For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விஸ்வரூபமெடுத்த பாஜக: ஒரே கட்சியாக இணையக் காத்திருக்கும் 'ஜனதா" கட்சிகள்!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய அரசியலில் மீண்டும் வலுவான சக்தியாக உருவெடுப்பதற்காக "ஜனதா" பெயரிலான 6 கட்சிகள் ஒரே கட்சியாக இணைய தீர்மானித்துள்ளன.. பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் வாக்குகள் பெருமளவு பாரதிய ஜனதா பக்கம் போய்க்கொண்டிருப்பதைத் தடுப்பதை பிரதான வியூகமாக வைத்து ஜனதா கட்சிகள் ஒரே கட்சியாக உருமாறுகிறது..

Janata Parivar: Can Mulayam and co survive long enough to stop Modi wave?

1975ஆம் ஆண்டு இந்திரா காந்தி அவசர நிலையை பிரகடனம் செய்த போது.. எதிர்க்கட்சிகள் பலவும் ஒன்றிணைந்து ஜனதா கட்சியைத் தோற்றுவித்தன. அப்போது காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கட்சிகள் ஏன் இன்றைய பாஜகவின் முந்தைய அமைப்பான பாரதிய ஜன சங்கமும் கூட இதில் அங்கம் வகித்தது. 1977 ஆம் ஆண்டு முதல் 1979ஆம் ஆண்டு வரை மொரார்ஜி தேசாய் மற்றும் சரண்சிங் ஆகியோரை அடுத்தடுத்து பிரதமராகக் கொண்டு மத்தியில் ஆட்சியையும் அமைத்துப் பார்த்தது ஜனதா கட்சி. ஆனால் கருத்து வேறுபாடுகள், தலைமைத்துவ போட்டியால் இந்த ஜனதா கலகலத்துப் போய் ஆட்சியை பறிகொடுத்தது..

அதன் பிறகு ஜனதா கட்சியில் அங்கம் வகித்த கட்சிகள் ஆளுக்கொரு பாதையில் பயணிக்கத் தொடங்கிவிட்டன. 1988ஆம் ஆண்டு வி.பி.சிங் ஒரு தலைவராக உருவெடுத்த காலத்தில் அவரது ஜன் மோர்ச்சா, காங்கிரஸ் (எஸ்) மற்றும் லோக்தள் ஆகிய கட்சிகள் ஜனதா தளமாக உருவெடுத்தது. இந்த ஜனதா தளம்தான் இன்றைய சமாஜ்வாடி, பிஜூ ஜனதா தளம், இந்திய தேசிய லோக்தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், லோக்ஜனசக்தி கட்சி என இன்றைய பல "ஜனதா தள" கட்சிகளுக்கு தாய் வீடு....

கால்நூற்றாண்டு காலமாக தனித்தனியே குடித்தனம் நடத்திய நிலையில் மீண்டும் ஒரே கட்சியாக இணைந்தாக வேண்டிய நெருக்கடியை இக்கட்சிகளுக்கு பாரதிய ஜனதா உருவாக்கிவிட்டது. லோக்சபா தேர்தலில் இத்தனை ஜனதா தளக் கட்சிகளும் செல்வாக்கு பெற்ற மாநிலங்கள் என்று சொல்லப்பட்ட இடங்களிலும் கூட பாரதிய ஜனதா வெற்றிக் கொடியை பறக்க விட பதைபதைத்துப் போயினர் இதன் தலைவர்கள்..

லோக்சபா தேர்தல் முடிந்த கையோடு பீகாரில் பரம எதிரிகளாக இருந்த லாலு பிரசாத் யாதவும் நிதீஷ்குமாரும் கை கோர்த்தனர். இதன் அடுத்த கட்டமாக உத்தரப்பிரதேசத்தில் முலாயம்சிங் யாதவையும் பகுஜன் சமாஜ் கட்சியையும் கூட்டணியில் ஒருங்கிணைக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் பின்னர் மதச்சார்பற்ற கட்சிகள் ஓரணியாக செயல்பட தீர்மானிக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ், திரிணாமுல், இடதுசாரிகள் தரப்பும் ஆதரவளித்தன.

இந்நிலையில்தான் டெல்லியில் நேற்று ஒன்று கூடிய 6 ஜனதா தள கட்சிகள் ஐக்கியமாகி ஒரே கட்சியாக இணைய முடிவு செய்துள்ளன. நேற்றைய கூட்டத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் லாலு பிரசாத் யாதவ், ஐக்கிய ஜனதா தளத்தின் சரத் யாதவ், நிதிஷ் குமார், மதச் சார்பற்ற ஜனதா தளத்தின் தேவே கவுடா, லோக்தளத்தின் துஷ்யந்த் சவுதாலா, சமாஜ்வாடி ஜனதாவின் கமல் மொரார்கா ஆகியோர் கலந்து கொண்டனர்.

லாலு, முலாயம், நிதிஷ் ஆகியோர் யாதவ சமுதாயத்தினர்.. தாங்கள் ஒன்றாக கைகோர்த்தால் கணிசமான அளவு யாதவர் வாக்கு வங்கிகளை அள்ள முடியும் அல்லது தக்க வைக்க முடியும் என்பது இவர்களின் கணக்கு. இதேபோல் இந்திய தேசிய லோக் தளம், ஹரியானாவின் ஜாட் சமூகத்தினரை பெரும்பான்மையாகக் கொண்டது. தேவே கவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கர்நாடகாவின் பெரும்பான்மை ஒக்கலிகா கவுடர்களை அதிகமாகக் கொண்டது.

இப்படி பிற்படுத்தப்பட்ட ஜாதியின் வாக்குகள் சிதறிப் போய் பாஜகவுக்கு வெற்றி ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே இந்த கட்சிகள் ஒரே கட்சியாக முடிவு செய்துள்ளன. அத்துடன் உயர்ஜாதியினர் கட்சி என்று பார்க்கப்பட்ட நிலையில் இருந்து மாறி பிற்படுத்தப்பட்ட மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய கட்சி என்பதை நரேந்திர மோடியை பிரதமராக்கி நிரூபித்துள்ளது பாஜக. இதனால் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குகள் சிதறிப் போய்விடக் கூடாது என்பது இவர்களின் வியூகம்.

நாடாளுமன்றத்தில் லோக்சபாவில் 15, ராஜ்யசபாவில் 30 எம்.பிக்கள் இந்த கட்சிகளுக்கு உள்ளனர். ஓரணியில் இணைந்து ஒரே கட்சியாவதன் மூலம் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளை இணைத்து மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க முடியும் என்பதும் ஜனதா தள கட்சிகளின் திட்டம்.

இதன் முதல் கட்டமாக வரும் 22-ந் தேதி நாடாளுமன்றம் முன்பாக இந்த கட்சிகள் இணைந்து தர்ணா போராட்டத்தை நடத்த உள்ளன. அதே சமயத்தில் அனைத்து ஜனதா தள கட்சிகளையும் இணைத்து ஒரே கட்சியாக்கும் பணிகளை முலாயம்சிங் மேற்கொள்ள இருக்கிறார்.

இதில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பவர் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் முன்னாள் பிரதமர் தேவே கவுடாதான். இந்த அணியின் மூத்தவரான தேவே கவுடாவுக்கு மரியாதை செய்யும் விவதமாக நேற்றைய ஆலோசனைக் கூட்டத்தில் நடுநாயகமாக நாற்காலி போடப்பட்டது. இதன் மூலம் இந்த கட்சியின் பிரதமர் வேட்பாளராக தேவே கவுடா முன்னிறுத்தப்பட வாய்ப்பிருக்கிறது. மீண்டும் பிரதமர் பதவியை ஏற்கமாட்டேன் என்றெல்லாம் சபதம் எடுக்காத தேவே கவுடாவுக்கு இந்த இணைப்பு மகிழ்ச்சியாகத்தானே இருக்க முடியும்..

English summary
Some fragments of the erstwhile Janata Parivar are merging once again to form a new political party. Though the name of the new party has not yet been announced, whether it would retain the Janata Dal name, or be called Samajwadi Janata Dal or something else is not known but what looks certain for now is that Mulayam Singh Yadav, the senior most 'socialist' would be the 'titular' leader - an intent to that effect was announced by JD(U) leader Nitish Kumar after a luncheon meeting at Samajawadi Party chief’s residence.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X