மாட்டுத் தீவன ஊழலில் சிக்கி சிறைக்கு போகும் லாலு - 22 ஆண்டு கால வழக்கு கடந்து வந்த பாதை

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாட்னா: 1990ஆம் ஆண்டு பீகார் முதல்வராக லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்தபோது மாட்டுத்தீவன ஊழலில் சிக்கினார். 22 ஆண்டு காலமாக நடந்து வந்த இந்த வழக்கில் மூன்றரை ஆண்டு காலம் தண்டனை பெற்றுள்ளார். வழக்கு கடந்து வந்த பாதையை காணலாம்.

பீகாரின் ஒரு பகுதியாக இருந்து, தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சாய்பாசா மாவட்ட கருவூலத்தில் மாட்டுத்தீவனம் தொடர்பான போலி பில்களை அளித்து ரூ.37.7 கோடி ஊழலில் ஈடுபட்டதாக லாலு பிரசாத் உள்ளிட்டவர்கள் மீது ஒரு வழக்கு பதிவானது.

Fodder scam Lalu prasad yadav: 22 year case Time line
 • 1996 ஜனவரி மாதம் சாய்பாசா நகரின் துணை ஆணையர் அமித் காரே, கால்நடை பராமரிப்புத் துறையில் நடத்திய சோதனையில் மாட்டுத்தீவன ஊழல் கண்டுபிடிக்கப்பட்டது.
 • 1997 ஜூன் பீகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் பெயரும் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் குற்றவாளியாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
 • லாலு பிரசாத் யாதவ் முதல்வர் பதவியிலிருந்து விலகி சிபிஐ நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனையடுத்து நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். லாலுவின் மனைவி ராப்ரி தேவி பீகார் மாநிலத்தின் முதல்வராகப் பதவியேற்றார்.
 • இந்த வழக்கில் மாஜி முதல்வர் லாலு பிரசாத் யாதவ் உடன், பீகார் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா, ஐக்கிய ஜனதாதள எம்.பி. ஜெகதீஷ் சர்மா உள்ளிட்ட மேலும் 44 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
 • 1994-95-ல் சைபாசா கருவூலத்திலிருந்து 78 போலி ஒதுக்கீடு கடிதங்கள் மூலம் லாலு ரூ.37.7 கோடி பணம் எடுத்துள்ளார்.
 • 2001 அக்டோபர் மாதம் பீகாரிலிருந்து தனிமாநிலமாக ஜார்கண்ட் பிரிக்கப்பட்டதும் உச்ச நீதிமன்றம் கால்நடை தீவன வழக்கை ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றியது. 2002 ஆம் ஆண்டு ராஞ்சி சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.
 • சாய்பாசா கருவூலத்திலிருந்து 48 கோடி முறைகேடு செய்ததாகக் கூறி 2007ஜூன் மாதம் ராஞ்சி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 58 பேரை குற்றவாளி என அறிவித்து இரண்டரை ஆண்டு முதல் 6 ஆண்டு வரை தண்டனை விதித்தது.
 • 2013 செப்டம்பர் மாதம் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சாய்பாசா மாவட்ட கருவூலத்தில் மாட்டுத்தீவனம் தொடர்பான போலி பில்களை அளித்து ரூ.37.7 கோடி ஊழலில் ஈடுபட்டதாக லாலு பிரசாத் மற்றும் பீகார் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா, ஐக்கிய ஜனதாதள எம்.பி. ஜெகதீஷ் சர்மா உள்ளிட்ட 44 பேர் மீது வழக்குப் பதிவானது. இதற்காக அவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. அவரது அரசியல் வாழ்க்கையே அஸ்தமனமானது. லாலுவின் லோக்சபா உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. லாலு பிரசாத் யாதவ் 11 ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்க முடியாத நிலை ஏற்பட்டது.
 • இந்தத் தீர்ப்பை எதிர்த்து, லாலு பிரசாத் ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் லாலு பிரசாத்தை விடுதலை செய்தது. ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சிபிஐ தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
 • இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, லாலு பிரசாத் மீதான ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்க ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று ஒன்பது மாதத்திற்குள் விசாரணையை முடிக்கவும் உத்தரவிட்டது. பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
 • உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சிபிஐ வழக்கு தொடர்ந்த போது, இரண்டு பணம் எடுப்புகளும் இருவேறு காலக்கட்டத்தில் நடந்துள்ளது, இரண்டு தடவைகளிலும் நிதி நஷ்டம், பாதிக்கப்பட்ட நபர்கள், பயனடைந்த நபர்கள் வேறு வேறு. எனவே பிரிவு 300 என்பதை இதில் கொண்டு வர முடியாது என்று சிபிஐ வாதிட்டது.
 • இதனையடுத்து தற்போது இரண்டு குற்றங்களும் வேறு வேறு எனக் கொண்டு உச்ச நீதிமன்றம் மீண்டும் விசாரணையைத் தொடங்க உத்தரவிட்டது. இந்த நிலையில் மாட்டு தீவனம் வாங்குவதற்கு தும்கா பகுதியில் உள்ள அரசு கருவூலத்தில் இருந்து, ரூ3.31 கோடி முறைகேடாக எடுக்கப்பட்டது தொடர்பான வழக்கு ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.
 • 2017 மே 8 ஆம் தேதி உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் தியோஹர் கருவூலத்தில் கால்நடை தீவனக் கணக்கில் 89 லட்சம் ரூபாய் முறைகேடு செய்த வழக்கின் விசாரணை தொடங்கியது.
 • ராஞ்சி சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு எண் ஆர்சி 64ஏ/96 மற்றும் ஆர்சி 38ஏ/96 தொடர்பாக நீதிபதி ஷிவ்பால் சிங் முன்னரும், வழக்கு எண் ஆர்சி 68ஏ/96 தொடர்பாக நீதிபதி எஸ்.எஸ். பிரசாத் முன்னரும், வழக்கு எண் ஆர்சி 47ஏ/96. தொடர்பாக நீதிபதி பிரதீப் குமார் விசாரித்து வந்தனர்.
 • டிசம்பர் 23, 2017: கடந்த டிசம்பர் 13ம் தேதி இந்த வழக்கின் இறுதி வாதமானது முடிவடைந்தது. லாலு உள்ளிட்ட 17 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்த நீதிமன்றம் ஜெகன்நாத் மிஸ்ரா உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்தது.
 • 2017 ஜனவரி 6: இந்த வழக்கின் முழு தண்டனை விவரம் வரும் ஜனவரி 3ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்திருந்த நிலையில் வழக்கறிஞர் விந்தேஷ்வரி பிரசாத் என்பவர் மரணமடைந்ததால் ஜனவரி 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் 4ஆம் தேதியும் தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படவில்லை, ஜனவரி 5ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒருவழியாக 6 ஆம் தேதியான இன்று தண்டனையை அறிவித்துள்ளது.
 • லாலு பிரசாத் யாதவிற்கு மூன்றரை ஆண்டுகள் தண்டனையும், 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது ராஞ்சி சிறப்பு நீதிமன்றம். 22 ஆண்டு காலமாக நடந்து வந்த இந்த வழக்கில் இப்போது தண்டனை பெற்று சிறைக்கு செல்லப்போகிறார் லாலு பிரசாத் யாதவ். லாலு மீது மேலும் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன. லாலுவின் அரசியல் வாழ்க்கையே அஸ்தமனமாகியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Fodder Scam Case here the Timeline of the scam that has haunted Lalu Prasad Yadav for 2 decades.The quantum of sentence against Former Bihar Chief Minister and Rashtriya Janata Dal (RJD) Chief Lalu Prasad Yadav and 15 other convicts in the 1996 fodder scam case will be pronounced by a special CBI court.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X