For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது- கர்நாடக அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: காவிரியில் கர்நாடகா தண்ணீர் திறக்க தமிழகம் வலியுறுத்தி வரும் நிலையில், தண்ணீர் திறக்க முடியாது, உச்சநீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்திக்கொள்ளலாம் என கர்நாடக அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதம் காவிரியில் திறந்துவிட வேண்டிய அளவான 50 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறக்கவில்லை. இதை எதிர்த்து தமிழகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, அது செப்.2ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

Cauvery issue: Karnataka All party meeting held in Bangalore

இந்நிலையில், தண்ணீரை திறந்துவிடுமாறும், அல்லது சட்ட சிக்கல் ஏற்படும் என்றும் கர்நாடக முதல்வருக்கு, அம்மாநில வழக்கறிஞர் நாரிமன் எச்சரிக்கை விடுத்ததாக செய்திகள் வெளியாகின.

இந்த பிரச்சினைகள் குறித்து கர்நாடக அனைத்து கட்சி பிரதிநிதிகள் அடங்கிய கூட்டத்திற்கு முதல்வர் சித்தராமையா அழைப்புவிடுத்திருந்தார். இதன்படி இன்று மதியம், பெங்களூரிலுள்ள அம்மாநில தலைமைச் செயலகமான விதானசவுதாவில், அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது.

சித்தராமையா, நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டில், மத்திய அமைச்சர் அனந்தகுமார், லோக்சபா காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் ஆஸ்கர் பெர்ணான்டஸ், மதசார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

1 மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் சித்தராமையா கூறியது: கேஆர்எஸ் அணைக்கு இந்த மழைக்காலத்தில் சராசரியாக 196 டிஎம்சி வரும். ஆனால் 108 டிஎம்சிதான் வந்துள்ளது. தற்போது கேஆர்எஸ்சில் 51 டிஎம்சி தண்ணீர்தான் உள்ளது.

எனவே பெங்களூர், மண்டியா உள்ளிட்ட மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கூட தண்ணீர் போதாது. இந்த நிலையிலும், தமிழகத்திற்கு 29 டிஎம்சி தண்ணீரை விடுவித்துள்ளோம். தமிழகத்தின் மேட்டூர் அணையில், தற்போது 34 டிஎம்சி தண்ணீர் உள்ளது. இந்த நிலையிலும், தமிழகம், கர்நாடகாவுக்கு நெருக்கடி தருகிறது.

எனவே இந்த நிலைமையை உச்சநீதிமன்றத்தில் எடுத்து சொல்வோம். தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கும் நிலையில் கர்நாடகா இல்லை. தமிழக விவசாய குழு என்னை சந்தித்தபோதும் இதைத்தான் கூறினேன். காவிரி விவகாரத்தில் கர்நாடக எதிர்க்கட்சிகள் அனைத்தும், அரசுக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதிகூறியுள்ளன.

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்காவிட்டால் கர்நாடகாவுக்கு சட்ட சிக்கல் வந்துவிடும் என வழக்கறிஞர் நாரிமன் கூறியதாக மீடியாக்களில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது. நாரிமன் என்னிடம் அப்படி எந்த எச்சரிக்கையும்விடுக்கவில்லை என்றார்.

இதனிடையே, கூட்டத்தில் பங்கேற்ற, கார்கே கூறுகையில், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும் நிலையில் கர்நாடகா இல்லை என்றார். மதசார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி கூறுகையில், காவிரி விஷயத்தில் கர்நாடக அரசுக்கு முழு ஒத்துழைப்பை அளிப்போம் என்றார்.

English summary
Karnataka All party meeting held in Bangalore under CM Sidharamaiah.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X