ஒட்டு மொத்த இந்தியாவும் உத்தரகண்ட் உடன் நிற்கிறது... பிரதமர் மோடி ட்வீட்
சாமோலி: உத்தரகண்ட் மாநிலத்தில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், ஒட்டு மொத்த இந்தியாவும் உத்தரகண்ட் உடன் துணை நிற்கும் என பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.

உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள சமோலி மாவட்டத்தில் பனிப்பாறை ஒன்று சரிந்து விழுந்ததால் அங்குள்ள அலக்நந்தா தவுளிகங்கா நதிகளில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் 100 முதல் 150 பேர் வரை பலியாகி இருக்கலாம் என அம்மாநிலத் தலைமைச் செயலாளர் ஓம் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மீட்புப் பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த ஐந்து குழுக்கள் உத்தரகண்ட் மாநிலத்திற்கு விரைந்துள்ளனர்.

மோடி ட்வீட்
இந்நிலையில், ஒட்டு மொத்த இந்தியாவும் உத்தரகண்ட் உடன் துணை நிற்கும் என பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். இது குறித்து மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறேன். ஒட்டு மொத்த இந்தியாவும் உத்தரகண்ட் உடன் துணை நிற்கும் .

பிரார்த்தனை
அங்குள்ள அனைத்து மக்களின் பாதுகாப்பிற்காக ஒட்டுமொத்த தேசமும் பிரார்த்தனை செய்கிறது. இது குறித்து மூத்த அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசை நடத்தி வருகிறேன். தேசிய பேரிடர் மீட்புப் படை, மீட்புப் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்த உடனடி தகவல்களைக் கேட்டு வருகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

பிரதமர் ஆலோசனை
அதேபோல பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில், "அசாமில் இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி உத்தரகண்ட் மாநிலத்தின் நிலைமையைக் குறித்து அம்மாநில முதல்வர் மற்றும் பிற உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் அதிகாரிகள் வழங்கி வருகின்றனர்" என்று பதிவிடப்பட்டுள்ளது.

எச்சரிக்கை
மீட்பு நடவடிக்கைகளுக்காக இந்தோ-திபெத்திய எல்லை காவல்துறையின் இரண்டு பிரிவுகளும் உத்தரகண்ட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளப் பெருக்கு காரணமாகச் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, மேலும், விஷ்ணுபிரயாக், ஜோஷிமத், கர்ன்பிரயாக், போன்ற பகுதிகளில் ஆற்றின் அருகே பொதுமக்கள் வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரிசிகேஷ் பகுதியில் படகு போக்குவரத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.