For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தல்: தனித்து போட்டியிடுகிறதா பாஜக?

By BBC News தமிழ்
|
Edappadi and modi
Getty Images
Edappadi and modi

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சி விறுவிறுப்பாக களத்தில் இறங்கியுள்ள நிலையில், அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் தனித்தனியே போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அ.தி.மு.கவின் நிலை என்ன?

ஈரோடு கிழக்குத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. கடந்த ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, காலியாக இருந்த அந்தத் தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத் தேர்தல் நடக்கும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இதையடுத்து தமிழக அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது.

இந்த இடைத் தேர்தல் பல விதங்களில் முக்கியமான தேர்தலாக பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க. எப்படி போட்டியிடப்போகிறது, அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி தொடருமா, தி.மு.க. கூட்டணியில் காங்கிரசிற்கே இந்த இடம் தரப்படுமா என்ற பல்வேறு கேள்விகளுக்கு இந்த இடைத்தேர்தல் பதிலளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பல்வேறு கேள்விகளுக்கு பதில் வெளியாக ஆரம்பித்துள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடனேயே பா.ஜ.க. சுறுசுறுப்பாக களத்தில் இறங்கியது. இந்த தேர்தல் பணிகளைக் கவனிப்பதற்காகவும் ஒருங்கிணைப்பதற்காகவும் ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் வி.சி.வேதானந்தம், மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சி.சரஸ்வதி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் என்.பி. பழனிசாமி, மாவட்ட பார்வையாளர் எஸ்.ஏ. சிவசுப்பிரமணியம் உள்ளிட்ட 14 பேர் கொண்ட குழு அமைக்கப்படுவதாக பா.ஜ.க. அறிவித்தது.

கடந்த சில தேர்தல்களில் பா.ஜ.கவும் அ.தி.மு.கவும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட நிலையில், பா.ஜ.கவின் இந்த அறிவிப்பு பலரது புருவங்களை உயர்த்தியது. இந்த அறிவிப்பின் மூலம், பா.ஜ.க. அந்தத் தொகுதியில் தனித்துப் போட்டியிட முடிவுசெய்துவிட்டதாகவே தெரிகிறது.

தேர்தல்
Getty Images
தேர்தல்

2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, இந்தத் தொகுதி அ.தி.மு.க. கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் யுவராஜா போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் யுவராஜாவை திருமகன் ஈ.வெ.ரா., 8,904 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ஆகவே, இந்த இடைத் தேர்தலிலும் அ.தி.மு.க. கூட்டணியில் தங்களுக்கே அந்தத் தொகுதியை ஒதுக்க வேண்டுமென தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி விரும்பும் எனத் தெரிகிறது.. இது தொடர்பாக புதன்கிழமையன்று அ.தி.மு.க. தலைவர்களும் த.மா.காவின் தலைவர் ஜி.கே. வாசனும் சந்தித்துப் பேசியிருக்கின்றனர்.

இந்தப் பேச்சு வார்த்தைக்குப் பிறகு ஜி.கே. வாசனும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, இந்த இடைத் தேர்தலில் எந்தக் கட்சி போட்டியிடும் என்பது குறித்து இரு தலைவர்களும் தெளிவாகத் தெரிவிக்கவில்லை. கூட்டணி வெற்றிபெற வேண்டும் என்பதை மனதில் வைத்தே வேட்பாளரை அறிவிப்போம் என்பதையே திரும்பத் திரும்பக் கூறினர். மேலும், பா.ஜ.கவின் தேர்தல் பணிக் குழு அறிவிப்பு குறித்தும் அவர்கள் எதையும் தெரிவிக்கவில்லை.

தி.மு.க. கூட்டணியைப் பொறுத்தவரை, அந்தத் தொகுதி காங்கிரஸிற்குக் கொடுக்கப்பட்ட தொகுதி என்பதால், அதில் தாங்களே மீண்டும் போட்டியிடுவோம் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி அறிவித்திருக்கிறார்.

இந்தத் தொகுதி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கப்படும் நிலையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கே அந்தத் தொகுதி ஒதுக்கப்பட வேண்டுமென சமூக வலைதளங்களில் காங்கிரஸ் கட்சியினர் பதிவிட்டுவருகின்றனர். குறிப்பாக, திருமகன் ஈ.வே.ராவின் சகோதரர் சஞ்சய் சம்பத்திற்கு அந்தத் தொகுதியை ஒதுக்கலாம் என்ற கருத்துகளை அவர்கள் முன்வைத்து வருகின்றனர்.

2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து போட்டியிட்ட த.மா.கா. அ.தி.மு.கவின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டது. ஆனால், தற்போது அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் யார் என்ற வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்துவரும் நிலையில், இந்த முறை அ.தி.மு.க. போட்டியிட்டாலும் சரி, அந்தக் கூட்டணியில் த.மா.கா. போட்டியிட்டாலும் சரி, இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்குவதில் சிக்கல் ஏற்படும்.

அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் கூட்டணியாகப் போட்டியிட முடிவுசெய்து, அந்தத் தொகுதியை பா.ஜ.கவுக்கு ஒதுக்கிவிட்டால், இரட்டை இலை சின்னம் குறித்த தர்மசங்கடத்தை அ.தி.மு.க. தவிர்க்க முடியும். ஆனால், த.மா.கா. அந்தத் தொகுதியில் போட்டியிட விரும்பும் நிலையில், அ.தி.மு.க. என்ன செய்யவிருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்.

ஈரோடு கிழக்குத் தொகுதி 2008ஆம் ஆண்டில் தொகுதி மறுசீரமைப்பின்போது உருவாக்கப்பட்டது. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தே.மு.தி.கவுக்கு அந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டது. தே.மு.தி.கவின் வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் வெற்றிபெற்றார். 2016ஆம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.கவின் வேட்பாளர் கே.எஸ். தென்னரசு போட்டியிட்டார். அவரை எதிர்த்து தி.மு.கவின் ஆதரவுடன் அ.தி.மு.கவின் கே.எஸ். தென்னரசுதான் வெற்றிபெற்றார். 2021ஆம் ஆண்டுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈ.வே.ரா. போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
Erode East Constituency By-election: Is BJP Contesting Alone
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X