For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உம்மன் சாண்டிக்கு ரூ 1.90 கோடி லஞ்சம் கொடுத்தேன்... சரிதா நாயர் அதிரடி புகார்

By Shankar
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு ரூ 1.90 கோடி கொடுத்ததாக நடிகை சரிதா நாயர் கூறியுள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

கேரளாவில் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு சூரிய மின்சக்தி தகடு பதித்து தருவதாக கூறி, சரிதா நாயர் மற்றும் அவரது கணவர் பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஏராளமானோரிடம் இருந்து கோடிக்கணக்கில் மோசடி செய்தனர். இந்த மோசடியில் முதல்வர் உம்மன்சாண்டி உள்பட அரசின் மேல்மட்ட தலைவர்களின் பெயர்களும் பலமாக அடிபட்டது.

இது குறித்த விசாரணைக்காக அமைக்கப்பட்ட கமிஷன் முன்பு முக்கிய குற்றவாளியான சரிதா நாயர் நேற்று வாக்குமூலம் அளித்தார். அப்போது அவர், ‘சோலார் பேனல்' அமைப்பது தொடர்பாக முதல்வர் உம்மன் சாண்டிக்கு ரூ.1.90 கோடியும், மின்துறை மந்திரி அரியாடன் முகமதுவுக்கு ரூ.40 லட்சமும் லஞ்சம் கொடுத்ததாக கூறியுள்ளார்.

Paid Rs 1.90 crore bribe to Chandy - Saritha Nair

முதல்வர் உம்மன் சாண்டியின் முன்னாள் உதவியாளர் ஜிக்குமோன், என்னிடம் ரூ.7 கோடி லஞ்சம் கேட்டார். முதல்வர் உம்மன் சாண்டிக்குத்தான் இந்த பணம் எனக்கூறிய அவர், இந்த பணத்தை உம்மன் சாண்டியின் அதிகாரபூர்வமற்ற உதவியாளர் தாமஸ் குருவில்லாவிடம் டெல்லியில் வழங்குமாறு கூறினார்.

இதைத்தொடர்ந்து டெல்லி விஞ்ஞான் பவனில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 27-ந் தேதி உம்மன் சாண்டியைச் சந்தித்தேன். டெல்லியில் நடந்த தேசிய வளர்ச்சிக்குழு கூட்டத்துக்கு வந்திருந்த அவர், 'என்னிடம் பணம் கொண்டு வந்திருக்கிறாயா?' என்று கேட்டார். அதற்கு நானும், கொண்டு வந்திருப்பதாகக் கூறினேன்.

உடனே அவர் குருவில்லாவை தொடர்பு கொள்ளுமாறு கூறினார். அதன்படி நானும் அவரை தொடர்புகொண்டேன். அப்போது அவர் சாந்தினி சவுக் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் வாகன நிறுத்தும் இடத்தில் காத்திருக்குமாறு கூறினார்.

அதன்படி நான், தீரஜ் என்பவருடன் ஒரு காரில் அங்கே சென்றேன். அங்கு குருவில்லா வந்தவுடன், அந்த காரில் வைத்து அவரிடம் ரூ.1.10 கோடியை கொடுத்தேன். அதன்பிறகு நான் கைது செய்யப்படுவதற்கு இரு வாரங்களுக்கு முன், திருவனந்தபுரம் அருகே உள்ள இடப்பழஞ்சியில் வைத்து ரூ.80 லட்சத்தை குருவில்லாவிடம் வழங்கினேன்.

பின்னர் எங்களது சோலார் திட்டத்தை தொடங்குவதற்காக மாநில மின்சார அமைச்சர் அரியாடன் முகமதுவை சந்திக்குமாறு உம்மன்சாண்டி என்னிடம் கூறினார். அதன்படி திருவனந்தபுரத்தில் உள்ள அரியாடனின் மன்மோகன் மாளிகைக்கு சென்றேன்.

அங்கே நீண்டநேரம் பேரம் பேசிய பின் மந்திரியின் உதவியாளர், என்னிடம் இருந்து ரூ.25 லட்சம் லஞ்சமாக பெற்றார். பின்னர் கோட்டயத்தில் நடந்த ஒரு கருத்தரங்கின் போதும், மந்திரியின் உதவியாளர் ரூ.15 லட்சம் பெற்றுக்கொண்டார்," என்றார் சரிதா நாயர்.

சரிதா நாயரின் இந்த புதிய தகவல்களால், சோலார் பேனல் ஊழல் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டு உள்ளதுடன், கேரள அரசியலிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

மறுப்பு

ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்துள்ள உம்மன் சாண்டி, இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்காகவே சரிதா நாயர் இத்தகைய குற்றச்சாட்டுகளை கூறியிருப்பதாக தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், ‘நிவாரண நிதிக்காக சரிதா வழங்கிய காசோலைகளே பணம் இல்லாமல் திரும்ப வந்தது. அப்படியிருக்க அவர் கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சமாக வழங்கினார் என்றால் யாராவது நம்புவார்களா?' என்று கேள்வி எழுப்பினார். மேலும் தங்களுக்கு லஞ்சம் தந்து என்ன ஆதாயத்தை அவர் பெற்றார்? என்பதையும் சரிதா கூற வேண்டும் என உம்மன்சாண்டி கூறினார்.

இதைப்போல, சரிதா நாயரின் இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என மந்திரி அரியாடன் முகமதுவும் மறுத்துள்ளார்.

English summary
Deposing before a judicial commission probing the ‘solar scam’, prime accused in the case Saritha S Nair Wednesday alleged that she had paid a bribe of Rs 1.90 crore to Kerala Chief Minister Oommen Chandy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X