For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முன்னாள் பிரதமர் வாஜ்பேயி காலமானார்

By BBC News தமிழ்
|

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி, இன்று மாலை 5.05 மணிக்கு டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 93.

Atal Bihari Vajpayee
Getty Images
Atal Bihari Vajpayee

சிறுநீரக கோளாறு உள்ளிட்ட காரணங்களுக்காக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் ஜூன் 11 அன்று அனுமதிக்கப்பட்ட அவர் தொடர் சிகிச்சையில் இருந்தார்.

கடந்த 36 மணிநேரமாக அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து, உயிர் காப்பு சாதனங்களின் துணையுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு ஞாபக மறதி, நீரிழிவு உள்ளிட்ட உடல் உபாதைகள் இருந்ததாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்திருந்தனர்.

மூன்று முறை இந்தியாவின் பிரதமராக இருந்த வாஜ்பேயி, 2009 முதல் பொது வாழ்வில் இருந்து விலகி இருந்தார். அதே ஆண்டு ஏற்பட்ட வாத நோயால் அவரது நடக்கும் திறனும், பேசும் திறனும் பறிபோனது.

காங்கிரஸ் கட்சியை சேராத இந்தியப் பிரதமர்களில் முதல் முறை தனது முழு பதவிக் காலத்தையும் நிறைவு செய்தவர் வாஜ்பேயி.

1924 டிசம்பர் 25 அன்று மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் பிறந்த வாஜ்பேயி, 1957இல் பாரதிய ஜன சங்கம் சார்பில் முதல் முறையாக நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார்.

அவசர நிலைக்குப் பிறகு ஜன சங்கம் ஜனதா கட்சியுடன் இணைக்கப்பட்டபின், 1977 முதல் 1979 வரை மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதா கட்சி ஆட்சியில் வாஜ்பேயி வெளியுறவு அமைச்சராக இருந்தார்.

Atal Bihari Vajpayee
Getty Images
Atal Bihari Vajpayee

1980-களில் ஜனதா கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியைத் தொடங்கிய முன்னணித் தலைவர்களில் ஒருவராக வாஜ்பேயி இருந்தார்.

1998ஆம் ஆண்டு பொக்ரானில் நடந்த அணுகுண்டு சோதனை, 1999இல் கார்கில் போரில் பாகிஸ்தானை இந்தியா வென்றது, பிரதமரின் தங்க நாற்கர சாலை திட்டம் மூலம் நாடு முழுவதையும் இணைக்கும் நெடுஞ்சாலைகள் அமைத்தது ஆகியன வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது நடந்தவற்றில் குறிப்பிடத்தகுந்தவை.

1996ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததால், அப்போதைய குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா அழைப்பு விடுத்ததன் பேரில் அடல் பிஹாரி வாஜ்பேயி தலைமையிலான அரசு பதவியேற்றது. எனினும், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் 13 நாட்களில் வாஜ்பேயி பதவி விலகினார்.

1998இல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் பிரதமானார் வாஜ்பேயி. எனினும் 13 மாதங்களில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆதரவை விலக்கிக்கொண்டதால், வாஜ்பேயி தலைமையிலான அரசு கவிழ்ந்தது.

Atal Bihari Vajpayee
Getty Images
Atal Bihari Vajpayee

செப்டம்பர் 1999இல் நடந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்று, வாஜ்பேயி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைத்தது. 2004 செப்டம்பர் மாதம் வரை நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் இருந்த நிலையில், தொடர்ச்சியாக சில மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக வென்றதால், நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு, நான்கு மாதங்கள் முன்னதாகவே தேர்தல் நடத்தப்பட்டது. எனினும் அதில் பாஜக தோல்வி அடைந்தது.

அவர் கடைசியாக போட்டியிட்ட 2004 தேர்தலில், லக்னோ மக்களவைத் தேர்தலில் வாஜ்பேயி வெற்றி பெற்றிருந்தாலும், கூட்டணியின் தோல்விக்கு பொறுப்பேற்று அவர் மக்களவை எதிர்கட்சித் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்தி கவிஞராகவும் பரவலாக அறியப்பட்ட வாஜ்பேயி இறுதி வரை திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்தார். அவருக்கு நமிதா எனும் வளர்ப்பு மகள் உள்ளார்.

2015ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது அவருக்கு வழங்கப்பட்டது.

பிபிசி தமிழின் அண்மை செய்திகள்

BBC Tamil
English summary
Former Prime Minister Vajpayee passed away today in Delhi. He was 93.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X