For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திரெளபதி முர்மூவை 'ராஷ்ட்ரபத்னி' என்று அழைத்த காங்கிரஸ் எம்.பி - மன்னிப்பு கேட்க வலியுறுத்தும் பாஜக

By BBC News தமிழ்
|

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூவை 'ராஷ்டிரபத்னி' என்று மேற்கு வங்கத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி அதிர் ரஞ்சன் செளத்ரி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அவரது கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

என்ன நடந்தது?

சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் தலைவர்கள் கடந்த மூன்று நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

புதின்கிழமை நடந்த இந்த போராட்டத்தின்போது, ஒரு செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூவை 'ராஷ்டிரபத்னி' என்று குறிப்பிட்டுப் பேசினார் காங்கிரஸ் எம்.பி அதிர் ரஞ்சன் செளத்ரி.

குடியரசுத் தலைவர் மாளிகைக்குள் செல்ல அனுமதிக்காதது குறித்து அவர் பேசுகையில், "நேற்று அங்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. இன்று செல்வேன். இந்திய குடியரசுத் தலைவர் அனைவருக்கும் உரியவர். குடியரசுத் தலைவர் அவர்கள், குடியரசுத் தலைவர் அல்ல; அவர் இந்திய நாட்டின் 'ராஷ்ட்ரபத்னி'. அப்படி இருக்கையில், அவர் நமக்கானவர் இல்லையா?," என்று தெரிவித்தார்.

https://twitter.com/ABPNews/status/1552543784424316928

இதனையடுத்து, அவர் மறுநாள் பேசுகையில், "மன்னிப்பு தெரிவிக்க வேண்டும் என்ற கேள்வி எழவில்லை. நான் ஏன் பாஜகவிடம் மன்னிப்பு கோர வேண்டும். இந்தியாவின் குடியரசுத் தலைவராக யார் இருந்தாலும், அவர் அனைவருக்குமான குடியரசுத் தலைவர். ஆனால், சில ஆளும் கட்சியினர் கடுகு அளவு விஷயத்தை மலையளவு விஷயமாக மாற்றுக்கின்றனர்," என்றார்.

"இரண்டு நாட்களாக நாங்கள் விஜய் சௌக் நோக்கிச் செல்லும் போது. எங்கே போகிறீர்கள் என்று எங்களிடம் கேட்கப்பட்டது. நாங்கள் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்று குடியரசுத் தலைவரைச் சந்திக்க விரும்புகிறோம் என்று அவர்களிடம் கூறிக்கொண்டிருந்தோம். நேற்று தவறுதலாக அந்த வார்த்தை வந்துவிட்டது. நான் என்ன செய்ய வேண்டும்?

என்னை தூக்கில் போட வேண்டுமானால், தூக்கில் போடுங்கள். நான் அந்த பத்திரிக்கையாளரை தடுத்து நிறுத்தி அந்த வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது என்று சொல்வதற்குள் அவர் சென்றுவிட்டார்," என்றார்.

நாடாளுமன்றத்தில் அமளி

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது இந்த விவகாரம் தொடர்பாக பெரும் அமளி ஏற்பட்டது.

திரௌபதி முர்மூ குறித்து அதிர் ரஞ்சன் செளத்ரியின் கருத்துக்காக பாஜகவிடம் காங்கிரஸ் மன்னிப்பு கேட்டது. இந்நிலையில், குடியரசுத் தலைவரை அவமதித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு தனக்கு கால அவகாசம் அளிக்குமாறு மக்களவைத் தலைவரிடம் அதிர் ரஞ்சன் செளத்ரி கோரிக்கை விடுத்தார்.

திரௌபதி முர்மூ இந்தியாவின் முதல் பெண் பழங்குடி குடியரசுத் தலைவர் ஆவார். ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநராக இருந்த திரௌபதி முர்மூ, ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். எதிர்க்கட்சி வேட்பாளரும், முன்னாள் நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்ஹாவை அதிக வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். அவர் ஜூலை 25ஆம் தேதியன்று பதவியேற்றார்.

ஜார்கண்டின் முதல் பெண் மற்றும் பழங்குடியின ஆளுநராகவும் இருந்தார். அந்த பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, அவர் தனது சொந்த மாநிலமான ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள ராய்ராங்பூரில் வசிக்கிறார். இது அவரது சொந்த கிராமமான பைடாபோசியின் தொகுதி தலைமையகம். ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக நீண்ட காலம் (ஆறு ஆண்டுகளுக்கு மேல்) இருந்தார்.

draupadi murmu: rashtrapatni remark bjp demands apology from congress mp adhir ranjan

இதுகுறித்து ஸ்மிருதி இரானி என்ன கூறினார்?

இதையடுத்து மக்களவை நடவடிக்கைகள் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக, இந்த கருத்துக்கு பாஜக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், போராட்டம் காரணமாக அவை மீண்டும் மாலை 4 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறுகையில், "குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மூவின் பெயர் அறிவிக்கப்பட்டதில் இருந்தே, திரௌபதி முர்மூ காங்கிரஸ் கட்சியின் வெறுப்புக்கும் கேலிக்கும் ஆளானார். காங்கிரஸ் கட்சி அவரை பொம்மை என்றது," என்றார்.

"இந்த நாட்டின் மிக உயரிய அரசியல் சாசனப் பதவியை ஒரு பழங்குடியினப் பெண் ஏற்றுள்ளது இன்னும் காங்கிரஸ் கட்சியால் ஏற்க முடியவில்லை. சோனியா காந்தியால் நியமிக்கப்பட்ட பேரவைத் தலைவர் அதிர் ரஞ்சன், திரௌபதி முர்மூவை 'ராஷ்டிரபத்னி' என்று அழைத்தார்." என்றார்.

https://twitter.com/ANI/status/1552518026356207616

சோனியா காந்தி அளித்த விளக்கம்

அதே நேரத்தில், அதிர் ரஞ்சன் செளத்ரியின் கருத்து குறித்து சோனியா காந்தியும் விளக்கம் அளித்துள்ளார். தனது கருத்துக்கு அதிர் ரஞ்சன் மன்னிப்பு கேட்பாரா என்ற கேள்விக்கு பதிலளித்த காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, "அவர் மன்னிப்பு கேட்டுவிட்டார்" என்றார்.

https://twitter.com/ANI/status/1552530958297239552

வலுக்கும் எதிர்ப்பு

சோனியா காந்தி குடியரசுத் தலைவரிடமும், இந்த தேசத்திடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இது பழங்குடியினரை அவமதிக்கும் செயல் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறியுள்ளார். "இது பழங்குடியினரையும், நாட்டின் குடியரசுத் தலைவரையும் அவமதிக்கும் செயலாகும். அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி ஒருவரை நியமித்ததற்கு சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்." என்றார்.

அதிர் ரஞ்சன் செளத்ரிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாஜக எம்பி ரமா தேவி, "இந்த அவமானத்தை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். ஒரு நாடாக, ஒரு பெண்ணாக இதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். ஒரு பழங்குடியினப் பெண் குடியரசுத் தலைவரானதுக்கு வெட்கப்படுவது வெட்கக்கேடானது. அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்," என்றார்.

https://twitter.com/ANI/status/1552537671452413952

அதே வேளையில், அதிர் ரஞ்சன் செளத்ரி வேண்டுமென்றே இப்படி ஒரு கருத்தை வெளியிட்டதாகவும், அதைத் திரும்பத் திரும்பச் சொல்வதாகவும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம்சாட்டியுள்ளார்.

https://twitter.com/ANI/status/1552535397309116418

அவர் வேண்டுமென்றே இப்படி ஒரு கருத்தை இரண்டு முறை பொதுவெளியில் கூறியுள்ளார். இது சின்ன விஷயமா? காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி நாடாளுமன்றம் மற்றும் நாட்டு மக்கள் முன்பு மன்னிப்பு கேட்க வேண்டும். அதிர் ரஞ்சன் செளத்ரி குடியரசுத் தலைவரை அவமதித்த விதம் அவரது மனநிலையை காட்டுகிறது. பழங்குடியின மக்களை இழிவுபடுத்துவதை நாடு ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது. இத்தனைக்குப் பிறகும் இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை என்று அவர் கூறினார்.

https://twitter.com/ANI/status/1552533565732442112

அதிர் ரஞ்சனின் கருத்துக்களுடன் சோனியா காந்தி உடன்படுகிறாரா என்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பதிவில், "காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் தனது கருத்து மூலம் நாட்டின் உயரிய பதவியை அவமதித்துள்ளார். இது அவரது மற்றும் அவரது கட்சியினரின் மோசமான மனநிலையின் வெளிப்பாடு. அவரது கருத்து பழங்குடியினருக்கு எதிரானது, பெண்களுக்கு எதிரானது. குடியரசுத் தலைவர் எந்தக் கட்சியையும் சார்ந்தவர் அல்ல, இந்த முழு நாட்டைச் சார்ந்தவர்" என்று தெரிவித்துள்ளார்.

"உங்கள் தலைவர்கள் இதுபோன்ற மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள் என்று நான் சோனியா காந்தியிடம் கேட்க விரும்புகிறேன். அப்படியெனில், அவருடைய கருத்துக்களுடன் நீங்களும் உடன்படுகிறீர்களா? இதை இந்த நாடு அறிய விரும்புகிறது. இந்திய வரலாற்றில் மாண்புமிகு குடியரசுத் தலைவருக்கு இப்படி ஓர் அவதூறான செயலை யாரும் செய்ததில்லை. காங்கிரஸ், சோனியா உள்ளிட்டோர் மக்களவையில் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்," என்றார்.

ஏ.என்.ஐ செய்தி முகமையின்படி, இந்த சர்ச்சைக்கு இடையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உடனடியாக கட்சியின் மூத்த தலைவர்களின் அவசர சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் மல்லிகார்ஜுன் கார்கே, அதிர் ரஞ்சன் செளத்ரி ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

https://www.youtube.com/watch?v=zDzidaNcBpI

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
draupadi murmu: rashtrapatni remark bjp demands apology from congress mp adhir ranjan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X