அருணாச்சலில் சீனா படைக்குவிப்பு.. போர் பயிற்சியை தொடங்குகிறது இந்திய விமானப் படை - அதிரடி 'அப்டேட்'
இட்டாநகர்: அருணாச்சலப் பிரதேச எல்லையில் சீனா தனது ராணுவத் துருப்புகளை குவித்துள்ள நிலையில், இந்திய விமானப் படை அங்கு போர் பயிற்சியில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரு நாடுகளிடையே நிலவும் மோதல் போக்கால், அருணாச்சலப் பிரதேசத்தை ஒட்டிய வடகிழக்கு பிராந்தியங்களில் பெரும் போர் பதற்றம் நிலவுவதாக கூறப்படுகிறது.
இதனிடையே, எந்த நேரத்திலும் போர் மூளலாம் என்ற அச்சத்தால் அருணாச்சலப் பிரதேச மக்கள் சமையலுக்கு தேவையான அரிசி, பருப்பு, சர்க்கரை ஆகியவற்றை வாங்கி குவித்து வருகின்றனர்.

அத்துமீறிய சீனா
அருணாச்சலப் பிரதேசத்தில் சுமார் 17,000 அடி உயரத்தில் உள்ள தவாங் செக்டார் பகுதியில் கடந்த 9-ம் தேதி சீன ராணுவத்தினர் சுமார் 200 பேர் அத்துமீறி நுழைந்து அப்பகுதியை கைப்பற்ற முயற்சித்தனர். ஆனால், இந்திய ராணுவ வீரர்கள் 50 பேர் சேர்ந்து அவர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர்.

7,000 சீன வீரர்கள் குவிப்பு
இந்த சம்பவத்தை தொடர்ந்து, சீனா அடுத்தடுத்து தனது விஷம வேலைகளை காட்டி வருகிறது. அருணாச்சலப் பிரதேச எல்லைப் பகுதி முழுவதும் சிறிது சிறிதாக தனது ராணுவத் துருப்புகளை சீனா குவித்து வந்தது. இந்நிலையில், நேற்று மாலை நிலவரப்படி, சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சீனப் படையினர் அங்கு முகாமிட்டுள்ளதாக இந்திய உளவு அமைப்புகள் தெரிவித்தன.

அதிரடி போர் பயிற்சியில் இந்தியா
இதையடுத்து, சீனா திடீர் தாக்குதலில் ஈடுபடலாம் எனக் கருதியுள்ள இந்திய ராணுவம், அருணாச்சல் எல்லை முழுவதும் ராணுவ வீரர்களை குவித்துள்ளது. மேலும், அங்கு இரண்டு தினங்கள் போர் பயிற்சியில் ஈடுபட இந்திய விமானப் படையும் களம் இறங்கியுள்ளது. இதற்காக ரஃபேல், சுகோய், சினூக் ஆகிய போர் விமானங்கள் அங்கு நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இன்றும் நாளையும் இரண்டு நாட்கள் இந்தப் போர்ப் பயிற்சி நடைபெறும் என பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

போர் பதற்றத்தில் மக்கள்
அருணாச்சல் எல்லையில் நிலவி வரும் இந்த ராணுவ நடவடிக்கையால், அம்மாநிலம் மட்டுமின்றி வடகிழக்கு பிராந்தியமே போர் பதற்றத்தில் உறைந்துள்ளது. எந்த நேரத்திலும் போர் மூளலாம் என்ற வதந்திகளும் பரவி வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமையல் பொருட்கள், பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றை வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் வாங்கி குவித்து வருகின்றனர். இதனால் தற்போது அங்கு அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications