Exclusive: கர்நாடகாவில் நடைபெறப்போவது மதவாதம் vs மதச்சார்பின்மை நடுவேயான தேர்தல்: சித்தராமையா

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: மாநிலம் முழுக்க சுற்றி திரிந்து, தினமும் குறைந்தது 3 பொதுக்கூட்டங்கள், கட்சியின் அடிமட்ட நிர்வாகிகளுடனான சந்திப்புகள் என படு பிஸியாக உள்ளார் சித்தராமையா. இன்னும் சில மாதங்களில் தேர்தலை சந்திக்க உள்ள, கர்நாடக மாநிலத்தின் முதல்வர்.

இந்த பிஸியான நேரத்திற்கு நடுவேயும், சிறப்பு பேட்டியளிப்பதற்காக நமக்கு நேரம் ஒதுக்கினார், தென் இந்தியாவில் காங்கிரஸ் ஆளும் ஒரே மாநிலத்தின் முதல்வரான சித்தராமையா.

என்னதான் கடும் பணிச்சுமை இருந்தாலும் உற்சாகம் மட்டும் அவரிடம் குறையவில்லை. அதே உற்சாகத்தோடு 'ஒன்இந்தியாவிற்கு' அவர் அளித்த சிறப்பு பேட்டி:

பிளவுபடுத்தும் தேர்தல்

பிளவுபடுத்தும் தேர்தல்

கே: சமீப கால கர்நாடக வரலாற்றில் மக்களை பிரிவுபடுத்துவதை மையப்படுத்திய தேர்தலாக இப்போதைய சட்டசபை தேர்தல் அமைகிறதே?

சித்தராமையா: மக்களை பிளவுபடுத்த வேண்டும் என்பதே அவர்கள் (பாஜக) நோக்கம். எனவேதான் மத அடிப்படையிலான பிரச்சாரங்களை வலுப்படுத்துகிறார்கள். ஆனால், கர்நாடகாவில் இது சாத்தியப்படாது. கர்நாடகா மாறுபட்ட மாநிலம். இது உத்தரபிரதேசமோ, குஜராத்தோ, மத்திய பிரதேசமோ அல்ல. ஹிந்தி பேசும் மாநிலங்களில் இருந்து இது மாறுபட்டது.

பாஜகவுக்கு பதிலடி

பாஜகவுக்கு பதிலடி

கே: கடந்த சில மாதங்களாகவே, ஹிந்தி திணிப்பு, கன்னட பெருமை என தொடர்ச்சியாக பாஜகவை பின்னுக்கு தள்ளும் வியூகங்களை சரியாக செய்கிறீர்களே, எப்படி சாத்தியப்பட்டது?

சித்தராமையா: நாங்கள் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்துள்ளோம். எல்லா விஷயங்களிலும் எங்களுக்கு தெளிவு உள்ளது. எனவே என்னால் சரியான முடிவை எடுக்க முடிகிறது. மொழி, சமூக நீதி, மதசார்பின்மை ஆகியவற்றில் எங்களுக்கு தெளிவு உள்ளது. எனக்கு எந்த குழப்பமும் இல்லை. பாஜகவுக்கு எந்த உறுதியான கொள்கையும் இல்லாததால் அவர்கள் குழம்பியபடி உள்ளனர்.

ஹிந்துத்துவா கையிலெடுப்பா?

ஹிந்துத்துவா கையிலெடுப்பா?


கே: பாஜகவின் மதவாத பிரச்சாரங்களை சமாளிக்க, மிதவாத ஹிந்துத்துவாவை காங்கிரஸ் கையில் எடுப்பதாக விமர்சனங்கள் வருகின்றனவே, உங்கள் கருத்து என்ன?

சித்தராமையா: இல்லை. நாங்கள் செய்ய மாட்டோம். எனக்கு மிதவாத ஹிந்துத்துவாவிலும், தீவிர ஹிந்துத்துவாவிலும் நம்பிக்கை இல்லை. ஹிந்துத்துவா என்பது எந்த ரூபத்தில் வந்தாலும் அது ஹிந்துத்துவாதான். மனிதாபிமானம் இல்லாத மதம், மதமே கிடையாது. அது மதவாதம். இதைத்தான் பாஜக செய்கிறது.

மோடி vs சித்து?

மோடி vs சித்து?

கே: காங்கிரஸ் மேலிடம் செய்யாத அளவுக்கு மோடியை விமர்சனம் செய்கிறீர்கள். உங்கள் போட்டோ கட்அவுட்டுகள் கர்நாடகா முழுக்க வியாபித்துள்ளன. கட்சியைவிட பெரிய தலைவராக உருவாகிவிட்டதாக கருதலாமா?

சித்தராமையா: யாருமே கட்சியைவிட மேற்பட்டவர்கள் கிடையாது. கட்சியின் கொள்கைகளைத்தான் மக்களிடம் சொல்கிறேன். பொய் வாக்குறுதிகளை கொடுப்பதாலும், மக்களை மத அடிப்படையில் பிரிப்பதாலும், நான் சற்று ஆவேசத்தோடு பேசிவிடுகிறேன். மோடி மற்றும் சித்தராமையாவுக்கான யுத்தம் இது அல்ல. காங்கிரசுக்கும், பாஜகவுக்குமான போட்டி மட்டுமே. கர்நாடக தேர்தலில் மதத்தை பாஜக பெரிதாக முன்னிறுத்தி வருவதால், இந்த தேர்தலை மதவாதம் மற்றும் மதச்சார்பின்மை நடுவேயான தேர்தலாக எடுத்துக்கொள்ளலாம்.

பாஜகவுக்கு வேட்பாளரே இல்லைங்க

பாஜகவுக்கு வேட்பாளரே இல்லைங்க

கே: அப்படியானால் இந்த கணக்கில் மதசார்பற்ற ஜனதாதளம் இல்லையா?

சித்தராமையா: மதசார்பற்ற ஜனதாதளம் ஐந்தாறு மாவட்டங்களில் மட்டுமே வேரூன்றியுள்ளது. பாஜகவுக்கும் கூட அனைத்து மாவட்டங்களிலும் அடித்தளம் இல்லை. உதாரணத்திற்கு மைசூர் மாவட்டத்தில், கிருஷ்ணராஜா தொகுதியை தவிர்த்து வேறு தொகுதியில் நிறுத்த பாஜகவுக்கு, தக்க வேட்பாளரே கிடையாது. மண்டியா மாவட்டத்தில் வெற்றி பெற தகுதியான ஒரு வேட்பாளரும் பாஜகவுக்கு இல்லை. ஹாசன், ராமநகரம், பெங்களூர் ஊரகம், சிக்பள்ளாப்பூர் மற்றும் கோலார் போன்ற தென் கர்நாடகாவின் பல மாவட்டங்களில் பாஜக நிலை இதுதான். தென் கர்நாடகாவில் பாஜக வலுவிழந்து உள்ளது. ஆனால், காங்கிரசுக்கு அந்த நிலை இல்லை. பாஜக, மஜத எங்கெல்லாம் பலமாக உள்ளதோ, அங்கும்கூட காங்கிரசும் பலமானதாக உள்ளது.

பாஜகவின் அரசியல்

பாஜகவின் அரசியல்

கே: இந்துக்கள் வாக்குகள்தான் இந்த தேர்தலில் முக்கிய பங்கு வகிக்குமா, முஸ்லிம்கள் உங்களுக்கே வாக்களிப்பார்கள் என கருதுகிறீர்களா?

சித்தராமையா: முஸ்லிம்களை பாஜக நேரடியாகவே எதிர்க்கிறது. இதை அறிய வேண்டுமானால் எடியூரப்பா போன்ற பொய்யர்களிடம் கேட்காதீர்கள். ஆனந்த் ஹெக்டே (அரசியல் சாசனத்தை மாற்ற கோரியவர்) போன்றவர்களிடம் கேளுங்கள். அவர் முஸ்லிம்களை பற்றிய பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பதை சரியாக சொல்வார்.

பாதிக்கப்படுவது அப்பாவிகள்

பாதிக்கப்படுவது அப்பாவிகள்

கே: மதக்கலவரங்களில் பலியாவோர் தலித்துகளாகவும், பிற்படுத்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவர்களாகவுமே உள்ளதாக கூறியிருந்தீர்களே?

சித்தராமையா: மதக்கலவரங்களை, ஆர்எஸ்எஸ் மற்றும் பஜ்ரங்தள் தூண்டுகிறது. பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களிடம் மத வெறி ஊட்டப்படுகிறது. மதக்கலவரங்களில், ஆர்எஸ்எஸ் அல்லது பஜ்ரங்தள் தலைவர்களின் பிள்ளைகள் எங்காவது இறந்துள்ளார்களா?

ரிசல்ட் எப்படி?

ரிசல்ட் எப்படி?

கே: பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுகள், தொங்கு சட்டசபை அமையும் வாய்ப்புள்ளதாக கூறுகின்றனவே, உங்களுடைய கணிப்பு எப்படி உள்ளது?

சித்தராமையா: நாங்களும் தனிப்பட்ட முறையில் சர்வேக்களை நடத்தியுள்ளோம். எங்களுடைய சர்வேப்படி, காங்கிரஸ் அறுதி பெரும்பான்மை பெறும். தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பே இல்லை. இவ்வாறு சித்தராமையா, தனது சிறப்பு பேட்டியில் தெரிவித்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Amidst the tiring schedule of his Karnataka Navanirman Yatra (a monthlong statewide tour to promote his government), OneIndia caught up with a busy but enthused Siddaramaiah who believes that anti-incumbency is non-existent in Karnataka. From the assembly elections to polarisation to his new found interest in Hindutva, Siddaramaiah shares the reasons behind why he believes the Congress will retain power in the state.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற