For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்ப்பது மன நலனுக்கு பயன் தருமா?

By BBC News தமிழ்
|
நாய்
Getty Images
நாய்

கொரோனா வைரஸால் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட மாதங்களில் பலர் மனநலன் சார்ந்த பிரச்னைகளுக்கு ஆளாகினர்.

தனிமை மற்றும் சமூக வாழ்க்கையில் ஏற்பட்ட திடீர் குறுக்கீடு போன்ற காரணங்களால் அது ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இந்நிலையில் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுடன் அதிக நேரம் செலவழித்தவர்கள் கொரோனா காலத்தில் தங்களது மனநலம் பாதிப்படையாமல் பாதுகாத்துக் கொண்டதாக பல்வேறு ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

'மேற்கத்திய நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் அவை' என கூறி அவற்றை நாம் புறந்தள்ளி விட முடியாது என்கிறார் சென்னையை சேர்ந்த உளவியல் நிபுணர் சித்ரா அரவிந்த்.

சித்ரா அரவிந்த்
BBC
சித்ரா அரவிந்த்

இது உலகளாவிய பிரச்னை என்பதால் அந்த முடிவுகள் இந்தியாவுக்கும் பொருந்தும் என்கிறார் அவர்.

முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட நாட்களில் தாம ஏற்கெனவே வளர்த்து வந்த இரண்டு நாட்டு நாய்களோடு சேர்த்து, தெருவில் உணவின்றி தவித்து வந்த இரண்டு நாய்களை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் நிஷா மாரிமுத்து.

சென்னையில் உள்ள தமது அடுக்குமாடி குடியிருப்பில் அவற்றை நிஷா வளர்த்து வருகிறார். கொரோனா பொதுமுடக்க காலத்தில் வேலையிழந்து தவித்து வந்ததாக அவர் கூறினார்.

நிஷா மாரிமுத்து
BBC
நிஷா மாரிமுத்து

"நான் வளர்த்து வந்த நாய்கள் என் துயர் துடைக்க உதவின. என்னை போல வேலையிழந்து தவித்த நண்பர்களில் பலர் கவலை, மன அழுத்தம், மனச் சோர்வு போன்ற மனநலம் சார்ந்த பிரச்னைகளில் சிக்கியிருந்தனர். அதற்கு மருத்துவ ஆலோசனை பெற கூட வழியில்லாமல் அவர்கள் அவதியுற்றனர்," என்ற நிஷா, செல்லப்பிராணிகள் தங்களுக்கு உதவியது எப்படி என்பதை விவரித்தார்.

"நாய்கள் வளர்க்கப்படும் வீட்டில் தனிமை என்பதை உணரவே முடியாது. எனது கணவரும் நானும் வேலையிழந்து வாழ்ந்த நாட்களில் அதிக கவலையில்லாமல் வாழ நாங்கள் வளர்த்த நாய்கள் மட்டுமே உதவின," என்று அவர் குறிப்பிட்டார்.

கணவன் மனைவிக்குள் சண்டை வராமல் இருக்க நாய்கள் உதவின. சண்டையிட நான் குரலை உயர்த்தும் போதெல்லாம் அவை என் அருகில் வந்து சண்டையிடாமல் தடுக்க முயற்சி செய்தன என்கிறார் அவர்.

நாய்களை நாள் தவறாமல் வெளியில் நடக்க அழைத்துச் செல்ல வேண்டும் என்பதால், அந்த பழக்கம் இவரது நடை பயிற்சி நிற்லாமல் தொடர உதவியிருக்கிறது. இந்த பழக்க, வழக்கம் தன்னுடைய வாழ்க்கை மேம்பட பெரிதும் உதவியதாக நிஷா கூறுகிறார்.

வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்த்தால் நரம்பியக் கடத்திகளான கார்ட்டிசால், டோபாமைன், ஆக்ஸிடோசின் போன்றவை சுரக்க அது உதவுவதாக ஆச்சரியம் அளிக்கும் முடிவுகள் வெளிவந்துள்ளன என்கிறார் உளவியல் நிபுணர் சித்ரா அரவிந்த்.

இதனால் எளிமையாக மன அழுத்தம் தடுக்கப்படுவதாகவும், இது பலருக்கு புது நம்பிக்கை அளித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்த்தல் என்றவுடன் நாய் வளர்ப்பு மட்டுமே மக்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருப்பதாகவும், பூனை, முயல், கினி பிக், ஹாம்ஸ்டர் மற்றும் பறவை வளர்ப்பு போன்றவையும் கூட மனநலம் காக்க உதவுவதாக சித்ரா அரவிந்த் கூறினார்.

நிஷா மாரிமுத்து
BBC
நிஷா மாரிமுத்து

குறிப்பாக ஆட்டிச நிலையாளர்கள் உள்ளிட்ட குழந்தைகளுக்கு மீன் வளர்ப்பு பெருமளவில் பயனளிப்பதாகவும், அவர்கள் மீன்களை கண்டு ரசிக்கும்போது அது அவர்களுக்கு மன அமைதியைத் தருவதாகவும் ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது என்றார்.

இந்த கொரோனா காலத்தில் முதியவர்கள், துணையை இழந்து தவிப்பவர்கள் போன்றோர் வாழ்க்கையின் நோக்கமாக, அவர்களின் மகிழ்ச்சிக்குக் காரணமாக செல்லப் பிராணிகள் வளர்த்தல் இருப்பதாகவும் அதை தன்னிடம் சிகிச்சைக்காக வரும் பலர் கூறி இருப்பதாகவும் உளவியல் நிபுணர் சித்ரா அரவிந்த் தெரிவித்தார்.

எனவே செல்லப் பிராணிகள் வளர்த்தல் என்பதை வெறும் பொழுதுபோக்கு என மட்டும் கருத முடியாது என்று குறிப்பிட்ட அவர், விலங்குகளை மனநல சிகிச்சைக்கு பயன்படுத்தும் கலாசாரம், சென்னை உள்ளிட்ட இந்திய பெரு நகரங்களில் பரவலாக பயன்பாட்டில் உள்ளது என்றும் கூறினார்.

அதே சமயம் முறையாக வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் மட்டுமே, மனிதர்களின் மனதுக்கும் உடலுக்கும் நன்மை செய்யும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள் என்றும் அறிவுறுத்துகிறார் சித்ரா அரவிந்த. நீங்கள் செல்லப்பிராணிகளை வளர்க்க விரும்பினால், அவற்றுடன் அதிக நேரம் செலவிடுவது மிகவும் நல்லது என்றும் அவர் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

BBC Tamil
English summary
Is it useful for stress relief if we have pet animals in our house.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X