வசதி வங்கி, எல்ஐசி எனப்படும் ஆயுள் காப்பீட்டுக் கழகம் போன்றவற்றால் வழங்கப்படும் கடன்களாக இருக்க வேண்டும்.

வீட்டுப் பத்திரப்பதிவு மற்றும் முத்திரைத்தாள் வரி மீதான விலக்கு

வருமான வரி விலக்கு
Getty Images
வருமான வரி விலக்கு

ஸ்டாம்ப் டூட்டி, பதிவுக் கட்டணம் மற்றும் குடியிருப்பு வீட்டுச் சொத்தை நேரடியாக மாற்றுவது தொடர்பான வேறு சில செலவுகளுக்குரிய தொகைக்கும் 80C பிரிவின் கீழ் விலக்கு கோரலாம்.

ஆனால், வணிக சொத்துக்களுக்கான செலவுக்கு 80C பிரிவின்கீழ் விலக்கு கோர முடியாது. எனவே, வரி செலுத்துவோர், 80C பிரிவின் கீழ் விலக்கு கோருவதற்கான சொத்து வகையை புத்திசாலித்தனமாக தேர்வு செய்ய வேண்டும்.

வீட்டுக்கடனுக்கு 80சி பிரிவின் கீழ் விலக்கு கோருவதிலும் ஒரு நிபந்தனை உள்ளது.

அதாவது, வரி செலுத்தும் நபர் தமது வீட்டுச் சொத்துரிமையை பெற்ற நிதியாண்டில் இருந்து ஐந்து நிதியாண்டுகள்வரை வைத்திருக்க வேண்டும்.

5 ஆண்டுகளுக்குள் வீட்டுச் சொத்து வேறு பெயருக்கு மாற்றப்பட்டால், முன்னர் அவர் விலக்கு கோரி அனுபவித்த தொகை, முந்தைய ஆண்டுகளில் அவரது வருமானமாக கணக்கிடப்பட்டு வரி பிடித்தம் செய்யப்படும்.

பிள்ளைகளுக்கான கல்விக் கட்டணம்

வரி செலுத்துவோரின் பிள்ளைகள் அவர்களின் பள்ளி மற்றும் கல்விக்கான கட்டண விவரத்தை தாக்கல் செய்து வரி பிடித்த விலக்கு கோரலாம்.

ஆனால், அந்த கல்விக்காக வாங்கப்படும் புத்தகங்கள், கல்வி மேம்பாட்டுக் கட்டணம், நூலக செலவினத்தை அவர்கள் வரி பிடித்தத்துக்குரிய கணக்காகக் காட்ட முடியாது.

இந்தியாவில் அதிகபட்சம் இரண்டு குழந்தைகளுக்கு அவர்களின் முழு நேர கல்விக்காகச் செலுத்தப்படும் கட்டணங்களுக்கு வரி விலக்கு சலுகை கிடைக்கும்.

மேலும் முழுமையான கட்டணத்தில் கல்விக் கட்டணப் பகுதி மட்டுமே விலக்குக்குத் தகுதி பெறும். எனவே, எந்தவொரு தரவையும் வருமான வரி இணையதளத்தில் பதிவேற்றும் முன்பு இந்த விவரத்தை கவனத்தில் கொள்ளுங்கள்.

எண்டோமென்ட் இன்சூரன்ஸ் திட்டங்கள்

வருமான வரி விலக்கு
Getty Images
வருமான வரி விலக்கு

எண்டோமென்ட் இன்சூரன்ஸ் திட்டங்கள், அது தொடர்பான பாலிசியை வாங்குபவர்களுக்கு ஆயுள் காப்பீட்டை வழங்குகின்றன. அத்துடன் பாலிசி வாங்குபவர் அதன் காலம்வரை உயிருடன் இருந்தால், அந்த பாலிசிக்கான முதிர்வுத் தொகையை அவரால் பெற முடியும்.

"எண்டோமென்ட் காப்பீட்டுத் திட்டங்கள் என்பது வரிச் சேமிப்பு மற்றும் அத்தியாவசிய முதலீடுகளுக்கு ஏற்ற 'ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள்' ஆகும்.

இருப்பினும், நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் பெரும் பகுதியை இதில் முதலீடு செய்வது உங்களுக்கு நல்ல பலனைத் தராது என்பது நிபுணர்களின் பரவலான கருத்து.

நீங்கள் அதிகம் சேமிக்க விரும்பினால், 'டெர்ம் பாலிசி' எனப்படும் குறிப்பிட்ட காலத்தில் முதிர்ச்சி அடையும் பாலிசியில் முதலீடு செய்யுங்கள். இதுவும் 80C பிரிவின் கீழ் வரி விலக்கு பெற தகுதி உடையது.

80C பிரிவின்கீழ் விலக்கு கோருவதற்கான முதலீட்டு விருப்பங்களைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​அத்தகைய முதலீடுகளில் உங்களுடைய வருமானத்தை செலவிடும்போது அது வருமான வரியில் செலுத்தும் தாக்கத்தைப் புரிந்துகொள்வது முக்கியமானது.

ஆயுள் காப்பீட்டு பாலிசிகள், வருங்கால வைப்பு நிதி, தேசிய ஓய்வூதியத் திட்டம், சுகன்யா சம்ரித்தி திட்டம் போன்றவை வருமான வரி விதிப்பிலிருந்து விலக்கு பெறும் வாய்ப்புகளாகும்.

அதேசமயம் டேர்ம் டெபாசிட்கள், நபார்டு பத்திரங்கள் மூலம் கிடைக்கும் தொகை, வருமான வரிக்கு உட்படக்கூடியவை என்பதையும் உணர வேண்டும்.

80சி போல வேறு பிரிவுகள் உள்ளதா?

வருமான வரி விலக்கு
Getty Images
வருமான வரி விலக்கு

வருமான வரி சட்டத்தின் 80D பிரிவின் கீழ், ஒருவர் வருமான வரி தாக்கல் செய்தால், அவர் ஆண்டுதோறும் தனது மொத்த வருவாயில் இருந்து செலுத்தப்படும் மருத்துவக் காப்பீட்டு பிரீமியங்களுக்கு விலக்கு கோரலாம்.

தங்களுக்கென ஒரு 'மெடிக்கல் பாலிசி' மட்டுமின்றி தனி நபர்கள் தங்கள் மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கான காப்பீடு பாலிசை வாங்குவதன் மூலமும் பயனடையலாம். அவர்கள் 80C/CCC/CCD ஆகியவற்றின் கீழ் மேலும் விலக்குகளைப் பெறலாம்.

இதை கொஞ்சம் விரிவாக பார்க்கலாம்.

ஒரு தனிநபர் தமது காப்பீடு தொகை மூலம் வருமான வரி பிடித்த விலக்கல் சலுகையை பெற விரும்பினால் அவர் ரூ.25,000 வரை விலக்கு கோர அனுமதிக்கப்படுகிறது. அவர் தனது மனைவி, பெற்றோர் மற்றும் தன்னைச் சார்ந்திருக்கும் தனியாக வருமானம் ஈட்டாத பிள்ளைகளுக்கு ஒரே மாதிரியான பாலிசி தொகையை கோரலாம்.

அந்த தனி நபரின் பெற்றோருக்கு 60 வயதுக்கு மேல் இருந்தால் 50,000 ரூபாய் வரை அவர் விலக்கு சலுகை பெறலாம்.

காப்பீட்டுத் தொகை அதிகபட்ச விலக்கு வரம்பிற்குள் சேர்க்கப்படவில்லை என்றால், தனி நபர்கள் தடுப்பு மருத்துவ பரிசோதனைகளுக்கான மருத்துவ ரசீதுகளையும் வரி விலக்கல் தொகை கணக்கீட்டில் சேர்க்கலாம்.

உதாரணமாக, ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்தில் - தனிநபர், அவரது மனைவி, ஒரு குழந்தை, 60 வயதுக்கு மேற்பட்ட இரண்டு பெற்றோர் என இருந்து அனைவருக்கும் காப்பீடு செய்யப்பட்டால், அந்த தனி நபர் வருமான வரி தாக்கல் செய்யும் போது அதிகபட்சமாக ரூ. 1,75,000 வரை வரி விலக்கு சலுகையைப் பெறலாம்.

பிள்ளைகளுக்கான கல்விக் கடன்

வருமான வரி விலக்கு
Getty Images
வருமான வரி விலக்கு

பிள்ளைகளின் கல்விக்காகப் பெறப்படும் கல்விக் கடன்களும் வரி விலக்கு பலனுக்குத் தகுதி பெறுகின்றன. அத்தகைய கடன்களுக்கு, வருமான வரிச் சட்டத்தின் 80E பிரிவு உதவுகிறது.

ஒரு நபர் தனது பிள்ளைக்கு கல்விக் கடனைப் பெற்றவுடன், கல்விக் கடனுக்கான வட்டி வருமான வரிச் சட்டத்தின் 80E பிரிவின் கீழ் கழிக்கத் தகுதி பெறும்.

வருமான வரி பிடித்த விலக்கல் கோரும் சலுகையை அதிகபட்சம் எட்டு ஆண்டுகளுக்கு அல்லது கல்விக்கடனுக்கான வட்டி திருப்பிச் செலுத்தப்படும் வரை, எது முந்தையதோ அதுவரை அனுபவிக்கலாம்.

கல்விக் கடனை யார் திருப்பிச் செலுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்தும், பிள்ளைக்காக செலுத்திய கல்விக்கடன் தொகையை குறிப்பிட்டு அவரது தந்தை அல்லது தாய் வரிச் சலுகையைப் பெறலாம்.

இருப்பினும், கல்விக் கடனை ரிசர்வ் வங்கி அங்கீகரித்த வங்கிகளிடம் இருந்து பெறும்போது மட்டுமே வரி விலக்கு கிடைக்கும். தனி நபர்களிடமோ குடும்ப உறவுகளிடமோ கல்விக்கடனுக்காக வாங்கும் தொகைக்கு வட்டி கட்டுவது இந்த சலுகை வரம்பில் வராது.

வரி செலுத்துவோர் கல்விக் கடனுக்கான வட்டியைத் திருப்பிச் செலுத்தத் தொடங்கும் நிதியாண்டிலேயே அந்த தொகைக்கான வருமான வரி விலக்கலைக் கோரலாம்.

இதில் நல்ல அம்சம் என்னவென்றால், கல்விக் கடனுக்கான வட்டிக்கு வரி விலக்கு கோருவதற்கு வரம்பு இல்லை. எளிமையாகச் சொல்வதென்றால், 80C மற்றும் 80D பிரிவுகளில் இருப்பதைப் போல, இந்த கல்விக்கடன் வட்டியை திருப்பிச் செலுத்தும் தொகைக்கு எந்த உச்ச வரம்பும் இல்லை.

ஆண்டு அடிப்படையில் கணக்கிட்டால், கல்விக் கடனுக்கான வட்டிக்கு நீங்கள் ரூ. 1,00,000 அல்லது அதற்கு மேல் திருப்பிச் செலுத்துவதாக இருந்தால் உங்களின் வரிச் செலவைக் குறைக்க, முழுத் தொகையையும் விலக்கு கோரி பெறலாம்.

பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் பரிசளிப்பது

வருமான வரி விலக்கு
Getty Images
வருமான வரி விலக்கு

உங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை வயதான பெற்றோருக்கு பரிசளிப்பது எப்போதும் நல்லது. இது வரியைச் சேமிக்க உதவும். இந்தியாவில், பெற்றோர் போன்ற குறிப்பிட்ட உறவினர்களின் பரிசுகளுக்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

பெற்றோருக்கு நீங்கள் கொடுக்கும் பணத்தின் காரணமாக வருடாந்திர அடிப்படையில் உங்கள் வரி விதிப்பு வருமானம் மாறாது என்றாலும், அவர்கள் பெறும் பணத்தில் வரி தாக்கம் இருக்காது.

மேலும், பெற்றோர் அல்லது கணவன் மற்றும் மனைவியின் பெற்றோர் அந்த பணத்தைப் பயன்படுத்தி, அதிலிருந்து மேலும் வருமானத்தை ஈட்ட வரியற்ற திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

இந்தியாவில், குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு சில திட்டங்களுக்கு வருமான வரி விதிக்கப்படுவதில்லை. எனவே, அவர்கள் ஈட்டும் எந்தவொரு வருமானத்திற்கும் வரி விதிக்கப்படாது என்பதை உணரலாம்.

துணையுடன் சேர்த்து வாங்கும் வீட்டுக்கான கூட்டுக்கடன்

வீட்டுவசதி கடன்
Getty Images
வீட்டுவசதி கடன்

உங்கள் மனைவியுடனோ கணவருடனோ கூட்டுச் சொத்து வைத்திருப்பதன் மூலம் அதிக வரிச் சேமிப்புப் பலன்களைப் பெறலாம்.

வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ், தனிநபர் ஒருவர் அசல் தொகையில் ரூ. 1.5 லட்சம் வரை வரி பிடித்த சலுகையைக் கோரலாம். அதே சமயம் ஐடி சட்டத்தின் 24ஆம் பிரிவு, வீட்டுக் கடனுக்கான வட்டி செலுத்துதலில் ரூ. 2 லட்சம் வரை வரி விலக்கு பெற கடன் வாங்கும் தனி நபரை அனுமதிக்கிறது.

இருப்பினும், தம்பதி சேர்ந்து ஒரு சொத்தை வாங்கும் போது, அவர்கள் 80C பிரிவின் கீழ் ரூ. 3 லட்சமும், 24ஆம் பிரிவின் கீழ் ரூ. 4 லட்சமும் பெறலாம். இருப்பினும், 80C பிரிவின் கீழ், கட்டுமானத்தில் உள்ள வீட்டுச் சொத்திற்கு வரிச் சலுகைகளைப் பெற முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மூத்த குடிமக்களுக்கான வாய்ப்பு

ஒரு நிதியாண்டில், வங்கி சேமிப்பு கணக்கில் இருந்து ரூ.10,000 வரை ஈட்டப்படும் வட்டித் தொகைக்கு, வருமான வரி சட்டம் 1961 பிரிவு 80டிடிஏ-வின் கீழ் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பிரிவு 80சி யின் படி அனுமதிக்கப்பட்டுள்ள விலக்கு தொகைக்கு மேலாகவே 80டிடிஏ வரி விலக்கு தொகை அனுமதிக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக, ஒருவர் 3 வேறுபட்ட வங்கி சேமிப்பு கணக்குகளை வைத்திருக்கிறார், ஒவ்வொன்றிலிருந்தும் ஒரு குறிப்பிட்ட நிதியாண்டில் ரூ.5000 வட்டி வருமானம் கிடைக்கிறது. எனவே பிரிவு 80டிடிஏ யின் கீழ் அவருக்கு ரூ.10,000 வரி விலக்கு அளிக்கப்படும், மீதிமுள்ள ரூ.5000க்கு அவர் வருமான வரி செலுத்த வேண்டும்.

அதுவே ஒருவரது வங்கி சேமிப்புக் கணக்கின் மீதான வட்டி வருமானம் ரூ.10,000க்கு மேல் இருந்து, அவரது மொத்த வருமானம், வரி வரம்புக்கு கீழிருந்தால் அவர் வருமான வரித் தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

80T, TTB பிரிவு என்றால் என்ன?

வீட்டுவசதி கடன்
Getty Images
வீட்டுவசதி கடன்

80டி பிரிவின் கீழ் மூத்த குடிமக்களின் மருத்துவக் காப்பீட்டுக்கான பிரீமியம் மற்றும் மருத்துவச் செலவுகளுக்கான உச்ச வரம்புத் தொகை ரூ. 50 ஆயிரம் ஆக உள்ளது. இதன்படி எல்லா குடிமக்களும் எந்த மருத்துவ காப்பீட்டின் பிரீமியமானாலும், எந்த மருத்துவச் செலவானாலும் ஆண்டுதோறும் ரூ. 10 ஆயிரம் வரை சலுகை பெறுவர்.

மூத்த குடிமக்களின் ஆபத்தான நோய்களுக்கான மருத்துவச் செலவுகளில் ரூ. 60 ஆயிரமும் மிக மூத்த குடிமக்களுக்கான மருத்துவச் செலவுகளில் 80TTB பிரிவின் கீழ் ரூ. 1 லட்சம் வரை விலக்கு பெறலாம்.

2022ஆம் நிதியாண்டில் இந்திய நிதியமைச்சர் வெளியிடும் அறிவிப்பில் வருமான வரி உச்சவரம்பை அதிகரிப்பதாக குறிப்பிட்டால் அதற்கேற்ப இந்த வரி விலக்கு உச்சவரம்பு அளவு மாறுபடும். அந்த அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெறுமா என்ற எதிர்ப்புதான் வருமான வரி செலுத்துவோர் மத்தியில் மேலோங்கியிருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
An Analysis on 80C Section and Income Tax
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X