ஏன் மகளிர் மசோதா இன்னும் நிறைவேறவில்லை.. வெள்ளையனே வெளியேறு பவளவிழா உரையில் கனிமொழி கேள்வி

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: எதிர்காலம் குறித்த அச்சத்தில் இருந்து தலித்துகள், விளிம்புநிலை மக்கள் மற்றும் சிறுபான்மையினர் வெளியேறும் நாளிலேதான் உண்மையான சுதந்திரம் கிடைக்கும் என ராஜ்ய சபாவில் திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார்.

ராஜ்ய சபாவில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் பவளவிழா உரையில் கனிமொழி கூறியதாவது:

"தண்ணீர் விட்டோ வளர்த்தோம், இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம்" என்றார் பாரதியார். இந்திய விடுதலைப் போராட்டத்துக்காக தங்கள் இன்னுயிரை ஈந்த ஆடவரும் பெண்டிரும் செய்த தியாகங்களை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.

தமிழக போராளிகள்

தமிழக போராளிகள்

பூலித்தேவர், வேலு நாச்சியார், தீரன் சின்னமலை, கொடி காத்த குமரன், சுப்ரமணிய சிவா, வ.உ.சி, போல தமிழகத்திலிருந்து சுதந்திர வேள்விக்காக உயிரை நீத்தவர்கள் எண்ணிலடங்கார். சிப்பாய் கலகத்தில் வேலூரில் உயிரை இழந்தவர்கள் ஏராளம். இது போல பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் உயிரை இழந்துள்ளனர்.

பாஜக மீது அட்டாக்

பாஜக மீது அட்டாக்

வெள்ளையனே வெளியேறு போராட்டத்தையும், இந்திய சுதந்திரப் போராட்டத்தையும் நினைவு கூர்வதில் நாம் அனைவரும் பெருமையடைகிறோம். இந்தப் பட்டியலில் இருக்கும் பலர், இந்தி மொழி பேசியவர்கள் அல்ல. இந்துக்கள் அல்ல. அவர்கள் விரும்பியதை உண்டனர். அவர்கள் எந்த வகையினாலும் குறைந்த இந்தியர்களாகி விட்டார்களா? மற்ற எவரையாவது விட அவர்கள் குறைந்தவர்களாகி விட்டார்களா? இல்லை.

இந்தி பேசவில்லை என்றால்..

இந்தி பேசவில்லை என்றால்..

ஆனால் இன்று நான் இந்தி பேசவில்லையென்றால் குறைந்த இந்தியராகக் கருதப்படுகிறேன். சிலருக்குப் பிடிக்காத உணவை உண்டால் நான் குறைந்த இந்தியராகி விடுகிறேன். நான் கடவுள் மறுப்பாளராக இருந்தால் நான் குறைந்த இந்தியராகி விடுகிறேன். இப்படி ஒரு நிலைக்கு எதற்காக வந்தோம்? எப்படி வந்தோம்?

தொடரும் தீண்டாமைக் கொடுமை

தொடரும் தீண்டாமைக் கொடுமை

நான் எந்த அரசையும் தனிப்பட்ட முறையில் குறை சொல்லவில்லை. ஒரு கவிதையை குறிப்பிட விரும்புகிறேன். "எத்தனைப் பேர் இழுதென்ன. இன்னும் சேரிக்குள் வரவில்லையே தேர்?" இன்னமும் தீண்டாமை இருக்கிறது. தீண்டாமையை எதிர்த்துப் போராடி வருகிறோம். பல மாநிலங்களில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணக் கூட முடியாத நிலைதான் இருக்கிறது. இப்போது கூட நாட்டின் பல இடங்களில் ஆணவக் கொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. பெண்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்று பாருங்கள். இதற்காக நாம் அவமானப்பட வேண்டும்.

புதிய கல்விக் கொள்கை யாருக்கு லாபம்?

புதிய கல்விக் கொள்கை யாருக்கு லாபம்?

ஒவ்வொரு அரசும் புதிய கல்விக் கொள்கையை எடுத்து வருகின்றன. ஆனால் நமது பிள்ளைகள் பள்ளிக்கு மகிழ்ச்சியாகச் செல்கின்றனவா? நமது பிள்ளைகள் என்ன கற்கின்றன என்பது குறித்து நாம் உண்மையிலேயே அக்கறைப்படுகிறோமா?

இணைக்கப்படாத ஆறுகள்

இணைக்கப்படாத ஆறுகள்

விவசாயிகளின் நிலையை எண்ணிப் பாருங்கள். ஆறுகளை இன்னமும் இணைக்க முடியவில்லை. நதிநீர்ப் பங்கீட்டை மாநிலங்களுக்குள் செய்ய முடியவில்லை. இதையா சுதந்திரப் போராட்ட தியாகிகள் எதிர்பார்த்தார்கள்? இதையா நாம் எதிர்பார்த்தோம்? அவர்கள் நினைத்ததை நாம் எப்போது நிறைவேற்றப் போகிறோம்?

சுதந்திரம் எங்கே?

சுதந்திரம் எங்கே?

நமது நாட்டின் ஐம்பது சதவிகித மக்கள் மோசமாக நடத்தப்படுகையில் சுதந்திரத்தைப் பற்றி நாம் பெருமையாக பேச முடியாது. சமீபத்தில் சண்டிகரில் ஒரு பெண் துரத்தப்பட்ட சம்பவத்தை எடுத்துக் கொள்ளுங்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அந்தப் பெண் குறித்து கேள்வி எழுப்புகிறார்கள்.

அவமானப்பட வேண்டாமா?

அவமானப்பட வேண்டாமா?

பாலியல் வன்முறையோ, துன்புறுத்தலோ, ஆசிட் வீச்சு சம்பவமோ... எதுவாக இருந்தாலும் அந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்தான் கேள்விக்குள்ளாக்கப் படுகிறாள். இதற்காக நாம் அவமானப்பட வேண்டாமா?

மகளிர் இடஒதுக்கீடு மசோதா

மகளிர் இடஒதுக்கீடு மசோதா

இந்த நேரத்தில் ஒரு பெண் எதற்காக வெளியே செல்கிறாள் என்று கேள்வி எழுப்ப நாம் வெட்கப்பட வேண்டாமா? அந்தப் பெண்ணை பாதுகாப்பது நமது கடமையில்லையா? இத்தனை ஆண்டுகள் கடந்தும் இன்னமும் நம்மால் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவைக் கூட சட்டமாக்க முடியவில்லை. இதற்கான போராட்டங்களை நாம் அனைவருமே பார்த்துள்ளோம்.

சட்டங்களை இயற்ற உரிமை இருக்கிறதா?

சட்டங்களை இயற்ற உரிமை இருக்கிறதா?

பெண்களுக்கான உரியப் பிரதிநிதித்துவம் இல்லாமல் சட்டங்களை இயற்ற நமக்கு என்ன உரிமை இருக்கிறது. ஆனால் பெண்களின் கருத்து கேட்கப்படாமலேயே தொடர்ந்து சட்டங்கள் இயற்றப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

உண்மையான சுதந்திரம்

உண்மையான சுதந்திரம்

உண்மையான சிறை அச்சத்தினால் ஏற்படும் சிறை. அச்சத்திலிருந்து வெளிவருவதுதான் உண்மையான சுதந்திரம். நமது பெண்கள், தலித்துகள், விளிம்புநிலை மக்கள் மற்றும் சிறுபான்மையினர் ஆகியோர் எதிர்காலம் குறித்த அச்சத்தில் இருந்து என்று வெளியேறுகிறார்களோ, அன்றுதான் நமக்கு உண்மையான சுதந்திரம்" என்று கனிமொழி கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMK Rajya Sabha MP Kanimoli asked a question about Women reservation bill in her 75th anniversary of the Quit India Movement speech in Rajya Sabha.
Please Wait while comments are loading...