‛அமித்ஷா’ சொல்லியும் கேட்கலையே.. குஜராத்தில் 19 தொகுதிகளில் பாஜகவுக்கு சிக்கல்.. அதிரடி நடவடிக்கை
காந்திநகர்: குஜராத் சட்டசபை தேர்தலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான குழுவினர் பேசியும் கூட 19 தொகுதிகளில் பாஜக மூத்த தலைவர்கள் அதிருப்தியாளர்களாக மாறி சுயேச்சையாக போட்டியிட்டுள்ளனர். இது அந்த தொகுதிகளில் பாஜகவுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பாஜக சாட்டையை சுழற்றி அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.
குஜராத்தில் உள்ள 182 சட்டசபை தொகுதிகளுக்கு 2 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக டிசம்பர் 1ம் தேதி 89 தொகுதிகளுக்கும், 2வது கட்டமாக டிசம்பர் 5ல் 93 தொகுதிகளுக்கும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இங்கு ஆளும், பாஜக, எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ், ஆம்ஆத்மி என மும்முனை போட்டி நிலவி வருகிறது. 27 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடக்கும் நிலையில் மீண்டும் ஆட்சியை பிடிக்க அக்கட்சி முயற்சித்து வருகிறது.

பாஜகவுக்கு புதிய தலைவலி
மேலும் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலம் குஜராத் என்பதால் இருவரும் மிகவும் கவனமாக செயல்பட்டு வருகின்றனர். தற்போதைய கருத்து கணிப்புகள் என்பது பாஜக தான் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கூறி வருகிறது. இந்நிலையில் பாஜகவில் அதிகரிக்கும் அதிருப்தியாளர்கள் எண்ணிக்கை என்பது அக்கட்சிக்கு பெரும் சவாலாக மாறி உள்ளது. இதுதான் தற்போது பாஜகவில் பெரிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

பாஜகவில் அதிருப்தியாளர்கள்
அதாவது குஜராத்தை பொறுத்தமட்டில் தற்போதைய தேர்தலில் அமைச்சர்களாக உள்ள 6 பேர் உள்பட 30க்கும் அதிகமானவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. இவர்களுக்கான வெற்றி வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது என கட்சி எடுத்த சர்வே கூறிய நிலையில் புதிதாக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் சீட் கிடைக்காதவர்கள் அதிருப்தியாளர்களாக மாறி உள்ளனர். இவர்கள் தற்போது சுயேச்சையாக களமிறங்கி உள்ளனர்.

12 பேர் நீக்கம்
இந்நிலையில் தான் தற்போது 2வது கட்டமாக பாஜகவை சேர்ந்த நிர்வாகிகள் 12 பேரை பாஜக கட்சியில் இருந்து நீக்கி உள்ளது. இதில் 6 முறை எம்எல்ஏவாக இருந்தவர், முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த நிர்வாகிகள் அடங்குவர். நீக்கம் செய்யப்பட்டவர்களில் வகோடியாவின் தற்போதைய எம்.எல்.ஏ மது ஸ்ரீவஸ்தவ்வும் அடங்குவர். இவர் கடந்த 2002 கலவரம் உட்பட பல்வேறு போலீஸ் வழக்குகளை எதிர்கொண்டவர். மேலும் குஜராத்தில் வலுவான அரசியல்வாதியாக இவர் அறியப்படும் நிலையில் தான் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

யாரெல்லாம் நீக்கம்
இவர் தவிர தற்போதைய அறிவிப்பின்படி பத்ரா தொகுதி முன்னாள் எம்எல்ஏ டினு படேல், பயாத் முன்னாள் எம்எல்ஏ தவல்சிங் ஜாலா, குல்திப்சிங் ரவுல் (சாவ்லி), கதுபாய் பாகி (ஷெஹ்ரா), எஸ்எம் காந்த் (லுனாவாடா), ஜேபி படேல் (லுனாவாடா), ரமேஷ் ஸலா (உம்ரேத்), அமர்ஷி ஸலா (கம்பட்), ராம்சிங் தாகூர் (கெரலு), மாவ்ஜி தேசாய் (தனேரா) லெப்ஜி தாக்கூர் (தீசா) உள்ளிட்டவர்கள் அடங்குவர்.

காரணம் என்ன?
இவர்கள் 12 பேருக்கும் பாஜகவில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் சுயேச்சையாக தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்தனர். மனுக்களை வாபஸ் பெற கட்சி நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. இதனால் வேறு வழியின்றி பாஜக அவர்களை கட்சியில் இருந்து நீக்கி உள்ளது. இவர்கள் அனைவரும் 2வது கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள 93 தொகுதிகளில் மனுத்தாக்கல் செய்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

19 ஆக அதிகரிப்பு
முன்னதாக முதற்கட்ட தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளில் சுயேச்சையாக களமிறங்கிய 7 நிர்வாகிகளை சில நாட்களுக்கு முன்பு பாஜக நீக்கம் செய்தது. தற்போது 12 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் பாஜகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட அதிருப்தியாளர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. இதுதான் குஜராத் தேர்தலில் பாஜகவுக்கு பெரும் பிரச்சனையாக மாறி உள்ளது.

10 சதவீத தொகுதியில்...
குஜராத்தை பொறுத்தவரை மொத்தம் 182 தொகுதிகள் உள்ள நிலையில் 10 சதவீத தொகுதிகளில் பாஜக அதிருப்தியாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இது தேர்தலில் பாஜகவுக்கான ஓட்டுக்களை பிரிக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். ஒருவேளை இது நடந்தால் பாஜகவுக்கு பிரச்சனையாக மாறலாம். இருப்பினும் பாஜகவின் ஓட்டுக்கள் அதிருப்தி வேட்பாளர்களுக்கு கிடைக்காமல் இருக்க அக்கட்சி நிர்வாகிகள் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகின்றனர். இதனால் குஜராத் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.












Click it and Unblock the Notifications