For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முஸ்லிம் பெண்களுக்கு எதிரான வெறுப்பு சமூக வலைத்தளங்களில் பரவுவது எப்படி? பிபிசி புலனாய்வு

By BBC News தமிழ்
|
பிபிசி கள ஆய்வு
BBC
பிபிசி கள ஆய்வு

கடந்த ஆண்டு மே 13 அன்று, சில ட்விட்டர் கணக்குகள், 'லிபரல் டோஸ்' என்ற யூடியூப் சேனலின் லைவ் ஸ்ட்ரீமின் கவனத்தை ஈர்த்தது. அங்கு ஈத் பண்டிகையைக் கொண்டாடும் பாகிஸ்தான் சிறுமிகளின் படங்கள் மற்றும் வீடியோக்களில் மோசமான கருத்துகள் வெளியிடப்பட்டன.

இந்த லைவ் ஸ்ட்ரீமின் தலைப்பு, "பாகிஸ்தானி பெண்கள் ஆய்வு: இன்று உங்கள் காமம் நிறந்த கண்களால் பெண்களை பார்ப்பீர்கள்".

இந்த சேனலின் வீடியோக்கள் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள் நிறைந்ததாக இருந்தது என்று செய்திகள் தெரிவிக்கின்றன. பின்னர் இந்த சேனல் YouTube இலிருந்து அகற்றப்பட்டது.

மே 13 அன்று நடந்த நேரடி ஒளிபரப்பில், இந்த சிறுமிகளைப் பற்றி ஆபாசமான விஷயங்கள் கூறப்பட்டன. அவர்கள் மீது வசவுகள் பொழியப்பட்டன.

தன்னை அம்ப்ரீன் என்று வர்ணிக்கும் பாகிஸ்தானிய பெண் ஒருவர், "ஒவ்வொரு பாகிஸ்தானிய பெண்ணும் தனது படத்தை நீக்குகிறார்... பெண்கள் பாதுகாப்பு இல்லாதது போல உணர்கிறார்கள், அவர்கள் பயப்படுகிறார்கள்..." என்று லைவ்ஸ்ட்ரீமில் ட்வீட் செய்துள்ளார்.

இந்த லைவ்ஸ்ட்ரீமில் சுமார் 40 பாகிஸ்தானிய பெண்களின் படங்கள் அவர்களின் அனுமதியின்றி வெளியிடப்பட்டன.

மேலும் 500 க்கும் மேற்பட்டவர்கள் அந்த நேரலை ஸ்ட்ரீமில் சேர்ந்தனர். அவர்கள் சிறுமிகளை 10 என்ற அளவுகோலில் மதிப்பீடு செய்தனர்.

இவை அனைத்திற்கும் பின்னால் டெல்லிக்கு அருகில் வசிக்கும் 23 வயதான ரித்தேஷ் ஜா மற்றும் தன்னை கேஷு என்று கூறிக்கொள்ளும் ஒரு நபரும் இருந்தனர்.

சம்பவம் நடந்து எட்டு மாதங்களுக்குப் பிறகு பிபிசியிடம் பேசிய ரித்தேஷ் ஜா, "என் மனம் முழுவதும் வெறுப்பு நிறைந்திருந்தது. சமூக வலைதளங்களிலும், இன்ஸ்டாகிராம், ரெட்டிட், டெலிகிராம் போன்றவற்றில் ஹிந்து பெண்களின் படங்களை மார்பிங் செய்த முஸ்லிம்களின் கேவலமான பதிவுகளை நான் பார்த்திருக்கிறேன். நான் பழிவாங்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் நான் தவறு செய்துவிட்டேன். பின்னர் மன்னிப்பு கேட்கும் ஒரு வீடியோவை வெளியிட்டேன்," என்றார்.

ரித்தேஷ் ஜாவும், 'சுல்லி டீல்ஸ்' மற்றும் 'புல்லி பாய்' ஆப்ஸின் தயாரிப்பாளர்களும் ஒருவேளை ஒருவரையொருவர் நேருக்கு நேர் சந்தித்திருக்க மாட்டார்கள். ஆனால் ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தின் தாக்கத்தால் இந்த இளைஞர்கள் அனைவரும் ,இணையத்தின் மற்றொரு பக்கத்தை வெளியே கொண்டு வந்துள்ளனர்.

இதில் முஸ்லிம்களுக்கு எதிராகப் பரவும் வெறுப்பு பல பரிமாணங்களை எடுத்து வருகிறது. அதாவது முஸ்லிம் பெண்களின் படங்களை ஆன்லைனில் ஏலம் விடுவதற்காக உருவாக்கப்பட்ட 'சுல்லி டீல்ஸ்' மற்றும் 'புல்லி பாய்' ஆப்ஸ் முதல், பாகிஸ்தானிய பெண்களின் படங்களை யூடியூப்பில் நேரடியாக ஒளிபரப்புவது முதல் கிளப்ஹவுஸ் செயலியில் முஸ்லிம் பெண்களின் உடல்கள் குறித்து அநாகரீகமான கருத்துக்கள். வெளியிடுவது வரை வெறுப்பின் பரிமாணங்கள் உள்ளன.

பெண்கள்
BBC
பெண்கள்

இந்த வெறுப்புக்கு முஸ்லிம் பெண்கள் மட்டும் பலியாகவில்லை என்பதை நாங்கள் கண்டறிந்தோம். இந்து பெண்களின் முகங்கள் நிர்வாண புகைப்படங்களில்

மார்ஃபிங் செய்யப்பட்டு அவர்கள் துன்புறுத்தப்படுகின்றனர். கற்பழிப்பு மிரட்டல்களும் அளிக்கப்படுகின்றன. தலித்துகள் தாழ்வாக காட்டப்படுகின்றனர். அவர்களுக்கு எதிரான தீண்டாமை நியாயப்படுத்தப்படுகிறது.

தீவிர வலதுசாரிகளின் ஆன்லைன் உலகம் பற்றிய எங்கள் விசாரணையில், இந்த உலகத்தை வளர்த்த, இந்த உலகின் ஒரு பகுதியாக இருக்கின்ற மற்றும் மேலும் பலரை இதில் சேர்த்துள்ள நபர்களிடம் நாங்கள் பேசினோம்.

ஆரம்ப தாக்கம்

2013-14ஆம் ஆண்டில் நரேந்திர மோதியின் தலைமையில் முதல்முறையாக இந்தியாவில் உறுதியான வலதுசாரி அலை வீசியது. அந்த நேரத்தில்தான் முதன்முறையாக தன் கைக்கு மொபைல் வந்ததாக ரித்தேஷ் கூறினார். அப்போது அவர் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்.

அவருக்கு படிப்பதில் அவ்வளவாக விருப்பம் இருக்கவில்லை. "சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் வருவது வழக்கம். அரசியல்வாதிகளின் பேச்சுகளைக் கேட்பேன். 'இந்துக்கள் ஆபத்தில் உள்ளனர்', 'அவர்கள் ஒரு அடி கொடுத்தால், நீங்கள் பத்து அடி கொடுங்கள்' போன்ற முழக்கங்களை கேட்பேன். நாள் முழுவதும் இந்து-முஸ்லிம் விவகாரத்தில் ஈடுபட்டிருப்பேன். இணையத்தில் பாகிஸ்தானியர்களுடன் வாதிடத் தொடங்கினேன்," என்று ரித்தேஷ் நினைவு கூர்ந்தார்.

"நாம் எப்போது அடிப்படைவாதியாக மாறினோம் என்று நமக்கே தெரியாது. நமக்குள் கோபம் நிறைந்துவிடுகிறது. நம் மதத்தின் காரணமாக நமக்கு குறைவாகக் கொடுக்கப்படுவதாவும், பாகுபாடு உள்ளதாகவும் கருத ஆரம்பிக்கிறோம். ஆன்லைன்-ஆஃப்லைன் வன்முறை பற்றியும் நினைக்க தொடங்கும் அளவிற்கு இது சென்றுவிடுகிறது," என்றும் அவர் குறிப்பிட்டார்.

ரித்தேஷ் தனக்குத்தானே பயிற்சி பெற்று யூடியூப்பில் 15-20 சேனல்களை உருவாக்கினார். சில காலத்திற்குள்ளாகவே

அவரது சந்தாதாரர்களின் எண்ணிக்கை லட்சங்களை எட்டியது. ரித்தேஷ் பணம் சம்பாதிக்கத் தொடங்கினார்.

புலனாய்வு
BBC
புலனாய்வு

ஹலாலா முறை, பர்தா அணிதல், முஸ்லிம்களுக்கு ஏராளமான குழந்தைகள் பிறப்பது போன்ற விஷயங்கள் குறித்து இவற்றில் அவர் பேசினார். அவர் தனது இந்த 'ப்ளாக் ஹ்யூமருக்கு', 'டோஜே வழிபாட்டு முறை' என்று பெயரிட்டார். இவற்றுக்கு எதிரான புகாரை அடுத்து, இந்த சேனல்கள் அனைத்தும் யூடியூப்பில் இருந்து நீக்கப்பட்டன.

ரித்தேஷ் தற்போது புதிய சேனல்களை தொடங்கியுள்ளார். அவரின் அணுகுமுறை முன்பு போலவே உள்ளது. இவருடைய வீடியோக்களில் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துகள் நிறைந்துள்ளன. சிலர் இந்த புதிய சேனல்கள் பற்றியும் புகார் அளிக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்த வீடியோக்களின் தொடக்கத்தில் உள்ள ஒரு பொறுப்புத்துறப்பு, இந்திய அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள பேச்சு சுதந்திரம் பற்றி குறிப்பிடுகிறது. வீடியோ YouTube இன் சமூக வழிகாட்டுதல்களைப் பின்பற்றுகிறது என்றும் கூறுகிறது.

இது எல்லாம் 'டார்க் ஹ்யூமர்" என்று ரித்தேஷ் தனது விளக்கத்தில் கூறியுள்ளார். தான் செய்த பெண்களின் படங்களை ஸ்ட்ரீமிங் செய்வது, "டிக்டாக் அல்லது இன்ஸ்டா-ரீல்ஸ் அல்லது அழகுப் போட்டி போன்றது" என்று அவர் கூறுகிறார்.

இப்படிப்பட்ட வீடியோ எடுக்கும் இந்த இளைஞர்கள் யார்?

யூடியூப்
Getty Images
யூடியூப்

ஸ்வேதா சிங் (18 வயது), விஷால் ஜா, மயங்க் ராவத் மற்றும் நீரஜ் பிஷ்னோய் (21), ஓம்காரேஷ்வர் தாக்கூர்(26) மற்றும் நீரஜ் சிங் (28), ஆகியோர், 'சுல்லி டீல்ஸ்' மற்றும் 'புல்லி பாய்' செயலியை உருவாக்கியதற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டவர்கள்.

கிளப்ஹவுஸ் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட யஷ் பராஷருக்கு வயது 22, ஜெய்ஷ்னவ் கக்கருக்கு 21 வயது, ஆகாஷுக்கு வெறும் 19 வயதுதான்.

இணையத்தின் ரகசியத்தன்மை நீங்கள் பிடிபட மாட்டீர்கள் என்ற உணர்வைத் தருகிறது, இதன் காரணமாக மனிதாபிமானம் குறைந்து வன்முறை மிகவும் ஆபத்தான வடிவத்தை எடுக்கிறது என்கிறார் மும்பை காவல்துறையில் முதல் சைபர் பிரிவைத் தொடங்கிய சிறப்பு ஐஜி பிரஜேஷ் சிங்.

"இந்த நபர்களைப் பிடிக்க பல தடயவியல் தடுப்பு நுட்பங்கள் உள்ளன. ஆனால் இந்த நபர்களுக்கு அவற்றைத்தவிர்ப்பது எப்படி என்று ஏற்கனவே தெரிந்திருந்தால் அவர்கள் VPNகள், Tor, மெய்நிகர் இயந்திரங்கள் மற்றும் குறியாக்கத்தை (encryption)பயன்படுத்துகின்றனர்,"என்று அவர் மேலும் கூறினார்.

முஸ்லிம் பெண்களை ட்ரோல் செய்யும் 'tride' குழுவிலும் அவர் உறுப்பினராக இருந்ததாக ஓம்காரேஷ்வர் தாக்கூர் கைது செய்யப்பட்டபோது, டெல்லி போலீஸ் டிசிபி கே.பி.எஸ். மல்ஹோத்ரா ட்விட்டரில் கூறினார்.

https://twitter.com/ani/status/1480029411155988486

இந்திய வலதுசாரி அடிப்படைவாதம்: 'trides'

இந்தியாவில், பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததில் இருந்து, வலதுசாரி சித்தாந்தத்தின் பிரச்சாரம் அதிகரித்துள்ளதாக நம்பப்படுகிறது.

வலதுசாரி சிந்தனையுடன் தொடர்புடைய இரண்டு பெரிய குழுக்கள் உள்ளன - ஒன்று 'ட்ரைய்ட்ஸ்' மற்றொன்று 'ராய்தா' என்று சாதாரண மக்களுக்கு சில நாட்களுக்கு முன்புதான் தெரியவந்தது.

'ட்ரைய்ட்ஸ்' என்பது 'ட்ரெடிஷனலிஸ்ட்' (பாரம்பரியவாதி) என்பதன் சுருங்கிய வடிவம். அதாவது அவர்கள் பழைய மரபுகளின்படி வாழ்வதே சரி என்று கருதுகிறார்கள். மாற்றங்களை விரும்புவதில்லை. சதி, குழந்தைத் திருமணம், முக்காடு போன்றவற்றை சரி என்று கருதுகிறார்கள். சாதி அமைப்பில் பிராமணர்களை முதலிடத்தில் வைக்கிறார்கள்.

அவர்கள் நரேந்திர மோதியின் ஆதரவாளராக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. பெண்கள் வேலை செய்யாமல் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

'புல்லி பாய்' மற்றும் 'சுல்லி டீல்ஸ்'களால் பாதிக்கப்பட்ட சானியா சயீத், "ட்ரைய்ட்ஸ்' குறித்து இவ்வாறு கூறுகிறார். "இவர்கள் ஒன்றல்ல, இரண்டல்ல. இவர்கள் நிறையப்பேர். 20-23 வயதுக்குட்பட்டவர்கள். மத்தியில் ஒரு இரக்கமற்ற தலைவர் இருக்க வேண்டும் என்று இவர்கள் கருதுகின்றனர்."

"இவர்கள் ஆணவக் கொலைகளைப் போற்றுகிறார்கள்.சாதி அமைப்பை நம்புகிறார்கள்.முஸ்லிம்களாகவோ அல்லது கிறிஸ்தவர்களாகவோ இருக்கக்கூடாது என்றும் சொல்வார்கள்," என்கிறார் சானியா சயீத்.

ட்விட்டரில் ஹெச்ஆர் என்ற ஹேண்டிலை பயன்படுத்தும் நபர், தானும் ஒரு 'ட்ரைய்ட்'ஆக இருந்ததாகக்கூறுகிறார். ஹெச்.ஆர் தலித் சாதியைச் சேர்ந்தவர்.

அவர் தனது அடையாளத்தை வெளியிடவேண்டாம் என்று கோரினார். பெயர் வெளியானால் தனது தனிப்பட்ட தகவல்கள் பகிரங்கமாகிவிடுமோ என்று அவர் பயப்படுகிறார்.

2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அவர் இன்ஸ்டாகிராமின் 'ட்ரைய்ட்' குழுவில் சேர்க்கப்பட்டார். அவர் சமூக ஊடகங்களில் முஸ்லிம்களுடன் நன்றாக வாதிடக்கூடியவர் என்று அவரிடம் கூறப்பட்டது. இந்து மதத்தைப் பற்றிய சரியான தகவல்களைப் பரப்புவதே இந்தக் குழுவின் நோக்கம் என்று அவரிடம் சொல்லப்பட்டது. ஹெச்.ஆர். அந்த குழுவில் சேர்ந்தார்.

கள ஆய்வு
BBC
கள ஆய்வு

"நான் இந்து மதத்தின் பழைய பாரம்பரியங்களான சதி, குழந்தை திருமணம், தீண்டாமை போன்றவற்றை சரி என்று நம்பினேன். அந்த வரலாற்றில் நான் பெருமைப்பட்டேன். அதனால் நான் அந்தக் குழுவில் சேர்ந்தேன்," என்று அந்த நாட்களைப் பற்றி அவர் கூறுகிறார்.

14-15 வயதுக்குட்பட்ட இந்து இளைஞர்களை இந்தக்குழுவில் இணைக்க ஹெச் ஆரிடம் சொல்லப்பட்டது.

குழுவில் மேலோட்டமாக புனித நூல்கள் பற்றி பேசப்பட்டாலும், அதன் உறுப்பினர்கள் வெறுப்பு மற்றும் துன்புறுத்தல் நடத்தைகளுக்கு முக்கியத்துவம் தருவதை காலப்போக்கில் அவர் கண்டார். அதன் உறுப்பினர்கள் தலித்துகளை இந்துக்களாகக் கருதாதது, இந்து தேசத்தை உருவாக்க முஸ்லிம் பெண்களை பலாத்காரம் செய்வது தொடர்பாக பேசுவது, குழந்தைகளின் கொலைகளைக்கூட நியாயப்படுத்துவது போன்றவற்றை அவர் பார்த்தார். சாதி பெருமைக்காக செய்யப்படும் 'கௌரவக் கொலை'களை ஊக்குவிப்பதையும், கலப்புத் திருமணம் செய்பவர்களை மிரட்டுவதையும் கவனித்தார்.

சில பெண்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சிக்கும் அளவுக்கு துன்புறுத்தல் இருந்தது என்று ஹெச் ஆர் கூறுகிறார்.

ஆனால், 'ட்ரைய்ட்' சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டவர்களில் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் உள்ளனர். முகத்தை மூடிக்கொள்ளும் செயல்முறையை அவர்கள் ஆதரிக்கின்றனர். 'கர்வா சவுத்'( கணவர்களுக்காக மனைவி இருக்கும் விரதம்) ஐ கடைப்பிடிக்கும் ஆண்களை 'நாமர்த்' (ஆண்மையற்றவர்கள்) என்று ட்ரோல் செய்கின்றனர்.

குழுவில் இருந்தபோது HR தனது சாதியை வெளிப்படுத்தவில்லை. ஆனால் அது அவருக்கு மிகவும் வேதனையாக இருந்தது.

"நான் அவர்களுக்கு விளக்கினேன். ஆனால் அவர்கள் எதையும் கேட்க தயாராக இல்லை. சில நேரங்களில் அவர்களுக்கு இதயமே இல்லை என்று தோன்றியது. 'யாருடைய வார்த்தைகளையும் பொருட்படுத்தாத, தன் கருத்தை நிலைநாட்ட எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய ஆணாக இருங்கள்' என்று என்னிடம் சொல்லப்பட்டது. ஆனால் நான் யாரையும் புண்படுத்த விரும்பவில்லை," என்றும் அவர் தெரிவித்தார்.

"அவர்கள் கும்பல் கொலைகளின் படங்களை பகிர்ந்து கொண்டனர், தங்கள் பகுதியில் முஸ்லிம் பையனை எப்படி அடித்தார்கள் என்பதைப் பற்றி தற்பெருமை பேசிக்கொண்டனர்," என்றும் அவர் குறிப்பிட்டார்.

இறுதியில் HR அந்த குழுவையும்,' ட்ரைய்ட்' சமூகத்தையும் விட்டு வெளியேறி இப்போது தன்னைப்போன்ற பிறருடன் இணைந்து, 'ட்ரைய்ட்ஸ்' ஐ நிறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

'ட்ரைய்ட்ஸ்' உடன் உடன்படாத வலதுசாரிகள்: ராய்தா

பிபிசி கள ஆய்வு
BBC
பிபிசி கள ஆய்வு

'ட்ரைய்ட்ஸ்'கள், தங்கள் கருத்துடன் உடன்படாத வலதுசாரிகளை 'ராய்தா' என்று அழைக்கத் தொடங்கினர்.

மோனா ஷர்மா ஒரு இந்து, வலதுசாரி. மேலும் 'ராய்தா' என்ற வரையறையின் கீழ் வருபவர். ஆனால் அவர் அந்தச் சொல்லை இழிவானதாகக் காண்கிறார்.

ட்ரைய்ட் மற்றும் ராய்தாவுக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்கிய மோனா, " 'ராய்தாக்கள்' என்பவர்கள் ஆர் எஸ் எஸ், பாஜக, வலதுசாரி, இந்துத்துவ கொள்கையின் ஆதரவாளர்கள். யோகி, மோதி போன்ற தலைவர்களை விரும்புகிறார்கள். ஆனால் ட்ரைய்ட்களுடன் ஒப்பிடுகையில், 'ராய்தாக்கள்' சட்டத்திற்கு உட்பட்ட வகையில் தங்கள் கருத்துக்களை முன்வைக்கின்றனர்," என்றார்.

தனது "முற்போக்கான" பார்வையால், தான் 'ட்ரைய்ட்' ஆல் குறிவைக்கப்பட்டதாக மோனா ஷர்மா கூறுகிறார். அவர் "ரண்டி"(விபச்சாரி) போன்ற வார்த்தைகளால் இழிவுபடுத்தப்பட்டார். அவரது கணவரின் தனிப்பட்ட தகவல்கள் பகிரங்கப்படுத்தப்பட்டன.

இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்து தாராளவாத மற்றும் இடதுசாரி சித்தாந்தங்களுடன் தொடர்புடையவர்களுடன் விவாதித்து ட்ரோல் செய்வதை மோனா ஒப்புக்கொள்கிறார். ஆனால் 'ட்ரைய்ட் பிரிவு' மிகவும் ஆபத்தானது என்று அவர் விவரிக்கிறார்.

"பெண்கள் வீட்டில் இருக்க வேண்டும், குழந்தைகளைப் பெற வேண்டும், முக்காடு அணிய வேண்டும், அதிகம் படிக்கக் கூடாது, காதல் திருமணங்களைச் செய்யக்கூடாது என்ற தாலிபன்களின் கருத்துகளைப் போலவே அவர்களது கருத்தும் உள்ளது. அவர்கள் வலுப்பெற்றால், சட்டம் - ஒழுங்கு முடிவுக்கு வந்துவிடும், பெண்களின் வாழ்க்கை 16 ஆம் நூற்றாண்டுக்குத் திரும்பிவிடும்," என்று பிபிசியுடன் பேசிய மோனா குறிப்பிட்டார்.

2020 ஆம் ஆண்டில், கோவிட் தொற்றுநோயைத் தடுக்க முதல் பொதுமுடக்கம் அமலான நேரத்தில், இதுபோன்ற 'ட்ரைய்ட் கணக்குகள்' மிகவும் சுறுசுறுப்பாக இயங்கத்தொடங்கின என்று அவர் மேலும் கூறினார்.

"முதலில் அவர்கள் பாஜக ஆதரவாளர் போலவே தோன்றினார்கள். எங்களைப் போலவே, இஸ்லாம், கலவரம் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிராகப் பேசினார்கள். ஆனால் என்னைப் போன்ற வலதுசாரி இந்துப் பெண்கள் அவர்களுடைய பழைய சித்தாந்தத்தை கேள்வி கேட்கத் தொடங்கியபோது, அவர்கள் எங்களையே குறிவைக்கத் தொடங்கினர்."

"மது அருந்தும், மேற்கத்திய ஆடைகளை அணியும் நவீன படித்த பெண்களை அவர்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள்.

தலித்துகள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை நாங்கள் ஆதரிக்காததால் அவர்கள் எங்களை முழுமையான இந்துக்களாக கருதுவதில்லை," என்று அவர் சுட்டிக்காட்டினார்.

"ட்ரைய்டுகளுக்கு', பிரதமர் மோதியைக்கூட பிடிக்காது. இந்து நாட்டை உருவாக்குவதில் அவருக்கு திறமையில்லை என்று அவர்கள் கருதுகிறார்கள். அவரை 'மௌலானா மோதி' என்று அழைக்கிறார்கள்," என்று மோனா குறிப்பிட்டார்.

வலதுசாரி சித்தாந்தம் பற்றிய கட்டுரைகளை எழுதும் கட்டுரையாளர் அபிஷேக் பானர்ஜி, தன்னை ஒரு ' ராய்தா' என்றும், வலதுசாரிகளின் இந்த வெவ்வேறு பிரிவுகளை இடதுசாரி பிரிவுகளுடன் ஒப்பிடுகிறார்.

"வலதுசாரிகளின் இந்த பிளவுகள் நீண்ட காலமாக இருந்து வருகின்றன. ஆனால் இப்போது வலதுசாரி ஆட்சியில் இருப்பதால் அவை விவாதத்திற்கு வருகின்றன. இது அரசியலில் ஆதிக்கம் செலுத்துகிறது மற்றும் சாதாரண மக்களிடையே பிரபலமாகி வருகிறது," என்று பிபிசியுடன் பேசுகையில் அவர் தெரிவித்தார்.

'ட்ரைய்ட்' மற்றும் 'ராய்தா' தவிர, 'யூனியனிஸ்டுகள்' மற்றும் 'ப்ளாக் பில்லர்ஸ்' போன்ற சித்தாந்தங்களும் இந்த இடத்தில் உள்ளன.

ஏழை தலித் மக்கள் மாதிரிப் படம்
Getty Images
ஏழை தலித் மக்கள் மாதிரிப் படம்

தங்களை 'யூனியனிஸ்டுகள்' என்று அழைத்துக்கொள்பவர்கள் தலித்துகளை தூய்மையற்றவர்கள் என்று கருதுகிறார்கள், அவர்களை இந்த உலகத்திலிருந்து அகற்றுவது பற்றி பேசுகிறார்கள் என்று இந்த உலகத்துடன் தொடர்புடைய ஒருவர் தெரிவித்தார்.

'ப்ளாக் பில்லர்ஸ்' என்பவர்கள் இந்தியாவில் ஒருபோதும் இந்து தேசம் உருவாகமுடியாது என்றும் சமயசார்பற்ற ஜனநாயகமே பிரச்சனையின் ஆணி வேர் என்றும் நம்புபவர்கள்.

ஊடகங்கள் ,'ட்ரைய்ட்' மற்றும் 'ராய்தா' பற்றி எழுதத் தொடங்கியதிலிருந்து,'புல்லி பாய் 'மற்றும்' சுல்லி டீல்ஸ்' மீதான போலீஸ் கைதுகள் தொடங்கியதிலிருந்து, இந்த பிரிவுகளுடன் தொடர்புடைய பலரின் தொனிகள் மாறிவிட்டன அல்லது அவர்கள் தங்கள் கணக்குகளை மூடிவிட்டு தலைமறைவாகிவிட்டனர்.

வருங்கால வழி

சுல்லி டீல்ஸ்-புல்லி பாய் விவகாரங்களில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப், ரெடிட் மற்றும் டெலிகிராம் போன்ற பயன்பாடுகளில் வெறுப்பை பரப்புவது தொடர்கிறது.

போலீசார் விசாரணை நடத்திவருவதாகவும், விரைவில் ஒரு தீர்வு ஏற்படும் என்றும் இதுகுறித்து பிபிசியிடம் பேசிய மும்பை போலீஸ் சைபர் கிரைம் டிசிபி ரஷ்மி கரண்டிகர் கூறினார்.

வெளிநாட்டு சமூக ஊடக நிறுவனங்களிடம் இருந்து தேவையான ஒத்துழைப்பு இல்லாததே இதற்கு முக்கிய காரணம் என காவல்துறை தெரிவித்துள்ளது.

"நாங்கள் தகவல் கேட்டு சமூக ஊடக தளங்களுக்கு எழுதும் போது, தாங்கள் அமெரிக்க சட்டத்தை மட்டுமே பின்பற்றுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். குற்றம் நடந்ததா இல்லையா என்பதை நாங்கள் முடிவு செய்தால் மட்டுமே தகவல் கொடுப்போம் என்றும் பதில் வருகிறது." என மும்பை காவல்துறையின் சிறப்பு ஐஜி பிரஜேஷ் சிங் விளக்கமளித்தார்.

சுல்லி டீல்ஸ் மற்றும் புல்லி பாய் செயலி வழக்குகளில் கைது பற்றி கருத்து தெரிவித்த அவர், செயலிகளை எளிதாகக் கண்காணிக்க முடியும் என்று கூறுகிறார்.

" இந்தச் செயலியை உருவாக்கியது யார் என்பதை ஆப் ஸ்டோரிலிருந்து கண்டறியலாம். அதைத்தொடர்ந்து விசாரணையும் எளிதாகச் செய்யப்படுகிறது. ஆனால் ஒரு சித்தாந்தத்தைச் சேர்ந்தவர்கள் சமூக ஊடகங்களில் ஒரு குழுவாக வேலை செய்யும்போது அவர்களின் தகவல்கள் அந்த இயங்குதளத்திடம் மட்டுமே இருக்கும். ஆனால் அவர்களின் சாதனம், மாடல் எண், ஆப்பரேட்டிங் சிஸ்டம், இருப்பிடம், அவற்றின் உருவாக்கம் மற்றும் கணக்கு, அவர்கள் VPN அல்லது Tor ஐப் பயன்படுத்துகிறார்களா என்று இயங்குதளம் எங்களிடம் சொல்லமுடியும், ஆனால் அது விவரங்களைத் தருவதில்லை," என்று அவர் சுட்டிக்காட்டினார்.

லட்சக்கணக்கான கணக்குகளை கண்காணிக்கவும், ட்ராக் செய்யவும் சட்டம்-ஒழுங்கு பிரிவிடம் போதுமான வசதிகள் இல்லை. எனவே புகார் வந்தால் மட்டுமே காவல்துறையால் நடவடிக்கை எடுக்க முடிகிறது என்று பிரஜேஷ் சிங் கூறினார்.

சமூக ஊடகங்களில் உள்ள மற்ற பிரபலமான வலதுசாரி ஹேண்டில்கள் இந்த "ட்ரைய்ட்களை" முறியடிக்காமல் இருப்பதற்கும், அவர்களின் வெறுப்புப் பேச்சைக் கண்டிக்காமலும், மௌனமாக ஏற்றுக்கொள்வதற்கும், 'ட்ரைய்ட்' ன் அதிகரித்து வரும் பிரபலம் ஒரு முக்கிய காரணம் என்று பிபிசி உடனான உரையாடலில் பல ஹேண்டில்கள் கூறின.

சட்டம்
Getty Images
சட்டம்

ஆனால் கட்டுரையாளர் அபிஷேக் பானர்ஜி இதை ஏற்றுக்கொள்ளவில்லை. "எந்த ஒரு பெரிய ஹேண்டிலும், வன்முறையை ஆதரிப்பதையோ, 'ட்ரைய்ட்' ஐ ஊக்குவிப்பதையோ நான் பார்த்ததில்லை. யார் யாரால் ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்பது அவரவர் பார்வையை பொருத்தது. இந்தக் குற்றச்சாட்டு சரியானது அல்ல" என்றார் அவர்.

இத்தகைய குழுக்களை ஒழிக்க முடியாது. அவர்களை சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்த மட்டுமே முடியும் என்று அபிஷேக் குறிப்பிட்டார்.

யூடியூபர் ரித்தேஷ் ஜா, தன்னை பாதிக்கப்பட்டவர் என்று கூறிக்கொள்கிறார். பாகிஸ்தானிய சிறுமிகளின் லைவ் ஸ்ட்ரீமிங் படங்களின் கடுமையாக விமர்சனங்களுக்கு பிறகு தான் தனியாகிவிட்டதாக அவர் கூறுகிறார்.

மக்கள் தன்னிடம் இருந்து விலகி விட்டதாகவும், மீடியா நிறுவனத்தில் தனக்கு வேலை போய்விட்டதாகவும் ரித்தேஷ் கூறுகிறார்.

"இவற்றால் ஒரு பயனும் இல்லை என்பதை இப்போது நான் புரிந்துகொள்கிறேன். இதனால் அப்பாவி மக்களோ நானோ நன்மை அடையவில்லை. இந்த சூழலில் மறைமுக குறிக்கோளுடன் செயல்படுபவர்கள் மட்டுமே பயன் பெறுகின்றனர். நாங்கள் வெறும் பகடைக் காயாக பயன்படுத்தப்படுகிறோம்," என்றார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
How hatred against Muslim Women spreads in Social media?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X